jeudi 19 juillet 2012

இந்திய ஜனாதிபதி தேர்தல் இன்று- நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு


நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, இன்று நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பிரணாப் முகர்ஜிக்கும், சங்மாவுக்கும் இடையே, நேரடி போட்டி நிலவுவதால், விறு விறுப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுச் சீட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல், இன்று நடக்கிறது. ஐ.மு., கூட்டணி சார்பில், பிரணாப் முகர்ஜியும், பா.ஜ., ஆதரவுடன், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மாவும் போட்டியிடுகின்றனர். எம்.பி.,க்கள், டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகத்திலும், எம்.எல். ஏ.,க்கள், அந்தந்த மாநில தலைநகரங்களில் உள்ள தலைமைச் செயலகங்களிலும், ஓட்டளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப் பதிவு, காலை 10 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. சில மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள், தங்கள் மாநிலத்திலேயே ஓட்டளிக்க அனுமதி பெற்றுள்ளனர். இவர்கள், தங்கள் மாநிலத்திலேயே ஓட்டளிக்கலாம். ஓட்டுச் சீட்டு முறைப்படி தேர்தல் நடக்கிறது. டில்லியிலும், அனைத்து மாநில தலைநகரங்களிலும், ஏற்கனவே ஓட்டுப் பெட்டிகளும், ஓட்டுச் சீட்டுகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி, இன்று காலை ஓட்டுப் பதிவு துவங்கும்.சுதந்திரம்தேர்தலை நடத்துவதற்காக, அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, ஓட்டளிப்போரின் கை விரல்களில், அடையாள மை எதுவும் இடப்படாது. ஓட்டுச் சீட்டில், பிரணாப் முகர்ஜியின் பெயரும், சங்மாவின் பெயரும் இருக்கும். மக்கள் பிரதிநிதிகள், இவர்களில் யாருக்கு ஓட்டளிக்க விரும்புகின்றனரோ, அவர்களின் பெயருக்கு முன், 1 என்ற எண்ணை எழுதி, ஓட்டுப் பெட்டியில் போட வேண்டும். குறிப்பிட்ட வேட்பாளருக்கு தான், ஓட்டளிக்க வேண்டும் என, எந்த ஒரு அரசியல் கட்சியும், தங்களின் பிரதிநிதிகளை கட் டாயப்படுத்த முடியாது என்பதால், எம்.எல்.ஏ.,க்களும். எம்.பி.,க்களும், சுதந்திரமாக ஓட்டளிக்கலாம். ஓட்டுப் பதிவு முடிந்ததும், பெட்டிகள் சீலிடப்பட்டு, டில்லிக்கு அனுப்பப்படும். வரும், 22ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். விருந்து இதற்கிடையே, ஜனாதிபதி தேர்தலையொட்டி, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு, டில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில், காங்., தலைவர் சோனியா, நேற்று விருந்து அளித்தார். ஐ.மு., கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்கிரஸ், பிரணாபுக்கு ஆதரவு அளிப்பது குறித்த விஷயத்தில், கடைசி வரை இழுத்தடித்து, நேற்று முன்தினம் தான், ஆதரவை உறுதி செய்தது. இதையடுத்து, அந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கே.டி.சிங், சுகெந்து சேகர் ராய் ஆகியோர், இந்த விருந்தில் பங்கேற்றனர். ஜனாதிபதி தேர்தல் குறித்து, கடந்த முறை ஐ.மு., கூட்டணி சார்பில், நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தை, திரிணமுல் காங்., புறக்கணித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பார்லி., ஆகஸ்ட் 8ல் கூடுகிறது?ஜனாதிபதி தேர்தல் மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றை முடித்துக் கொண்ட சூட்டோடு சூடாக, மழைக்கால கூட்டத்தொடருக்காக பார்லிமென்ட் கூடவுள்ளது. ஜூலை 30ம் தேதி அன்று கூடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டத்தொடர், ஆகஸ்ட் 8ம் தேதியன்று கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பார்லிமென்ட் எப்போது கூட்டப்பட வேண்டுமென்பதை, பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு தான் முடிவு செய்ய வேண்டும். அவர் ஜனாதிபதி வேட்பாளராகி விட்டதால், அமைச்சரவை கூடிதான் முடிவு செய்யும். இருப்பினும், ஊழலுக்கு எதிராக ஆகஸ்ட் 25ம் தேதியன்று அன்னா ஹசாரே குழுவினர், டில்லியில் உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால், அந்த சமயத்தில் அந்த போராட்ட வீரியம் அதிகமாக இருக்கும். அது பிரச்னைகளை உண்டு பண்ணலாம் என்று கருதி, ஆகஸ்ட் 8ம் தேதியன்று கூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Aucun commentaire:

Enregistrer un commentaire