mercredi 9 janvier 2013

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்தவர் தோமஸ் அல்வா எடிசன்



தோமஸ் அல்வா எடிசன் பெப்ரவரி 11, 1847 – அக்டேபர் 18, 1931 ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலி வரைவி திரைப்படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார்,திரள் உற்பத்தி ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 இல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900 ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement Of Science) இதழானது.
தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன் பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல. முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டுபிடிப்புகளுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்பட்டார். இருந்தாலும் எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிம நிறுவனம் (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.
தோமஸ் அல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பெப்ரவரி 11ம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர். தாயார் நான்சி எடிசன் ஸ்கொட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா பெண். அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது.
எடிசனுக்கு சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது. அப்பிறவிப் பெருங்குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப்படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது. 1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹ¥ரனில் கலங்கரை விளக்கக் காப்பாளராகவும், கிராடியட் கோட்டை இராணுவத் தளத்தின் தச்சராகவும் சாமுவெல் வேலை பார்த்தார்.
எடிசன் சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் கஷ்டப்பட்டுத் தாமதமாக எட்டரை வயதில்தான் போர்ட் ஹ¥ரன் பாடசாலைக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் “மூளைக் கோளாறு உள்ளவன்” என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப்படிப்பு முடிந்தது. எனவே அவரின் தாயார் பள்ளியிலிருந்து தோமசை விலக்கிவிட்டு தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார்.பள்ளிக்கூட ஆசிரியரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே எடிசன் கல்வி கற்றார். படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும். பழங்கதைகளைப் படிக்குமாறு தோமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார்.
பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்ட போது அவருக்கு வயது 11.
தனது ஏழாவது வயது முதல் சூழ்நிலைச் சாதனங்களின் மேல் எடிசனுக்கு ஆர்வம் மிகுந்தது. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் (Richard Parker) எழுதிய ‘இயற்கைச் சோதனைத் தத்துவம்’ (Natural & Experimental Phiosophy) என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தோமஸ் பைன் (Thomas Paine) எழுதிய ஆக்க நூல்களையும் ஐசக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு’ என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில் மைக்கேல் பரடேயின் செய்தித்தாளில் இருந்த “மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள்” பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடிந்தார். இவை அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது. செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணித அறிவும் அறிவியல் இயற்பாடு எதுவும் முறையாகக் கற்காத எடிசன் சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று பல அரிய தொழிநுட்பக் கருவிகளைப் படைத்தார்.
1860 களின் தொடக்கத்தில் எடிசனுக்கு ரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது. அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பெயர் பெற்றவர் அவர். அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே. பின்னர் வெஸ்டன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரிய அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி தோமஸின் முதலாளி இருந்த அறைக்கள், பாய்ந்தது அவரது வேலை பறிபோனது.
அதன் பின்னர் ரயில் நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார். சில காலம் பன்றி வெட்டினார். காய்கறி வணிகம் செய்தார். ரயில் வண்டியின் ஒரு பெட்டியை அச்சகமாக மாற்றி அதிலிருந்தபடியே 1862 இல் ‘த வீக்லி எரால்ட்’ என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்.
1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு டெட்ராய்ட் போர்ட் ஹ¥ரன் புகை வண்டி நிலையத்தில் செய்தித்தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் மத்திய புகை வண்டி நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்குவரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வேலைக்கு மனுப்போட்டு 1863 இல் டெலகிராப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளி மற்றும் கோடுகளாகப் பதிவானதால் அவரது காது கேளாமைத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை. பதிவான புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான் ஆங்கிலத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில் நியூ இங்கிலாந்தில் மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது இவ்வேலையை எளிதாக்கும் தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத்திறமையைக் காட்டினார். 1869 இல் தன் 22 ஆம் வயதில் ‘இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப்’ பதிவுக் கருவியுடன் இணைத்து இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில் ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார். அத்துடன் தந்தியின் மின் குறிகளைத் தானாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார்.
எடிசன் தனது தந்தி வேலையை விட்டு விட்டு, முழு நேர ஆக்கப்பணிக்கு நியூயோர்க் நகருக்குச் சென்றார். அங்கு “பிராங்க் போப்” என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து ‘எடிசன் உலகப் பதிப்பி’ (Edison Universal Stock Printer) மற்றும் வேறு பதிக்கும் கருவிகளையும் உருவாக்கினார். 1870 – 1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் தானியங்கித் தந்தி (Automatic Telegraph) ஏற்பாட்டைச் செப்பனிட்டார். இரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி மின்குறி அனுப்புதலை மிகவும் சிக்கலாக்கியது. அதைச் சீர்படுத்த முற்பட்ட எடிசன் தன் இரசாயன அறிவை உயர்த்த வேண்டியதாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில் மின்சாரப் பேனா (Electric Pen) பிரதி எடுப்பி (Mimeograph) போன்ற சாதனங்கள் உருவாகின். மேலும் அந்த பட்டறிவே எடிசன் இசைத்தட்டு கிராமஃபோன்) (Phonograph) கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று. எடிசன் புதிய கருவிகளைக் கண்டு பிடிக்க முனையும் போது வேறு பல அரிய கருவிகளும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று ‘கரி அனுப்பி’ (Carbon Tranmitter) என்னும் சாதனம்.
எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் வீதிக் கம்பங்களில் பயன்படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக மின்சார விளக்கு’ பலருக்குக் கனவாகவும் படைப்பாளிப் பொறியாளர்களுக்குத் தோல்வியாகவும் இருந்து வந்தது. அப்போதுதான் விஞ்ஞானிகள் ‘மின் வீச்சு விளக்கு’ தொடர்பாக பல ஆய்வுகள் செய்து வந்தனர். 1878 ஜுலை மாதம் 29 ஆம் திகதி சூரிய கிரகணத்தின் போது ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது ‘சூரிய வெளிக்கனல்’ எழுப்பிய வெப்ப வேறுபாட்டை அளக்க அவர்களுக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் (Carbon Buttonசாதனத்தைப் பயன்படுத்தி ‘நுண்ணுனர் மானி’ என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன்படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வமேற்பட்டது.
எடிசனின் மின்விளக்கு குறித்து ஆய்வுகளுக்கு ‘எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை’ துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன்பணமாக 30.000 டொலர் தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக அறிவியல் பட்டதாரி. 26 வயதான பிரான்சிஸ் அப்டன் எடிசன் ஆய்வுக்குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதீக அறிவியல் நுணுக்கங்கள் யாவும் இளைஞர் பிரான்சிஸ் மூலம் எடிசனுக்கு கிடைத்தது.
மின்தடை மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் செல்லும் மின்னோட்டம் மிகுதியாக இருந்ததால் மின் வீச்சு விளக்கு ஒன்றில் பழுது ஏற்பட்டால் எல்லா விளக்குகளும் அணைந்து போயின. எடிசன் மின்விளக்குகளை இணைச் சுற்றில் பிணைத்து மின்னோட்ட அளவைக் குறைத்ததால் ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்கவில்லை. எடிசன் குழுவினர் பிளாட்டினம் கம்பியைச் சுருளை வெற்றிடக் குமிழி ஒன்றில் உபயோகித்துக் கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து முதல் மின்விளக்கை உருவாக்கினார்கள்.
1881 ஜனவரியில் முதல் ‘மின் விளக்கொளி அமைப்பு’ வணிகமாக்கும் துறை ஏற்பாடு நியூயோர்க்’ ஹிந்த் அல்லது கெட்சம்’ அச்சக மாளிகையில் நடந்தது. நியூயோர்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த உலகின் முதல் வர்த்தக ‘மத்திய மின்சார நிறுவனம்’ எடிசனின் நேரடிப் பார்வையில் நிறுவப்பட்டது. அது 1882 செப்டெம்பர் முதல் இயங்க ஆரம்பித்தது. பின்னர் மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து பின் பெரிய உணவு விடுதிகள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் மின் குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.
இதற்கு இடையில் 1879 இல் எடிசன் அப்டன் இருவரும் முதல் மின்சார சேமிப்புக்கலனை உண்டாக்க போதிய ஆய்வுகள் செய்து முடித்தார்கள். இயந்திர ஆற்றலால் ஓட்டினால் மின்சார சேமிப்புக்கலனில் மின்னழுத்தம்(ஏழடவயபந) உண்டாகி கம்பி முனையில் மின் திறன்((Voltage)கிடைக்கிறது. எதிர்மறையாக மின்சார சேமிப்புக்கலனின் முனைகளில் மின்னழுத்தம் செலுத்தினால அதே கருவி இயந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் (Electric Motor) ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனை ஆகும்.
ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில் 1931 அக்டோபர் 18 ஆம் திகதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆர்ஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹ¥வர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் திகதி மாலை 9.59 மணிக்கு அரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் திகதி மாலை நியூயோர்க்கில் ‘சுதந்திர தேவி சிலையின்’ கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது. பிராட்வே விளக்குகள் வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன.

Aucun commentaire:

Enregistrer un commentaire