தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரும் செயற்பாட்டாளருமான திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்கள் திருகோணமலையில் காலமானார்.
திருகோணமலையைச் சேர்ந்த திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்கள் மிக இளம் வயதிலேயே அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
தமிழரசுக் கட்சியில் ஆரம்பித்த அவரது அரசியற் செயற்பாடுகள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய செயற்பாட்டாளராகவும் மேடைப்பேச்சாளராகவும் தொடர்ந்தது.
சிவகுமாரனின் தாயார் திருமதி அன்னலட்சுமி பொன்னுத்துரையை தலைவியாகவும் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தைச் செயலாளராகவும் கொண்டிருந்த தமிழ் மகளிர் பேரவையின் உபதலைவியாக பணியாற்றியவர்.
அண்மையில்; வெளியான புஸ்பராணியின் ஈழப்போராட்ட நினைவுக்குறிப்பான 'அகாலம்|| நூலில் திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
' திருகோணமலையைச் சேர்ந்த பிலோமினா லோறன்ஸ் அக்கா தமிழரசுக்கட்சியின் பாரம்பரியத்தில் வந்தவர்.அறவழிப்போராட்டங்களில் தீவிர பங்கேற்றவர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மகளிர் பேரவையில் இயங்கியவர். பின்னர் காந்தீயத்தில் இயங்கி சிறைவாழ்க்கையை அனுபவித்தார். திருகோணமலைக்குச் செல்லும் போராளி இளைஞர்களுக்கு பிலோமினா அக்காவின் வீடே தஞ்சமாக இருந்தது. காவல்துறைக்கு அஞ்சாது போராளி இளைஞர்களை தனது வீட்டில் வைத்து பாதுகாப்பவர். பிலோமினா அக்காவின் மகளே நான் முன்னர் குறிப்பிட்ட தமிழீழ விடுதலைக் கழகத்தின் ஜென்னி. கொஞ்சக் காலம் மகள் ஜென்னியுடன் பிரான்சில் தங்கியிருந்த பிலோமினா தற்போது இலங்கைக்கு திரும்பிவிட்டார். ஈழப்போராட்ட வரலாற்றில் பிலோமினா அக்காவின் பங்களிப்பு ஏராளம்||
1980 முதல் 1983 வரை திருகோணமலை காந்தீயத்தின் மேற்பார்வையாளராக திருமதி பிலோமினா லோறன்ஸ் பணியாற்றியவர்.
இவரது மருமகன் இரா. ஜெயச்சந்திரன் (பார்த்தன்) தமிழ் இளைஞர் பேரவையில் மிகத் தீவிரமாக செயற்பட்டு பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டபோது மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
புலம் பெயர்ந்து பிரான்சில் தனது குடும்பத்தவருடன் வாழ்ந்தபோதும் அவர் தன்னாலான அரசியல் சமூக செயற்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். இறுதியில் தனது சொந்த மண்ணான திருமலை மண்ணில் தனது காலத்தை கழித்துக்கொண்டிருந்த நிலையில் காலன் அவரை காவு கொண்டான்.
தொடர்புகளுக்கு
ஜெனி mail- jeyarajany@hotmail.fr
– பிரான்ஸ்
வீட்டு முகவரி
இல 23 கல்லூரி வீதி , திருகோணமலை
தொலைபேசி –
Aucun commentaire:
Enregistrer un commentaire