jeudi 31 janvier 2013

கமல் உருக்கமான பேச்சு சென்னையில் செய்தியாளர்களை இன்று காலை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது...

எதிர்வரும் தினங்களில் நாடு கடத்தப்படுவர் பிரான்ஸில் இருக்கும் கடும்போக்கு முஸ்லிம் இமாம்களை


பிரான்ஸில் இருக்கும் கடும்போக்கு முஸ்லிம் இமாம்களை நாடுகடத்த இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மனிவல் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.பெண்களை மதிக்காத, எமது கலாசாரத்திற்கு எதிரான கருத்தை கொண்டிருக்கும், பிரான்ஸ¤டனான போராட்டத்திற்கு தயாராகும் அனைத்து வெளிநாட்டு மதப் பிரசாரகர்களும் எதிர்வரும் தினங்களில் நாடு கடத்தப்படுவர்” என பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பாவிலிருந்து தீவிரவாதத்தை முறியடிப்பது தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் நாடு கடத்தப்படவுள்ள வெளிநாட்டு முஸ்லிம் இமாம்கள் தொடர்பான தகவலை அவர் வெளியிடவில்லை. ஆனால் இவர்கள் சலபி குழுக்களைச் சேர்ந்தவர் என அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே பிரான்ஸிலிருந்து பல முஸ்லிம்களும் இதே குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விக்கிலீக்ஸ் மூலம் அதிரடித் தகவல்கள் வெளியாகி உள்ளன.சம்பந்தன் கைப்பொம்மை


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அமெரிக்காவின் கைப்பொம்மையாக இயங்கி வந்திருக்கின்றார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உள்வீட்டு இரகசியங்களை இவரை பயன்படுத்தி கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் அறிந்து வந்திருக்கின்றார்கள் என்றும் விக்கிலீக்ஸ் மூலம் அதிரடித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொழும்பில் அமெரிக்க தூதுவராக இருந்த ஜெப்ரி லன்ஸ் ரீட்டால் சம்பந்தருக்காக பரிந்து வெளியுறவு அமைச்சின் தலைமைக் காரியாலயத்துக்கு 2004 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவுக்கு செல்ல முதல் நாள் விசாவுக்கு விண்ணப்பித்து இருக்கின்றார் சம்பந்தன். குடும்ப அங்கத்தவர்களை சந்தித்தல், தமிழர் கலாசார விழாவில் பங்கெடுத்தல் ஆகியன இவரின் பயணத்துக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டு இருந்தன.
ஆயினும் இவருக்கான விசா நிராகரிக்கப்பட்டு உள்ளது என தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவால் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இவர் உள்ளார் என்று தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவு அமைச்சுத் தலைமைக் காரியாலயத்தால் அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் சம்பந்தருக்காக வக்காளத்து வாங்கி வெளியுறவுத் தலைமைக் காரியாலயத்துக்கு எழுதிய அவசர கடிதத்திலேயே சம்பந்தர் அமெரிக்காவுடன் நீண்ட கால தொடர்பு உடையவர், புலிகளுடன் மிக நெருக்கமான அரசியல் தொடர்புடைய தமிழ் தேசிய கூட்டமைப்பு, சம்பந்தன் ஆகியோரை பயன்படுத்தித்தான் புலிகளின் உள்வீட்டுச் சங்கதிகளை தூதரகம் அறிந்து வருகின்றது என்று குறிப்பிட்டு உள்ளார்.
புலிகள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு, எனவே நாம் புலிகளுடன் சந்திப்பு மேற்கொள்ள முடியாது, இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தர் ஆகியோரை பிரதானமாக வைத்துத்தான் சமாதான முன்னெடுப்பு விவகாரங்கள் உட்பட புலிகளின் நிலைப்பாடுகளை அறிய முடிகின்றது எனவே இவரை கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கி, இவருக்கு விசா வழங்க ஆவன செய்யுங்கள் இவரது பயணத்துக்கான வசதிகளை நாம் அப்போதுதான் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ”இவ்வாறு இக்கடிதத்தில் முக்கியமாக உள்ளது.

இலங்கையில் தடை அல் - குவைதா, தலிபான் இயக்கங்களுக்கு ஒத்தாசை வழங்க

அல் - குவைதா மற்றும் தலிபான் அடங்கலாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதை தடை செய்யும் திருத்தச் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையின் கடப்பாடு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தால் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, பயங்கரவாதத்துக்கு நிதி வழங்களை ஒழித்தல் (திருத்தம்) மீதான சமவாயம் என்னும் சட்டமூலம் விவாதிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தடை செய்துள்ள பயங்கரவாத நிறுவனங்களுடன் தொடர்புறும் நிதி நிறுவனங்களை தடை செய்யும் ஐ.நா கடப்பாட்டை அங்கீகரிப்பதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும். ஐ.நா இனங்கண்டுள்ள பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அத்தகவல்கள் குறிப்பிட்டன. ஐக்கிய நாடுகள் சபை இந்த பட்டியலை காலத்துக்கு காலம் மாற்றியமைக்கும். எமக்கு இந்த பட்டியலை ஐ.நா பின்னர் வழங்கும். இது பின்னர் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படும். அங்கத்துவ நாடுகள் யாவும் இவ்வாறு செய்யும் கடப்பாடு உடையன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலத்தின்படி, பயங்கரவாத நடவடிக்கைகள் அமைப்புகளுடன் செயல்படும் எவரும் குற்றவாளியாவர். அல் - குவைதாவின் நிதிகளை முடக்குவது தொடர்பாக ஐ.நா சட்டம் இலக்கம் 45,1968இன் கீழ் இலங்கை அரசாங்கம் சில விதிகளை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் பல வகை உபாயங்களையும் குறிப்பாக தலிபானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் இச்சட்டமூலம் குறிப்பிடுகின்றது.

வணக்கஸ்தலங்களிலுள்ள உண்டியல்களில் காசு போட்டாலும் கைது செய்யவேண்டிய நிலைமை ஏற்படலாம்

நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தங்களுக்கு பஞ்சமே இல்லை. பயங்கரவாதிகளுக்கு நிதித்திரட்டுவதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன. வணக்கஸ்தலங்களிலுள்ள உண்டியல்களில் காசு போட்டாலும் கைது செய்யவேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று ஐக்கிய சோசலிஸ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

'அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று  புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

அமெரிக்க பிரதிநிதிகளை எதிர்க்கட்சிகள் அழைக்கவில்லை அரசாங்கமே விஸாவிற்கான அனுமதியை கொடுத்தது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பாடம் நடத்தவேண்டும்.

இந்த அரசாங்கம் இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்குள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும்.

அவசரகாலச்சட்டம் அமுலில் இருந்தகாலத்தில் செய்யமுடியாததை சாதாரண சட்டம் அமுலில் இருக்கின்ற காலத்தில் செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. 

48 மணிநேரம் தடுத்துவைக்கலாம் என்பது யுத்தக்காலத்தைவிடவும் அபாயகரமானது. அரசியலமைப்பின் மீது எமக்கு நம்பிக்கையில்லை அதை கிழித்து வீசிவிட்டு புதிய அரசியல் சட்டம் ஒன்றை உருவாக்கவேண்டும். 

கோவில்கள், விஹாரைகள், பள்ளிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காசு போடுகின்றவர்களையும் இனிமேல் கைது செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றார்.

mercredi 30 janvier 2013

மூன்று வருடங்களாக சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டு வந்த குடியிருப்பு வீடுகள் எதற்காக?



முறிகண்டி சிங்கள மயமாகிறது - 10 ஆயிரம் வீடுகளில் படையினரின் குடும்பங்கள் ...வன்னியில் படையினரினால் அபகரிக்கப்பட்டுள்ள புதுமுறிகண்டி பிரதேசத்தில் போர் வீட்டத் திட்டம் என்ற பெயரில் இராணுவ குடியிருப்பு அமைக்கப்பட்டு சிங்களக் குடும்பங்கள் எதிர்வரும் 11ம் திகதி முதல் குடியேற்றப்படவுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவசர அவசரமாக அப்பகுதிகிளில் புதிய பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் கட்டப்பட்டு வருகின்றது என்றும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவந்துள்ளது. இது குறித்து உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பலனளிக்கவில்லை.
முறிகண்டிப் பகுதியில் தமது காணிகளை அபகரித்த பொழுது அதற்கொதிராக கடுமையாக மக்கள் போராடி வந்தனர். குறிப்பிட்ட பகுதியை கால் ஏக்கர்படி மக்களுக்கு பகரிந்தளித்துவிட்டு ஏனைய காணிகளிலும் அதற்குப் பின் பகுதியில் உள்ள காடுகளிலுமே இந்த இராணுவக்குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிப்புரைகளை விடுத்து வரும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வடமாகாணத்திலுள்ள ஏனைய மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகள் மற்றும் வைத்திய சாலைகளின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியை இதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறிகண்டிப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக  சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டு வந்த குடியிருப்பு வீடுகள் எதற்காக கட்டப்பட்டுவருகின்றதென்ற பரபரப்பு நிலவியே வந்துள்ளது. எனினும் அவை படையினரது குடும்பங்களினை போர் வீட்டுத் திட்டம் என்ற பெயரில் குடியமர்த்தவேயென மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டே வந்துள்ளது. இந்நிலையில் தற்போது அவை படையினரது குடும்பங்களுக்கேயென வன்னியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கிறார். 
குறிப்பிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் வரையான வீடுகள் அவைக்கான போக்குவரத்து மார்க்கங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுமிருந்தது. தற்போது அப்பிரதேசத்தை வெலி ஓயாவுடன் இணைக்கும் வகையில் புதிய பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. முறிகண்டி ஆலயப் பகுதியிலிருந்து கொக்காவில் வரையான காட்டுப் பகுதியில் இந்தக் குடியிருப்புக்கான போக்குவரத்திற்கான பெரும் வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாய செழுமை மிக்க இம்மண்னில் படையினர் பண்ணைகளை அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்ட மக்கள் அருகிலுள்ள பகுதிகளில் முகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்த மக்களை கடுமையாக இழுத்துத்தடித்து கடும் நடவடிக்கைகளை இராணுவத்தரப்பு மேற்கொண்டது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த மக்களை மீள்குடியேற்றுவதாக அழைத்து வந்து காணிகளை பறிக்க வற்புறுத்தியுடன் பலவந்தமாக மெனிக்பாம் முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
காலப்போக்கில் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதாக இராணுவத்தினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த மக்களின் காணிகளுடன் பல ஏக்கர் நிலப்பகுதியில் சிங்களக்குடியேற்றத்தை மேற்கொள்ளும் நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்தடன் உள்ளனர். தமது நிலப்பகுதியில் சிங்களக்குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.  
படையினரது குடும்பங்களுக்கான குடியேற்றதிட்டம் எனக் கூறப்பட்டு இச் சிங்களக்குடியேற்றத்தை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி மகிந்தராஜபக்சவும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் வருகை தரவுள்ளதாகவுள்ளகாவும் இராணுவத் தரப்புத் தகவல்;கள மூலம்; குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவந்துள்ளது

சிக்காகோவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 7 பேர் கொலை! ஒபாமா மீது மக்கள் சினம்.


வாய்த்தாக்கத்தில் ஈடுபட்டிருந்த இரு குழுக்களுக்கிடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக, அறிவிக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் சிக்காகோவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகங்களினால் தமது 4 பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளதாக, தாயொருவர் அலறியடித்துக்கொண்டு கூறினார். ஒபாமாவின் ஆயுதமேந்திய ஆட்சியினால் அமெரிக்காவில் சமூகத்தின் முழு செயற்பாடுகளும் சீர்குலைந்துள்ளதாக, அமெரிக்க மக்கள் தெரிவிக்கின்றனர். 

அமெரிக்க சமூகத்தில் ஒழுக்கவிழுமியங்களும், நீதி நியாயங்களும் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் தேவையையும், மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது 22 பேர் பலி


கஜகஸ்தான் நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பலியாகியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொக்க்ஷேடோ நகரில் இருந்து வட கஜகஸ்தான் பகுதிக்கு இன்ற காலை விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.வர்த்தக நகரமான அல்மாட்டி அருகே உள்ள கைசைல்டு என்ற கிராமத்தின் மீது பறந்துக் கொண்டிருந்த அந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த 22 பயணிகளும் இந்த விபத்தில் பலியாகி விட்டனர். மோசமான பனி மூட்டம் நிலவியதே இந்த விபத்துக்கு காரணம் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 15 பயணிகளும் 5 பணியாளர்களும் இரண்டு விமானிகளும் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

15 வயது சிறுமி கடத்தப்பட்டார் யாழில்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த சிறுமியை இன்று செவ்வாய்க்கிழமை மாலை கடத்தியுள்ளனர். செம்மணி பகுதியில் வைத்தே குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார். அருள்நேசன் ஆருனியா என்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இரு தீவிரவாத அமைப்புகளிடையே யுத்தம்! 110 பேர் பலி,


பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள திரா பகுதியில் இரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு இடையே தொடங்கிய மோதல்கள், இன்று 4-வது நாளாக தொடர்கிறது. இதில், இரு தரப்பை சேர்ந்த 110க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இன்று நடந்த மோதலில் மட்டும், 22 பேர் வரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். சுமார் 20 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள இந்தப் பகுதியை யார் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற போட்டியே, மோதல் தொடங்குவதற்கு காரணம்.
தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கம், முதலில் யுத்தத்தை ஆரம்பித்தது. திரா பகுதியில் அமைந்திருந்த அன்சார்-உல்-இஸ்லாம் என்ற இயக்கத்தின் முகாமை அதிரடியாக தாக்கிய தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தினர், அந்த முகாமில் இருந்த சிலரை சுட்டுக் கொன்றுவிட்டு, முகாமை கைப்பற்றினர். இதையடுத்து அன்சார்-உல்-இஸ்லாம் இயக்கத்தின் மற்றொரு முகாமில் இருந்தவர்கள், படையெடுத்து வந்து தாக்கினர்.
கடந்த வெள்ளிக் கிழமையில் இருந்து மாறிமாறி நடக்கும் இந்த இந்த மோதல்களை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்து உள்ளன.  இந்த மோதலில் மற்றொரு தீவிரவாத அமைப்பான லஸ்கர்-இ-இஸ்லாம் பங்கு பெறவில்லை என தெரிவித்துள்ளது.
முழுமையாக தீவிரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதிக்கு பாகிஸ்தான் ராணுவம் வருவதில்லை.

dimanche 27 janvier 2013

இலங்கையில் பிச்சை எடுப்பவர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை


கைக்குழந்தைகளை, சிறுவர், சிறுமியரை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்போரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  சிறுவர், பெண்கள் பாதுகாப்பு அதிகாரசபை இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  இவ்வாறு கைது செய்யப்படுபவர்களிடமிருந்து குழந்தைகளை பெற்று சிறுவர் பராமரிப்பு இல்லங்களிடம் ஒப்படைக்கப்படும். சிலர் குழந்தைகளை, சிறுவர், சிறுமியரை அழைத்துக்கொண்டு பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாக கொண்டுள்ளனர். சிலர் குழந்தைக்கு மயக்க மருந்தை ஊட்டி பரிதாபமாக காண்பித்து பிச்சை எடுக்கின்றனர்.
இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களைக் கருத்திற்கொண்டு பொலிஸ் மாஅதிபர் விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். குழந்தைகளை சுமந்தவாறோ, சிறுவர் சிறுமியரை அழைத்துக்கொண்டோ பிச்சை எடுப்பவர்களைக் கண்டால் 1929 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் கைக்குழந்தையை சுமந்தவாறோ சிறுவர், சிறுமியரை அழைத்துக்கொண்டோ பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அழிந்துவரும் ஓர் அடையாளம் !'இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்' மக்கட்தொகை கணக்கெடுப்பின் போது இவர்களும் சிங்கள மக்களாகவே கருதப்பட்டு கணக்கெடுக்கப்பட்டதாகவும் இம்மக்கள் கூறுகிறார்கள்.



இசையை ரசிக்கும் மக்கள்

கஃபீர் இன மக்கள் இசை மற்றும் நடனத்தை மிகவும் நேசிப்பவர்கள். அவர்களின் இசையின் அடிநாதத்தில் ஆப்பிரிக்க இசை வடிவத்தின் தாக்கம் இருந்தாலும், உள்ளூர் இசையின் கலப்பும் உள்ளது.இசையும் நடனமும் இவர்கள் வாழ்வில் ஒரு அங்கம்
அவர்களின் சமூக ஒன்றுகூடல்களில் இசையும் நடனமும் முக்கிய பங்கு வகிக்கிறன.
எனினும் இந்த மக்கள் எந்த அளவுக்கு இலங்கை சமூகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்கிற கேள்விகளும் இருக்கவே செய்கின்றன.
கஃபீர் இனப் பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன்
ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.
காலனிய நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்று, தாம் ஆட்சி செய்த பிற நாடுகளில் பணியமயர்த்தியது வரலாற்றில் ஒரு கசப்பான உண்மை.அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கும் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களின் வம்சமே இந்தக் கஃபீர்கள்.
இவர்கள் மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்ததாக தமது முன்னோர் கூறக் கேட்டதாகக் கூறினாலும், அது முற்றிலும் சரியா, அப்படியென்றால் மொசாம்பிக் நாட்டின் எப்பகுதியிலிருந்து வந்தார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் யாரிடமும் இல்லை.

சிங்களவர்களாகவே கணக்கெடுப்பு

கஃபீர் இனச் சிறுவர்கள்
இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மக்கள் இருக்கிறார்கள்.
வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின் சிரம்பியடியில் இவர்களில் பெரும்பான்மையானவர்களும் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் ஆங்காங்கே சிலரும் வாழ்கிறார்கள்.
இலங்கையின் தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆவணங்களில் கூட நாட்டில் மொத்தமாக எவ்வளவு கஃபீர் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கான புள்ளி விபரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.
மக்கட்தொகை கணக்கெடுப்பின் போது இவர்களும் சிங்கள மக்களாகவே கருதப்பட்டு கணக்கெடுக்கப்பட்டதாகவும் இம்மக்கள் கூறுகிறார்கள்.

245 பேர் பலி பிரசிலின் தென்பகுதி நகரான சன்டா மரியாவில்


பிரசிலின் தென்பகுதி நகரான சன்டா மரியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் குறைந்தபட்சம் 245 பேராவது இறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு ஒரு இசைக்குழு வாணவேடிக்கையை செய்ய ஆரம்பித்ததும், ஞாயிறன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் இந்த தீ ஆரம்பித்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளன.
அந்த இரவு விடுதிக்கு ஒரேயொரு வாயில் மாத்திரம் இருந்ததாகவும், ஆகவே ஆட்கள் தப்பியோட புறப்பட்டதும், அங்கு பதற்றம் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
அந்த தீயின் தீவிரம் காரணமாக அந்த கட்டிடம் இடிந்துவிழுந்துவிடும் என்று தீயணைப்பு படையினர் அச்சம் கொண்டிருந்தனர்.
அந்த நகரின் பிணக்கிடங்கில் அவ்வளவு சடலங்களையும் கொண்டு வைக்க முடியாத காரணத்தினால், உள்ளூர் உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் தற்காலிக பிணக்கிடங்கு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
சன்டா மரியா ஒரு பல்கலைக்கழக நகராகும். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாவர்.

பிரஞ்சுப் படைகள் முன்னகர்வு மாலியின் திம்புக்டு நகரை நோக்கி


மாலியில் பிரஞ்சு- தலைமையிலான படைகள் முக்கிய வடக்கு நகரான திம்புக்டுவை நோக்கி முன்னேறிவருகின்றன. இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான படைநடவடிக்கை அங்கு தீவிரமடைந்துவருகிறது.
நேற்று சனிக்கிழமை மாலி மற்றும் பிரஞ்சுப் படைகள் மற்றொரு முக்கிய நகரான காவோ-ஐ கைப்பற்றியிருந்தன.
மாலிக்கு மேலும் படைகளை அனுப்புவது பற்றி ஆபிரிக்க யூனியன் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த முன்னேற்றப் படைநகர்வு நடக்கிறது.
மாலியின் வடபிராந்தியத்தை இஸ்லாமிய ஆயுததாரிகள் கடந்த ஆண்டில் கைப்பற்றியிருந்தார்கள். ஆனால் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் பிரஞ்சுப் படைகள் படைநடவடிக்கையை ஆரம்பித்தது முதல் அவர்கள் குறித்தப் பிரதேசங்களைக் கைவிட்டு பின்வாங்கியுள்ளனர்.
ஆயுததாரிகள் பாலைவனங்களில் உள்ள மறைவிடங்களை நோக்கி தப்பிச் சென்றுவிட்டார்கள். பெரும்பாலான நகரங்கள் அரச ஆதரவு படைகளால் கைப்பற்றப்பட்ட பின்னர், ஆயுததாரிகளை தேடியழிப்பது அரச படைகளுக்கு சிரமமான காரியமாகவே இருக்கும் என்று தலைநகர் பமாகோவில் இருக்கின்ற  செய்தியாளர் கூறுகிறார்.

சம்பந்தன், மாவைக்கு துளியளவும் இல்லை தந்தை செல்வாவின் நாமத்தை உச்சரிக்கும் தகுதி



இனப் பிரச்சினை சிக்கலடைந்தமைக்கு எம்மவருள் ஒற்றுமையின்மையும் சில தலைவர்களின் எதேச்சதிகார போக்கும், சுயநல நோக்கமும் காரணங்களாகும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்துள்ளது.எத்தனையோ அவமானங்களை எதிர்நோக்கிய போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாறாக செயற்படும் நோக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு நான் கடிதம் ஒன்றையும் முன்னர் எழுதினேன்.
நான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். நான் அரசியலில் தூய்மையாக செயற்பட்டு ஜீ.ஜீ.பொன்னம்பலம் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சகபாடிகளாலும் நேசிக்கப்பட்டவன். தமிழர் விடுதலைக் கூட்டணியை பாதுகாக்க குறிப்பாக எமது சில தலைவர்களின் மறைவிற்குப் பின்னர் எவ்வாறு செயற்பட்டுள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 55 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் இருந்து உங்களுடனும் தற்போது இல்லாத சிரேஷ்ட தலைவர்களுடனும் இணைந்து பல கலந்துரையாடல்களில் பங்குபற்றியமையால் நீங்கள் தற்போது அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை காண பெருமளவு உதவியிருப்பேன். இந்த விடயத்தில் அனுபவம் உள்ளவர்களின் பங்களிப்பு மிகவும் உதவக் கூடியதே.
என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதில் சிரமம் இல்லை. ஏனெனில் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் நானும் ஒருவனாகத்தான் இருந்தேன். 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அத்தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பேரில் நான் 36.000 வாக்குகளை பெற்று ஒன்பது பேரில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அமெரிக்காவின் அழைப்பை பெற்றுக்கொண்டவேளை இந்த விடயத்திலேனும் என்னுடைய கருத்தையும் சித்தார்த்தன் அவர்களுடைய கருத்தையும் கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. நீங்கள் அங்கிருந்து திரும்பியதும் மூன்று வாரங்களாயும் உங்கள் குழுவுக்கும் அமெரிக்க அல்லது கனடிய குழுவுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதைக் கூறவேண்டுமென்று நீங்கள் அக்கறை கொள்ளவில்லை.
அரச தரப்பிடம் நீங்கள் என்ன கேட்டீர்கள் என்பது உங்கள் குழுவினருக்குத் தெரிந்திருக்கும். நான் அறிய விரும்புவது எதை யாருக்கு மறைக்கின்றீர்கள் என்பதே. உங்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்தவர்களுக்கு நியாயமான விளக்கத்தைக் கொடுத்து உங்கள் செயற்பாட்டை நியாயப்படுத்தினால் அன்றி அதை இரகசியமாக வைத்திருப்பது நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பலனளிக்காது என்றே நான் கருதுகின்றேன்.
உள்ளூரிலும் வெளியூர்களிலும் சகல சக்திகளும் ஒன்றிணைந்து என்னை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்ற கங்கணம்கட்டி நிற்கின்றார்கள் என்பது தெளிவாகிறது. சகல துறைகளிலும் உள்ள தமிழர்களின் ஆதரவை பெற்று என்னை ஓரங்கட்ட ஒரு திட்டமிட்ட பிரசாரம் ஏன் என்பதைத்தான் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனது நாட்டுக்கும், மக்களுக்கும் என்ன குற்றமிழைத்தேன்?எந்த சந்தர்ப்பத்திலும் எவருக்கும் நான் தீங்கிழைக்காது நாட்டுக்கும் மக்களுக்கும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அரை நூற்றாண்டுக்கு மேல் சேவையாற்றி வந்துள்ளேன்.
சில தலைவர்களின் சுயநல போக்கு மக்கள் எனது அறிவுரையை ஏற்க அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக மனிதனின் பொறுமைக்கப்பால் பெருமளவு அவதூறுகள், கீழ்த்தரமான முறையில் என்மீது அள்ளி வீசப்பட்டு ஓர் அரசியல்வாதியை அவமானப்படுத்த இந்த நாட்டில் பயன்படுத்தப்படுகின்ற துரோகி என்ற கெளரவ பட்டம் எனக்கு வழங்கப்பட்டது.
நீங்களோ அல்லது உங்கள் கட்சியை சேர்ந்த வேறெவரேனும் அரசியலில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல அனுபவங்களை பெற்ற நானும் முப்பது ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டு திம்பு பேச்சு வார்த்தைகள் போன்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட சித்தார்த்தன் அவர்களும் உங்களுடன் இணைந்து செயற்படுவதை பொருத்தமற்றதென கருதினால் தயவுசெய்து கூறுங்கள். நாம் எவரினதும் முதுகில் ஏறி சவாரி செய்வதோ அல்லது எம்மீது எவரும் சவாரி செய்வதையோ அனுமதிக்கப் போவதில்லை. நன்றியுடன் இக்கடிதத்தை பூர்த்தி செய்கின்றேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறினேன்.
நடந்து முடிந்த தேர்தல் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி தலைவரும், அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தன், அரசும் சர்வதேச சமூகமும் மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டுமென்றும் தவறின் தமிழ் மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாக கணிக்கப்படுவார்களென்றும் கூறியுள்ளார். இத்தகைய அறிக்கைகள் அவர்களின் மட்டத்தில் தேர்தல் காலங்களில் மட்டும் வெளிவருவது வழக்கம்.
அரசும் சர்வதேச சமூகமும் தமது தேர்தலை அங்கீகரிக்கமாட்டார்கள் என்ற பயம் சம்பந்தன் அவர்களுக்கு ஏற்பட்டதன் காரணமென்ன? இலங்கை தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65.119 மட்டுமே. இது யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 9 வீதம் ஆகும். திரு. சம்பந்தனுடைய கட்சி 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 90 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாக அவர் தம்பட்டம் அடித்தாலும் அத் தேர்தலில் அவரின் தமிழரசுக் கட்சி முற்றுமுழுதாக தனது நாணயத்தை இழந்துவிட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு புகழைத் தேடித் தந்தவர்களில் சம்பந்தன் அவர்களும் நானும் அடங்குவோம். இந்தப் பாரம்பரியத்தை இரா. சம்பந்தன் ஏன் கடைப்பிடிக்கவில்லை. தந்தை செல்வாவின் நாமத்தைகூட உச்சரிக்கும் தகுதி தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கோ செயலாளர் மாவை சோனாதிராசா அவர்களுக்கோ இல்லை.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகவே தொடர்ந்து செயற்பட்டனர். புலிகள் இயக்கத்தினரையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரையும், ரெலோ இயக்கத்தினர் இருவரையும் மற்றும் வன்னி, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிலரையும் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்த பின்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்காது கடந்த தேர்தல் வரையும் அதே பெயரில் செயற்பட்டனர்.
தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இயங்குகின்ற இலங்கை தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இதுவே காரணம். தமிழ் மக்களை தொடர்ந்தும் தவறாக வழிநடத்தாது இலங்கை தமிழரசுக் கட்சியினர் மிகக் கண்ணியமான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பென அழைப்பதை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையான வரலாறு அப்பாவி தமிழ் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு விட்டது தெரிந்தோ, அப்பாவித்தனமாகவோ, சில புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள் போன்றோரால் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பை 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென நம்பவைத்து தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர்.
உண்மையில் இந்த தேசிய கூட்டமைப்பானது 2001 ஆம் ஆண்டு எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை அநேகர் மறந்து விட்டனர். இப்போது ‘உண்மை’ வெளிப்பட்டு விட்டது. 06 ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் தமது கடமைகளை செய்யாத படியினால் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தை புகட்டவென காத்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இப்பாராளுமன்ற உறுப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுதும் மக்களுக்கு வேண்டிய கடமைகளை செய்ய தலைமையின் அனுசரணையின்மையால் பெருமளவு உறவினர்களையும், பல கோடி பெறுமதிமிக்க சொத்துக்களையும் இழக்க நேர்ந்தது என்பதை உணர்கின்றனர்.
செல்வாக்குமிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வழி காட்டியவர்களே இப் பேரழிவுகளுக்கும், உயிர்களின் இழப்புக்களுக்கும் பொறுப்பாளியாவார்கள். இழந்த உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நட்டஈட்டை பெற்றுத்தருவதில் தவறிவிட்டனர்.
அப்பாவி மக்களை புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தக்கூடாதெனவும் அவர்களை விடுவிக்கும்படியும் சர்வதேசமே வேண்டிநின்ற போதும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்கள்மீது மிக மிக அக்கறை காட்ட வேண்டிய இவர்கள் மெளனம் சாதித்தனர். அன்று பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு புது உறுப்பினர்தான் அதை செய்ததாக உண்மைக்குப் புறம்பான ஒரு புதுக்கதை கூறுகிறார். இந்தப் பாவத்தில் எனக்கு பங்கில்லை.
ஆறு ஆண்டுகள் வன்னியில் இடம்பெற்ற அத்தனை மரணங்கள், யுத்தத்துக்கு ஆட்சேர்த்தல், பிள்ளைகளை பறிகொடுத்த அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் போன்ற அனைத்துக்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தன் அவர்கள் தமிழரசுக் கட்சி தலைவராகவோ, அன்றேல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்தும் வட கிழக்கு மாகாண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தன்மையை இழந்துவிட்டார்.
கடைசி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும்படி தவறாக வழிகாட்டியவர்கள் தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவார்களா? சம்பந்தன் அவர்கள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பை சில ஆசனங்களை வெற்றிபெற வைத்தமைக்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் இவர்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்தில் 65.119 வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
சம்பந்தன் அவர்கள் கூறியதுபோல் தாம் சரத் பொன்சேகாவிற்கு பெற்றுக்கொடுத்த 113.873 வாக்குகளோடு ஒப்பிடுகையில் சில உண்மைகள் தெரியவருகின்றன. கடும் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பொறுப்பற்ற முறையில் பிரசாரம் செய்தவர்கள் நடந்துகொண்ட முறையே. புத்திஜீவிகள் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும், சுதந்திர ஊடகவியலாளர்கள் எனவும் கூறிக் கொண்டவர்கள் சில ஊடகவியலாளர்களுடன் இணைந்து யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் திரைமறைவில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தாது மறைந்துவிட்டனர்.
புலிகளின் மரணங்கள் இறுதிக்கட்டப் போரின் போதும் சிறுவர்களைப் போராளிகளாக பலவந்தமாக சேர்க்கப்பட்டமையையும் முற்றுமுழுதாக மக்களுக்கு மறைத்து விட்டனர். முல்லைத்தீவில் குடியிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு இவ்விடயங்கள் கொண்டுவரப்பட்ட போதும் யுத்த காலத்தில் இவ்வாறான இழப்புக்கள் தவிர்க்க முடியாததென்று கூறியுள்ளார். இறுதியாக வன்னியில் அவர் நீர் இறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்கினார் என அறியப்படுகிறது.

இந்தியாவின் 64வது குடியரசு தினம் யாழில்


இந்தியாவின் 64வது குடியரசு தினம் இன்று (26) யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.  யாழ். இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தலைவரின் உரையினை நிகழ்த்தினார்.  இந்திய இராணுவ அணிவகுப்புடன் நடைபெற்ற இந்த குடியரசு தினத்தில் இந்திய வம்சாவழி குடிமக்கள் கலந்து கொண்டனர். 
இந்திய குடிமக்கள் பலர் கலந்து கொண்டதுடன் இந்திய வர்த்தகப் பெருமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவின் 64வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26) மாலை தனியார் விருந்தினர் விடுதியில் இந்திய கலாச்சார நிகழ்வுகளும் நடனங்கள் நடைபெறவுள்ளது

samedi 26 janvier 2013

தெரிவுக்குழுவில் இணைந்து தங்கள் விவகாரத்தைப் பேசவேண்டும், 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப்பகிர்வே சாத்தியமானது,


தமிழ்த் தரப்பினர் சர்வகட்சி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து தங்கள் விவகாரத்தைப் பேசவேண்டும், 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப்பகிர்வே சாத்தியமானது, அதனடிப்படையில் தீர்வைக்காண துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது.
இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்திற்காக புதுடெல்லி சென்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது குறித்து சர்வகட்சி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் வடிவமைத்திருக்கிறது, அதில் இணைந்து பிரச்சினைக்குத் தீர்வுகாண தமிழ்த்தரப்பினர் வரவேண்டுமென ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டதை அடுத்து, கருத்துத் தெரிவித்த சல்மான் குர்ஷித், 13வது திருத்தத்தைக் கட்டியெழுப்பு வதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியுமென நாங்கள் கருதுகிறோம், இதுவே தேசிய நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியா வலியுறுத்தும் இந்தத் திட்டத்தை விட மேலான வேறு எந்தத் திட்டத்தையும் எந்தவொரு சர்வதேச நாடும் சொல்லப் போவதில்லை. இந்தயதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை மறைத்து வேறு கற்பனைகளில் திளைக்க விடுவதன் மூலம் சுயலாப அரசியலையும், வேறு வியாபாரங்களையும் செய்துகொண்டிருப்பவர்களை இனங்காண வேண்டும்.
இந்தியாவும் ஏனைய சர்வதேசமும் திரும்பத் திரும்பச் சொல்லிவருகிற, 13வது திருத்தத்தின் அடிப்படையில் சர்வ கட்சித் தெரிவுக்குழுவில் சென்று பேசி சமரசமான ஒரு அதிகாரப் பகிர்வுக்கு வாருங்கள் என்கிற வலியுறுத்தலை காதிலேயே கேளாத மாதிரி, தீர்வை எடுத்துத்தர சர்வதேசம் வரும் என்று தமிழ்மக்களின் காதில் தொடர்ந்து பூ சுற்றிக் கொண்டிருக்கிறவர்கள், இப்போதாவது மக்களுக்கு நேர்மையாகப் பதில் சொல்ல வேண்டாமா?
எந்தச் சர்வதேசம் எந்தத் தீர்வை எடுத்துத்தர இங்கு வரவிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டாமா? மந்திரத்தில் மாங்காய் விழும் என்று சொல்கிறவர்களைப் பார்த்து, எந்த மாங்காய் எங்கே இருந்து எப்படி எப்போது விழப்போகிறது என்றாவது நாம் கேட்க வேண்டாமா? எதையும் கேளாமல் வெட்டவெளியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்போமானால், எங்களை அந்தச் சர்வதேசம் கூட எப்படி நினைத்துக் கொள்ளும்?
நடைமுறையில் சாத்தியப்படக் கூடியதை சிந்தித்து, சாத்தியப்படக் கூடியவற்றைப் பேசி, சாத்தியமானதை எடுத்துக் கொண்டு முன்னகரும் விவேகத்தை நாம் காண்பிக்கவே மாட்டோமா? நம் விருப்பங்கள் ஆகாயமளவுக்கு இருக்கலாம். அதையெல்லாம் அள்ளியெடுத்து விடலாம் என்று காட்டிக் காட்டி வீரமும் பெருமையும் பேசி, மக்களை சேற்றிலும் முட்களிலும் நடக்க விடுவது ஏமாற்றும் வஞ்சனையுமல்லவா!
மற்றவர்கள், மற்ற சமூகத்து மக்கள் நினைப்பது பற்றியெல்லாம் நமக்குக் கவலையில்லை. நாம் நினைப்பதைத் தரவேண்டும்; அல்லாமல் வேறெதையும் பேசமாட்டோம் என்று அடம் பிடிப்பது, ஒருவகையில், நிலவைக்கையில் பிடித்துத் தரக்கேட்கும் குழந்தைத்தனமல்லவா! அவர்கள் இறங்கி வராமல், நாங்கள் எதற்கு இறங்கிப் போக வேண்டும் என்று ரோசத்தைக் காட்டிக்கொண்டிருப்பது, கஷ்டப்படுகிற மக்களைக் கவனத்திலெடுக்காத, வசதிபடைத்தவர்களின் வறட்டு வீம்பாகத்தானிருக்க முடியும்.

வெள்ளம். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் மூழ்கின வீடுகளுக்குள் நீர் புகுந்தது; மக்கள், நிர்க்கதி! போக்குவரத்து ஸ்தம்பிதம்!



அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் புதன் இரவு முதல் பெய்து வரும் அடைமழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேற்படி இரு மாவட்டங்களும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம் அறுவடைக்குத் தயாராகவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.
அம்பாறை மாவட்டம்
இம்மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, இறக்காமம், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தாழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் பல இடங்களில் இடம் பெயர்ந்துள்ளதாகவும் இன்னும் சில பிரதேசங்களில் மக்கள் இடம்பெயரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரவு வேளைகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.அதிகமான இடங்களில் உள்ளக வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்போதிகளினூடாக நீர் பெருக்கெடுத்துச் செல்வதனால் சில இடங்களில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. வடிகான்களில் நீர் நிரம்பிக் காணப்படுவதுடன் பல இடங்களில் நீர் வடிந்தோட முடியாமல் வடிகான்கள் காணப்படுகின்றன.
நெல் வயல்கள் யாவும் நீரில் மூழ்கியுள்ளதுடன் அறுவடைக்குத் தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதுடன் அவற்றின் வான் கதவுகள் திறக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் நீர்ப்பாசனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததனால் மீனவர் குடும் பங்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அன்றாட கூலித் தொழிலாளர்களும் கால்நடை பண்ணையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது தடவையாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மனியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பில் 229.2 மில்லி மீற்றர் மழையும் அம்பாறையில் 307.3 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியுள்ளது. மழை வெள்ளம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதி வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த வீதியில் பிள்ளையாரடி சித்தாண்டி ஆகிய இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மண்டூர் – வெல்லாவெளி வீதி, மண்டூர் – றாணமடு வீதி, மண்டூர் – வீரமுனை வீதி, மண்டூர் – கல்முனை வீதி, பட்டிருப்பு – பாலையடி வட்டை வீதி, பாலையடி வட்டை – சின்னவத்தை வீதி, மாவடி கடை வீதி, மயிலவட்ட வான் வீதி, மண்டூர் – சவளக்கடை வீதி என்பனவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மண்டூர் – கல்முனை, மண்டூர் – களுவாஞ்சிகுடி, களுவாஞ்சிகுடி பாலையடி வட்டை ஆகிய பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பட்டிருப்பு – குறுமன்வெளி வீதியில் எருவில் பகுதியில் வெள்ளம் பாய்கிறது.
வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேதத்துச்சேனை கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வேதத்துச்சேனை பிரதான வீதியில் வெள்ளம் பாய்கிறது. வேதத்துச்சேனை மக்கள் அங்குள்ள விகாரைத்திடலில் பாதுகாப்பாக தங்கியுள்ளனர். அவர்களுக்கு படகுகளில் சென்று சமைத்த உணவு வழங்கப்படுகின்றது. பட்டாபுரம் எருவில் மனமூர் நாகமுனை பழந்தோட்டம் இருதயபுரம் ஆரையம்பதி – செல்வநகர், மயலம்பாவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, கிரான், பலாச்சோலை முதலிய பல கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
பராக்கிரம சமுத்திரம் மின்னேரி கொடுல்ல ஆகிய பாரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால் அவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.உன்னிச்சை உறுகாமம் நவகிரி புழுகு நாவி கடுக்காமுனை ஆகிய குளங்களும் நிரம்பி வழிவதால் மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாவிக்கரையோரக் கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. குறிப்பாக வெல்லாவெளிப் பகுதி வெள்ளத்தில் அமிழ்ந்துள்ளது. வெல்லாவெளிப் பிரிவிலுள்ள வேற்றுச்சேனைக் கிராமம் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு 112 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். நேற்று பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்போடு வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் கே. வில்வரெட்ணம் உணவுப் பொருட்களை விசேட படகுகளில் கொண்டு சென்றார்.
காலையில் பாண்கள் கொண்டு செல்லப்பட்டன. பிரதேச சபைத் தவிசாளர் எஸ். ஸ்ரீதரன் மற்றும் உறுப்பினர்களும் படகுகளில் அங்கு சென்றனர். த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர், பி. அரியநேத்திரன் அமைச்சர் தயாரத்னாவின் இணைப்பாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் அங்கு சென்றனர்.
வள்ளியம்மை மரணம்
இதேவேளை, வெல்லாவெளியைச் சேர்ந்த மாலையர் கட்டு வள்ளியம்மை (வயது 49) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இன்னும் அவரது சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை. நவகிரி ஆற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருகிறது.பயணிகள் வான் நீரில் சிக்கியது
மண்டூர் வெல்லாவெளி பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை அந்த வீதியால் வந்த பயணிகள் வான் ஒன்று கறுத்தப்பாலமருகே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. வானில் பயணித்த 24 பேரும் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டனர். எனினும் வான் இந்த இடத்திலே வெள்ளத்துள் கிடக்கிறது. அதனை வெள்ளம் மேலும் இழுத்துச் செல்லாமல் தடுப்பதற்காக கயிறொன்றினால் மரத்தில் கட்டப்பட்டுள்ளது.
பொத்துவில் பகுதியில்
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25.01.2013) காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலத்துக்குள் 70.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.தொடர்ந்து பெய்த கனத்த மழையினால் சம்மாந்துறை மாவடிப்பள்ளி தாம்போதிக்கு மேலால் 3 அடிக்கு மேல் வெள்ளம் பாய்வதால் பஸ் போக்குவரத்து சேவை கல்முனையிலிருந்து அம்பாறைக்கு இடம்பெறவில்லை என கல்முனை பஸ் டிப்போவினர் தெரிவித்தனர். தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், இறக்காமம், நாவிதன்வெளி உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் அறுவடைக்கு தயாராகவிருந்த நெல் வயல்கள், தற்போது கதிர்பறிந்து முடிந்துள்ள நெல் வயல்கள் எல்லாம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தாழ் நிலங்களில் உள்ள குடியிருப்பாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாண்டிருப்பில்
செல்லப்பர் தோட்டம், சவக்காலை வீதி, கற்பகம் வீதி மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்து வரும் மேட்டுவட்டை மாணிக்கப்பிள்ளையார் வீட்டுத்திட்ட மக்கள் ஆகியோர் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கடும் மழையினால் மீண்டும் வெள்ள அபாயத்திற்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே பெய்த மழை நீர் வடிந்தோட முடியாத நிலையில் மக்கள் குடியிருப்பு மனைகளில் தேங்கி நிற்கும் இவ்வேளையில் கடந்த புதன் கிழமை பெய்ய ஆரம்பித்துள்ள மழை நீரும் வீடுகளில் தேங்கி நிற்கின்றது. இதனால் அம்மக்கள் சுகாதார சீர்கேட்டிற்கும் முகம்கொடுத்துள்ளனர்.
இதேவேளை பாண்டிருப்பில் உள் வீதிகள் பல சேதமடைந்து காணப்படுவதினால் அவ்வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு புதிதாக போடப்பட்ட கொங்கிறீட் வீதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது. அத்துடன் பாண்டிருப்பு பிள்ளையார் கோயில் வீதி, திரெளபதையம்மன் ஆலய வீதி என்பனவற்றின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மாதங்கள் பல கடந்து விட்ட போதிலும் இதுவரை அப்பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதுள்ளது. இதனாலும் பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கடும் மழை தொடருமாக இருந்தால் பாண்டிருப்பில் தாழ் நிலப் பகுதிகள் உட்பட ஏனைய இடங்களும் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்மாந்துறை
சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், காரைதீவு, ஒலுவில், பாலமுனை, பாண்டிருப்பு, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில், தம்பிலுவில், மருதமுனை, நற்பிட்டிமுனை மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் உள்ள தாழ் நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மேற்படி பிரதேசங்களிலுள்ள வயற் காணிகளும் நீரில் மூழ்கியுள்ளன. கல்முனை, அம்பாறை வீதியில் உள்ள மாவடிப்பள்ளி தாம்போதி (பாலம்) அண்டிய பிரதேசத்தில் பிரதான வீதியை குறுக்கறுத்து வெள்ள நீர் பாய்ந்து செல்வதனால் இவ்வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேவேளை, கல்முனைக்கான கிட்டங்கி வீதியுடனான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மருதமுனை
பல குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு பல வீதிகள் பயணிக்க முடியாத நிலைக்குள்ளாகியுள்ளது.மருதமுனையில் சமுர்த்தி வீதி, பனையடி வீதி உள்ளிட்ட பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்துக்கள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதுடன் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.மரக்கறிகள் கிலோ 300 க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
அக்கரைப்பற்று
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை முதலிய பிரதேசங்களில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடும் முஸ்லிம் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை அடைந்தனர்.மீண்டும் மழை பெய்வதனால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக அறுவடைக்குத் தயாரான விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். அக்கரைப்பற்றிலுள்ள அனேகமான வீதிகளில் நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து செய்வதில் பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உட்படுகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக பாரிய வெள்ளம் ஏற்படுமானால் அறுவடைக்குத் தயாராகவுள்ள வேளாண்மை முற்றாகப் பாதிக்கப்படலாம் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்