vendredi 25 janvier 2013

படத்தை பார்க்கும் நடுநிலையான தேசப்பற்றுள்ள, எந்த ஒரு முஸ்லிமும், பெருமையாகத் தான் கருதுவர். - நடிகர் கமல்


விஸ்வரூபம் பட பிரச்னையில் சிறு குழுக்கள், அரசியல் வாழ்வும், லாபமும் பெற நினைக்கின்றன. விஸ்வரூபம் படத்தை பார்க்கும் நடுநிலையான தேசப்பற்றுள்ள, எந்த ஒரு முஸ்லிமும், பெருமையாகத் தான் கருதுவர்'' என, கமல் தெரிவித்துள்ளார்.படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில், விஸ்வரூபம் படத்தை காட்ட சென்றுள்ள கமல்ஹாசன், அமெரிக்காவிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கை:விஸ்வரூபம் படத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், திடீரென இந்தப்படம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இது எனக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இப்படம், எந்த வகையில் முஸ்லிம்களுக்கு எதிரானது என, எனக்கு தெரியவில்லை.ஒரு நடிகன் என்ற முறையில், என் கடமைக்கும், பல படி மேலாக சென்று, மனிதாபிமான முறையில், முஸ்லிம் சமுதாயத்திற்காக குரல் கொடுத்துள்ளேன். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கான இந்தியா அமைப்பில், நான் உறுப்பினராக உள்ளேன்.என் படம் மூலம், ஒரு மதத்தை அவமரியாதை செய்து விட்டதாக, என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்னை காயப்படுத்தி உள்ளன. அதோடு என் உணர்வுகள் உண்மையிலேயே அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.என்னை ஈவு இரக்கம் இல்லாமல், ஒரு கருவி போல பயன்படுத்தி, சிறு குழுக்கள் அரசியல் வாழ்வும், லாபமும் பெற நினைக்கின்றன. விஸ்வரூபம் படத்தை பார்க்கும் நடுநிலையான, தேசப்பற்றுள்ள எந்த ஒரு முஸ்லிமும் நிச்சயம், படத்தை பெருமையாகத்தான் கருதுவர். அந்த நோக்கத்துக்காகத் தான், இந்தப் படமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.படத்திற்கு எதிரான தடையை சட்டப்படி சந்திப்பேன். இதுபோன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இணையதளம் வாயிலாக எனக்கு ஆதரவு தெரிவித்துள்ள, அனைவருக்கும் நன்றி.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மறு பரீசிலனை செய்ய மத்திய அரசு ஆலோசனை
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர், மணீஷ் திவாரி கூறியதாவது:ஏற்கனவே இது தொடர்பான ஒரு வழக்கில்," திரைப்பட தணிக்கை குழுவின் முடிவு தான், அனைத்தையும் கட்டுப்படுத்தும்' என, சுப்ரீம் கோர்ட், உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, தமிழக அரசு, இது தொடர்பாக, முடிவு எடுப்பதற்கு முன், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை, கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக அரசு, தன் முடிவை, மறு பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு, மணீஷ் திவாரி கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire