பிரான்ஸின் 1000 துருப்புகள் விரைவு; ராணுவ தலையீட்டுக்கு ஐ.நா. ஆதரவு. வடக்கு மாலியை கைப்பற்றியிருக்கும் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு பிரான்ஸ் மேலும் 1000 படைகளை அங்கு அனுப்பவுள்ளதோடு ஆயுதங்களுடனான வாகனங்களையும் ஒரு சில தினங்களில் அனுப்பவுள்ளது.
மாலியில் பிரான்ஸின் இராணுவ நடவடிக்கைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆதரவு வெளியிட்டுள்ளதோடு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் இராணுவ உதவியை வழங்க முன்வந்துள்ளன.மாலியில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மக்ரப் உட்பட மூன்று இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவுக்கு எதிராக பிரான்ஸ் உட்பட சர்வதேச படைகள் அங்கு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸின் 500 துருப்புகள் மாலியில் உள்ள நிலையில் மேலும் துருப்புகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸ் விமானப் படை இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு மத்தியிலும் மாலியின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் டயபாலி கிராமத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை இரவு இந்த கிராமம் மீது பிரான்ஸ் வான் தாக்குதல் நடத்தியது. இதில் 17 போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.எவ்வாறாயினும் கிளர்ச்சியாளர்கள் தெற்கு மாலியில் இருக்கும் தலைநகர் பமாகோவை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட டயபாலி கிராமத்திலிருந்து தலைநகர் பமாகோவுக்கு சுமார் 400 கிலோ மீற்றர் மாத்திரமே உள்ளது.
மாலியின் இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர விடாமல் தடுக்கும் வகையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் அங்கு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இதில் ஓரளவு வெற்றி கண்டிருப்பதாக பிரான்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் வடக்கிலுள்ள கிளர்ச்சியாளர் இலக்குகள் மீது தொடர்ந்து வான் தாக்குதலை நடத்தி வருகின்றது. கிளர்ச்சிப் படைகளை கூடுமான அளவுக்கு அழித்துவிட வேண்டும் என்பதே இத்தாக்குதலின் நோக்கமாகும்.
எனினும் கிளர்ச்சிப் படையினர் சண்டையிடும் விதம் அவர்கள் பயன்படுத்துகின்ற தளபாடங்கள் போன்றவை தம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக உள்ளன என பிரான்ஸ் இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கிளர்ச்சிப் படையினுடைய போர்த் திறனில் பெரும் பங்கு லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் முஅம்மர் கடாபிக்கு ஆதரவளித்திருந்த சக்திகளிடம் இருந்து வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமி ஆயுததாரிகள் மாலியில் போராடி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்திருக்கும் பிரான்ஸின் இதயத்தின் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று மாலியில் உள்ள இஸ்லாமிய குழு ஒன்றின் தலைவர் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த இராணுவ நடவடிக்கையை ஒட்டி பிரான்ஸ் உள்நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடந்த திங்கட்கிழமை கூடிய ஐ.நா. பாதுகாப்புச் சபை பிரான்ஸின் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளது. இந்த இராணுவ தலையீடு மூலம் மாலியில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும் என ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டார்.
இதில் மேற்கு ஆபிரிக்க படைகள் முடியுமான விரைவில் மாலிக்கு அனுப்பப்படவேண்டும் என ஐ.நாவுக்கான பிரான்ஸ் தூதுவர் கெராட் அரோடா பாதுகாப்புச் சபையில் கோரிக்கை விடுத்தார். வடக்கு ஆபிரிக்க படைகளை மாலிக்கு அனுப்ப ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கடந்த டிசம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் 3000 துடுப்புகள் கொண்ட ஆபிரிக்க படையை மாலிக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே பிரான்ஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
ஏற்கனவே நைஜீரிய படைகள் மாலியை சென்றுள்ள நிலையில் ஏனைய நாட்டு படைகளும் விரைவில் சென்றடையும் என பிரான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாட்டு படையில் 600 நைஜீரிய துருப்புகளும் நைகர், பார்கினோ பாசோ, டோகோ மற்றும் செனகாலின் தலா 500 துருப்புகளும் பெனின் நாட்டின் 300 துருப்புகளும் உள்ளடக்கப்படுவதாக பிரான்ஸ் கூறியுள்ளது.
ஏற்கனவே பிரான்ஸ் மத்திய நகரான மொப்டி மற்றும் தலைநகர் பமாகாவுக்கு 550 துருப்புகளை அனுப்பியுள்ளது. இந்த எண்ணிக்கை எதிர்வரும் காலத்தில் 2.500 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை இடம்பெற்ற மோதல்களில் 11 மாலி துருப்புகளும் ஒரு பிரான்ஸ் ஹெலிகொப்டர் ஓட்டுநரும் கொல்லப்பட்டுள்ளதோடு கிளர்ச்சியாளர் தரப்பில் 100க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த மோதல்கள் காரணமாக மாலியில் மனிதாபிமான நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளது. பிரான்ஸ் படை குண்டு வீசிவரும் ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருவதாக தன்னார்வ தொண்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.பிரான்ஸ் வான் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire