vendredi 25 janvier 2013

இந்தியா முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும் மன்மோகன் சிங்

இலங்கைக்கு இந்தியா முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும் - சிங் மீண்டும் உறுதி

இலங்கைக்கு இந்தியா, அனைத்து வகையிலும் தொடர்ந்து முழு அளவிலான ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் உறுதியளித்துள்ளார்.


தற்போது இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரை சந்தித்த போது அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். 

இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான 8வது கூட்டு அமர்வுகளில் பங்‍குபெறும் முகமாக ஜி.எல்.பீரிஸ் இந்திய விஜயம் மேற்கொண்டுள்ளார். 

அவரை சந்தித்து வரவேற்ற பிரதமர் மன்மோகன் சிங், ´இலங்கை இந்தியா இரு தரவு உறவுகளையும் வலுப்படுத்தி கொள்ள கூடுதல் முனைப்பு எடுக்கப்படும். இரு நாடுகளும் பொருளாதாரம், பாதுகாப்பு, வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ள இதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு அமர்வுகள் உதவும். இதுவரை இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள இரு தரப்பும் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது´ என தெரிவித்துள்ளார். 

இச்சந்திப்பின் போது இந்திய தரப்பில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளிநாட்டு அமைச்சின் பொதுச்செயலாளர் ரஞ்சன் மாதாய், இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அசோக் காந்தா ஆகியோர் சமூகமளித்தனர். 

இலங்கை தரப்பில், வெளிவிவகார அமைச்சின் பொதுச்செயலாளர் கே.அமுனுகம, இந்திய தூதுவர் பிரசாத் காரியவம்சம் ஆகியோர் சமூகமளித்திருந்தனர். 

இதேவேளை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனியை, ஜீ.எல்.பீரிஸ் சந்தித்த போது, ´இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், சிடுமூஞ்சித்தனமாக குற்றம் காண்பதிலேயே இருப்பதாகவும்´ குற்றம் சுமத்தினார். 

அதற்கு பதில் அளித்துள்ள அந்தோனி, ´இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது. அவர்களது எதிர்வாதங்கள், சிடுமூஞ்சித்தனமானவையாக நான் கருதவில்லை. அவர்களின் கோபம் நியாயமானதே. 

ஒரு சில நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், இலங்கையில் தமிழர் பகுதியின் மீள்குடியேற்றம், மீள் நிவாரண பணிகள் துரித கதியில் நடைபெறவில்லைதான். அதனால் தமிழ்நாட்டவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிகக் வேண்டியது அவசியமானது. 

எப்படியாயினும் இலங்கை இந்தியாவின் நெருங்கிய உறவு கொன்ட நாடு. அந்த உறவை தக்க வைத்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மாத்திரமல்லாது, இந்தியா முழுவதும் இராணுவ பயிற்சி முகாம்கள் இருக்கின்றன. 

ஒரு பக்கம், தமிழ்நாட்டின் கருத்துக்களை மதிக்கிறோம். அதனால் அம்மாநிலத்தில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதை தவிர்த்தோம். எனினும் மறுபக்கம், கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக ஏனைய மாநிலங்களில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகள் தொடர்ந்தவாறே உள்ளன என்றார்
.

Aucun commentaire:

Enregistrer un commentaire