jeudi 17 janvier 2013

முன்னாள் அதிபர் சந்திரிகா எச்சரிக்கை -இன்னொரு போராளிக்குழு உருவாகும்

சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியே தொடர்ந்து நடக்குமேயானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார். 

அடிப்படைவாத போகோ ஹராம் குழுவின் தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் இருந்து வெளியாகும், AYO OKULAJA இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
அவரது செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு 

“தமிழ்ப் புலிகளுக்கு எதிரான மகிந்த ராஜபக்சவின் தாக்குதல் இப்போது அனைத்துலக சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக உள்ளது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதை இன்னமும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. 

நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்த போதிலும், வேறொரு போரில் ஒரு நீண்டகால கடிவாளமாக இருக்கக் கூடும் என்றே நான் இன்னமும் நம்புகிறேன். 

தமிழ்மக்கள் நீண்டகாலமாகவே பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் தமது உரிமைகளைக் கோரினார்கள். 

அவர்களின் உரிமைகளை வழங்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது அரசாங்கம் முதன்முதலாக இணங்கியது. 

முழு உரிமைகளையும் கொண்ட ஒரு சமஸ்டி ஆட்சியை நிறுவ இணங்கப்பட்டது. 

ஆனால், ராஜபக்ச சிறுபான்மையினரின் உரிமைகளில் நம்பிக்கை கொண்டவரல்ல. 

அவர் ஒருவரே எனது அமைச்சரவையில் பேச்சுக்களுக்கு எதிராக இருந்தார். அவரது தேவை அவர்களை கொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. 

இப்போது ஒட்டுமொத்த உலகமுமே, இராணுவத் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்கிறது. 

புலம்பெயர் தமிழர்கள் மீளஇணைகிறார்கள். தாக்குதல்களைக் கண்டிக்கிறார்கள். 

சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியே தொடர்ந்து நடக்குமானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும். 

இறுதித் தாக்குதலின் போது பொதுமக்களின் மனிதஉரிமைகள் அவர்களால் மீறப்பட்ட சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றன. 

ஏனென்றால், புலிகள் தம்மைச் சுற்றி பொதுமக்களை வைத்திருந்தார்கள். 

பொதுமக்களை சுட்டுவிழுத்த சிறிலங்கா அரசாங்கம் ஜெட் போர் விமானங்களையும் பயன்படுத்தியது. 

சிறிலங்கா அரசாங்கம் அதிகளவு மனிதாபிமான அணுகுமுறையில் செயற்பட்டிருந்தால், இந்தக் கொலைகளைத் தவிர்த்திருக்கலாம். 

பொதுமக்களைக் கொல்லவேண்டிய தேவை இருக்கவில்லை. இதனால் என்ன நடந்திருக்கிறது, எல்லோரும் கோபமுற்றிருக்கிறார்கள். 

தனியே தமிழ்ப்புலிகளை மட்டும் அழித்திருந்தால், யாரும் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். 

ஏனென்றால் அவர்கள் கொடூரமானவர்களாக இருந்தனர். 

அல்கெய்தாவுக்கு முன்னர், உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் தற்கொலைக் குண்டுதாரிகளை அவர்களே உருவாக்கினார்கள். 

மக்கள் வன்முறைகளை விரும்பமாட்டார்கள். வன்முறைகளுக்கு மிகஆழமான காரணங்கள் இருக்கின்றன. 

எனவே முரண்பாடுகளுக்கான அந்தக் காரணங்களைக் கண்டறிய வேண்டும். அந்தக் காரணங்களை தீர்க்க வேண்டும். 

அடிப்படைக் காரணங்களை கண்டுபிடிக்கும் வரை நிறுத்தக் கூடாது. 

போகோ ஹராம் ஏழைகளை ஆட்சேர்ப்புச் செய்கிறது. அவர்கள் பாரபட்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே முதலில் நீங்கள் தீர்க்க வேண்டிய பிரச்சினை வறுமை. அவர்களை உள்ளடக்கிய ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். 

வம்ச அரசியல் முறையை நான் ஏற்கவில்லை. எனது பிள்ளைகளை நான் அரசியலுக்குக் கொண்டு வரவில்லை. 

எனது தந்தையும், தாயும் அரசியலில் இருந்தனர். எனது தந்தை படுகொலை செய்யப்பட்ட பின்னர், அரசியலுக்கு வர எனது தாயார் மறுத்து விட்டார். 

ஆனால் கட்சி அவரை வருமாறு கேட்டது. இதனால் நாம் ஆட்சியில் இருக்க வேண்டியதாகி விட்டது. 

பின்னர் எனது தாய் மிகவும் புகழ் பெற்றார். அவர் தனது பணியை சரியாகச் செய்தார் என்று நான் நினைக்கிறேன். 

அவருக்குப் பின்னர் கட்சிக்கு இன்னொரு தலைவர் தேவைப்பட்டார். 

எனக்கு அரசியல் தேவையில்லை என்று நான் கூறினேன். நான் மறுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அதற்குள் நான் இழுத்து வரப்பட்டேன். 

அப்போதே என்னுடன் இந்த வம்சஆட்சி முடிவுறும் என்று கூறினேன். எனக்குப் பிள்ளைகள் இருக்கின்ற போதிலும், அவர்களை அரசியலுக்கு கொண்டு வர விரும்பவில்லை. 

வம்ச அரசியல் நல்லதல்ல என்று நினைக்கிறேன். 

எல்லாவற்றையும் தமக்காக அபகரிக்க ஒரு குடும்பத்துக்கு அது இடமளிக்கிறது. 

அந்த முறையில் ஊழல்கள் மோசமாக உள்ளது. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மிகப் பெரிய ஊழல்களை செய்துள்ளார். 

அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2000 பேர் அரசாங்கப் பதவிகளில் உள்ளனர். நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் உள்ளனர். 

அவர்களின் பிள்ளைகள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இந்தமுறையில் உள்ள நன்மைகளை விட தீமைகளே அதிகம். 

தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியாது.

ஆனால் அது ஒரு அதிசயம். நான் எனது ஒரு கண்ணை இழந்தேன். எனக்கு இடது கண்ணில் பார்வை இல்லை. 

எனது மூளையில் இப்போதும் ஒரு இரும்புத்துண்டு உள்ளது. அந்தத் தாக்குதலில் எனது சாரதி உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire