dimanche 6 septembre 2015

ரஷ்யாவுடன் நல்ல உறவில் இருந்து கொண்டு இருப்பதுதான் சிரியா செய்த ஒரே குற்றம்.

சோவியத் யூனியன் காலத்திலிருந்து அமெரிக்காவைத் தவிர்த்து ரஷ்யாவுடன் நல்ல உறவில் இருந்து கொண்டு இருப்பதுதான் சிரியா செய்த ஒரே குற்றம். மேலும் உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய விடுதலை அமைப்புக்களுக்கு தனது தார்மீக ஆதரவை வழங்கியதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டமைப்பு நாடுகளும் கொடுத்த தண்டனை இது. தற்போதைய சிரிய அதிபர் பசீர் இன் தந்தை அசாத் காலத்திலிருந்து மனிதாபிமான அடிப்படையில் போரினால் பாதிக்கப்படும் அகதிகளுக்கு சிரியாவில் முகாங்கள் அமைத்து தமது வாழ்வைத் தொடர அனுமதித்தது தான் இவர் செய்த குற்றம். சிறப்பாக பாலஸ்தீன மக்களுக்கு இவர் செய்த, செய்து வரும் அளப்பரிய மனித நேயச் செயற்பாட்டிற்கு இஸ்ரேலும், இஸ்ரேலை தமது செல்லப் பிள்ளையாக கொண்டிருக்கும் நாடுகளும் இணைந்து கொடுக்கும் பரிசுகள் இவை.

உள்நாட்டுக் கலவரம் ஒன்றை வலிந்து எற்படுத்துவதன் மூலமே சிரிய அரசை வீழ்த்தலாம், நாசப்படுத்தலாம் என்ற இவர்களின் செயற்பாடு இன்று ஐ.எஸ் வரை தமது கட்டுக்குள் அடங்காத மதத்தை முன்னிறுத்தி தீவிரவாதத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இன்று முடியும் நாளை முடியும் என்று காத்திருந்த சிரிய மக்கள் தாங்க முடியாத சூழலில் யுத்தம் அற்ற ஆனால் யுத்த்தை நடாத்திக் கொண்டிருக்கும் ஐரோபிய யூனியனின் நாடுகளுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர் தற்போது. போர் குறுகிய காலத்தில் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அமெரிக்க சார்பு அற்ற அயல் நாடுகளுக்கு அகதிகளாக முதலில் இடம் பெயரந்தனர் சிரிய மக்கள். இதில் சிரியாவுடன் தரைத் தொடர்புடைய அமெரிக் சார்பு மத்தி கிழக்கு நாடுகள் சிரிய அகதிகள் யாரையும் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டிய ஒன்றாகும்.
தரை மார்க்க இடம் பெயர்வுகள் நீண்டகால அகதி வாழ்வுக்கு ஒத்துவரவில்லை என்ற சூழலில் கடல் மார்க்க இடம் பெயர்வுகளுக்கு தம்மை ஆள்படுத்திக் கொண்டனர் இந்த அப்பாவி மக்கள். குடல் மார்க்கமாக ஒப்பீட்டளவில் அருகில் உள்ள கறீஸ் நாடடை அடைந்து பின்பு தரை மார்க்கமாக ஹங்கேரியூடாக ஜேர்மன் போன்ற வசதி படைத்த நாடுகளில் தஞ்சம் புகுதல் என்பதே இந்த சிரிய அகதிகளின் நோக்கமாக இருந்தது. கூடவே ஒரு பகுதியனர் சற்றுத் தொலைவில் இருக்கும் இத்தாலியிற்கு கடல் மார்க்கமாக செல்லவும் முயன்றனர்.
யுத்தம் நடைபெறும் துருக்கியூடாக செல்வதைத் தவிர்த்து கடல் மார்க்கமாக கிறீஸ் ஐ அடைந்து இதனூடாக ஏனைய ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செல்லுதல் என்பதே இந்த சிரிய அகதிகளின் நோக்கமாக இருக்கின்றது.

இவர்களை ஏற்றுக் கொள்ள அனேக ஐரோப்பிய யூனியன் மனிதாபிமானிகள் தயார் இல்லை.
தற்போது ஒன்றில் போரை நிறுத்தியே ஆகவேண்டும் அன்றேல் அகதிகளை நிறுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இழப்பதற்கு உயிரைத் தவிர ஏதும் அற்ற நிலையில் இடம் பெயரும் மக்களை தமது நாடுகளில் உயிரை இழக்காமல் வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்தும் எல்லை நிலையை நோக்கி ஐரோப்பிய யூனியன் தன்னை தள்ளிக் கொண்டு வந்து விட்டது. இந்த பச்சிளம் குழந்தையின் புகைப்படச் செய்தி உலகம் எங்கும் ஏற்படுதப் போகும் அதிர்வலைகள் இதனை ஏறப்படுத்திவிடுமானால் மனித குலம் இந்த குழந்தையின் மரணத்தை கொணடாடியே தீர வேண்டும்.

ஆனால் இந்த அகதிச் சிக்கலில் அமெரிக்கா தற்போது இல்லை. எனவே இந்த யுத்தங்களை(இதற்கு ஆகாயப் பிரச்சாரம் என்று பெயர் வேறு) தலமை தாங்கும் அமெரிக்கா தனக்கு இந்த அகதிகள் பிரச்சனை நேரடியாக இல்லாதவரைக்கும் தொடர்ந்து யுத்தங்களை நடாத்திக் கொண்டே இருக்கும். ஆனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிலை அவ்வாறு இல்லை எனவே யுத்தத்தை நிறுத்தும் ஒரு பொறி முறையை இவர்கள் கண்டாகவேண்டி சூழலுக்கு இன்று தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலமை மேலும் மேலும் வளர்ந்து வருகையில் ஐரோப்பி யூனியன் நர்டுகள் வேறு வழியின்றி யுத்தத்தை நிறுத்தும் ஒரு செயற்பாட்டில் இறங்கியே ஆகவேண்டியே வரும்.
வியட்நாம் போரின் போதும். சோமாலியா மீதான ஆக்கிரமிப்பின் போதும் அமெரிக்காவிற்கு அமெரிக்க மக்களாலேயே எற்பட்ட அழுத்தங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்தது போல் இன்றைய நிலையிலும் ஏற்பட்டால் ஒழிய சிரியாவில் மையம் கொண்ட மத்திய கிழக்கு யுத்தங்களை நிறுத்துதல் என்பது கடினமானதாகும். இதற்கான சூழல் ஒன்று உருவாகியுள்ளது போல் தோன்றுகின்றது. இதற்கு அமெரிக்க மக்களின் மனிதாபிமானப் பங்களிபு மிகவும் அவசியமானதாகும்
யுத்தங்கள் நிறுதப்படும் நிலை ஏற்படும் போது யுத்தங்களால் எற்பட்ட மன வடுக்களும், ரணங்களும், பௌதீக அழிவுகளும் தொடர்ந்து தாக்கங்களை ஏற்படுத்தியே வரும். வியட்நாம் போன்ற புரட்சிக்குத் தலமை தாங்கிய முற்போக்கு கட்சிகளின் ஒழுங்குபடுத்தல்கள் இந்த எண்ணை உலக நாடுகளில் பலமான நிலையில் இல்லாததினால் தொடரும் அவலங்களுக்கு மீண்டும் அந்தந்த நாடுகளின் அரசை மீண்டும் இந்த அமெரிக்காவும் இதன் அடிவருடிகளும் குறை கூற வாய்ப்புக்கள் எற்படுத்திவிடும். முழுமையாக இல்லாவிட்டாலும் யுத்தம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், ஈராக், லிபிய, எகித்து, துனீசியா போன்ற நாடுகளில் நடைபெறுவது இதுதான். இதற்கு மாறாக வறுமையான தென் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியக் கூட்டைமைப்பின் வலிந்த யுத்தங்கள், உள்ளுர் கலவரங்களில் இருந்து மீண்டு இதன் பின்பு முன்னொக்கி இன்று நடைபோடுவதற்கு அங்கிருந்த பலமான முற்போக்கு தலமைகளே காரணம் இதனை கியூபா, நிகரகுவா, உருகுவே. போலிவியா, வெனிசுலா போன்ற நாடுகளில் காண முடியும் இது போன்றதொரு நிலை இந்த மத்திய தரைக் கடல் நாடுகளில் எற்பட வேண்டும்.
இன்று ஏற்பட்டிருக்கும் தரையால் இணைக்கப்பட்ட இந்த நாடுகளுக்கு இடையே கடல் மார்க்கமாக நடைபெறும் மனித நகர்வு இந்த பிஞ்சு குழந்தையை தாயின் மடியில் உறங்குவதற்கு பதிலாக தண்ணீரின் மேல் நிரந்தரமாக உறங்கச் செய்த செயல் இந்த யுத்தத்தை நடாத்தும் அமெரிக்க கூட்டுப்படை கொடுத்த தண்டனையாகவே பார்க்க முடியும். ஒருபுறம் சிரியா அரசுக்கு எதிராக போராடும் ஆயுதக் குழுகள், இன்னொரு புறம் ஐஎஸ் எற்ற மதத்தை முன்னிறுத்தும் தீவிரவாதக் குழுகள். தமது மக்களை காப்பாற்ற முயலும் பசீர் அரசின் செயற்பாடுகள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த போரை தொடங்கி வைத்து இன்று கூட்டுப்படை செயற்பாடு என்று ஆகாய மார்க்கத் தாக்குதலை நேரடியாகச் செய்யும் அமெரிக்க கூட்டமைப்பு இராணுவங்கள் என்ற பல்முனைத் தாக்குதலுக்கு பலியானதே இந்த பச்சிளம் குழந்தை.
இவற்றிற்கு அப்பால் பாலஸ்தீனத்தின் நிரந்தர அகதிகளை சிரியாவில் குறிவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் எல்லாம் சேர்ந்து கடல் பரப்பில் மிதக்க விட்டிருக்கின்றது இந்த மூன்று வயது குழந்தையை. இந்த போரை நடாத்திக் கொண்டிருக்கும் யாவரும் இந்த குழந்தையின் கொலைக்கு கூட்டுப் பொறுப்பை ஏற்றேயாகவேண்டும்.
கடல் வாழ் மீன்களுக்கு இரக்கம் இருந்திருக்க வேண்டும். இப்பிரதேசத்தில் கடலில் அமிழ்ந்து காணாமல் போன ஆயிரம் ஆயிரம் உயிர்களுக்கு மத்தியில் இந்த சிறிய குழந்தையை கரை ஒதுங்க வைத்ததற்காக. ஒரு குழந்தை ஜீவனை சர்வதேச மனித குலத்தின் முன்வைத்து இந்தப் பிரச்சனைகளை இத்தோடு நிறுத்திக் கொள்வதற்கு முன்னெடுப்பாக இது அமைய வைக்கலாம் என்ற சிந்தித்து செயற்பட்டிருப்பார்களோ? இந்த மீன் இனங்கள் என்று எண்ணத் தோன்றும் மனதைப் பிழிய வைக்கு நிகழ்வு இது.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி குரங்கில் இருந்துதான் ஏற்பட்டது என்றும் ஒருசாரரரும், இன்னொரு சாரர் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி மீன்களில் இருந்து ஆரம்பித்தது என்றும் விஞ்ஞான பூர்வமாக சொல்லி வருகின்றனர். தனது பரிணாம வளர்சியினால் உருவான மனித இனத்தின் குழந்தையின் உடலத்தை இந்த மீன்கள் காப்பாற்றி இருக்குமோ? என்று எண்ணத் தோன்றும் பேதை நிலமைக்கு என்னை தள்ளியுள்ளது. இது விஞ்ஞானபூர்வமான எனது நம்பிக்கைக்கு முரணானது என்ற போதிலும் இந்தக் கொடூரங்கள் நிறுப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே இவ்வாறு என்னை எழுதத் தூண்டியிருக்கின்றது. இந்தக் குழந்தையின் புகைப்படத்தையும் எங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களையும் பார்த்த பின்பாவது இந்த யுத்தங்களை நடத்தும் கொடூரர்கள் தம்மை மாற்றியமைத்துக் கொள்ளமாட்டார்களா? என்ற ஆதங்கம் ஏற்படுவது இயல்பானதுதானே.
இன்றைய அவசரமாக செயற்பாடுகள் அகதிகளை ஏற்றுக் கொள்ளல் என்பதற்குள் மட்டுப்படுத்தி தப்பிக்கொள்ள மனிதகுலம் முயற்சி செய்யுமாயின் இன்னும் ஆயிரம் குழந்தைகள் இந்த கடல் பரப்பின் தம்மை இழந்து தரையில் முத்தமிடும் அவலத்தை ஏற்படுத்தியே தீரும். அப்போது நாம் வெட்கித் தலைகுனிந்து நிற்கவேண்டிவரும். அகதிகள் இல்லா நிலமை ஏற்படுத்தும் யுத்தம் அற்ற சூழலை உருவாக்குவதே உடனடித் தீர்வு ஆகும். எனவே யுத்தத்தை நிறுத்தி யுத்தத்தை தவிர்க்கும் முயற்சியில் நாம் எல்லோரும் இணைந்தே செயற்படுவோம். இதுவே இந்த மழலையை நேசிக்கும் யாவரும் செய்யக் கூடிய சரியான விடயம் ஆகும்
                                                                                              (சாகரன்)

Aucun commentaire:

Enregistrer un commentaire