lundi 9 juillet 2012

இலங்கையில் 24 மணிநேரத்திற்கு 3 சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்


கொழும்பு, ஜூலை 9- இலங்கைக் காவல்துறையில் சிறுமிகள் பாலியல் வன்முறை குறித்த வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன.

எனவே இதுகுறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சிறுமிகளில் 80 சதவீதம் பேர் 16 வயதுக்குட்பட்டவர்கள்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் 1089 பேரும், 2011 ஆம் ஆண்டில் 1189 பேரும், 2012 இல் மே மாதம் வரை 557 பேரும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர கடந்த 2010 இல் 551 சிறுமிகளும் இந்த ஆண்டில் கடந்த மே மாதம் வரை 318 பேரும் கடத்தப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சீரழிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர் இல்லாமல் அனாதைகளான சிறுமிகள் மற்றும் கணவன்-மனைவி பிரிந்து சீரழிந்த குடும்பங்களை சேர்ந்த பெண் குழந்தைகள் இந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்களை காப்பாற்றுவதுபோல் நடித்து பாலியல் வன்முறை செய்து விடுகின்றனர். மொத்தத்தில் இலங்கையில் 24 மணி நேரத்துக்கு 2 அல்லது 3 சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்தத் தகவலை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல இயக்குநர் ஜயந்தா விக்ரம சிங்கே தெரிவித்துள்ளார்.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் மீது மிகவும் அன்புடனும், பாசத்துடனும் பழகவேண்டும். அதன்மூலம் இதுபோன்ற சமூக விரோதிகளிடம் இருந்து தங்களது மகள்களை காப்பாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இலங்கையின் புறநகர் மற்றும் குடிசை பகுதிகள் மற்றும் கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் வீட்டு வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். அப்போது அவர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்களிடம் விட்டு செல்வதால் இதுபோன்ற கொடுமைகள் நடக்கின்றன.

இலங்கையில் குழந்தைகள் மீதான செக்ஸ் குற்ற வழக்கில் ஈடுபடுவர்களுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இருந்தும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை குற்றம் குறைந்தபாடில்லை. எனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு மய்ய தலைவர் அனோமா திசநாயகே வலியுறுத்தியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire