இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் பள்ளிவாசல்களில் நடைபெற்ற ஜும்மா தொழுகையின் பின்னர் பள்ளிவாசல்கள் முன்பாக கூடிய நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினார்கள்.
மன்னார் ஆயருக்கு எதிராகவும் அங்கு கோசங்கள் எழுப்பப்பட்டதைக் காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி ,ஏறாவுர் மற்றும் காத்தான்குடி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களே ஏற்பாட்டாளர்களாக காணப்பட்டனர்.
காத்தான்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமை தாங்கினார்.
ஏறாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மன்னாரில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு சில இனவாத சக்திகள் தடையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மன்னார் சிவில் சமூகமும் ஆயரும் முஸ்லிம்கள் சுதந்திரமாக குடியேறி வாழும் சூழலை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வவுனியா நகரிலும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் நீதவானுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை கண்டித்து வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் நீதித்துறையினர் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால், நீதிமன்ற விசாரணைகள் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire