mercredi 9 janvier 2013

2 ஆண்டுகளில் 207 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் யாழ்ப்பாணத்தில்

யாழ். மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 207 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை புள்ளி விபரங்களூடாகத் தெரிய வருகின்றது என யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி. சிவரூபன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தற்பொழுது நாளுக்கு நாள் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. எமது விசாரணைக்குட்பட்ட முடிவுகளுக்கமைய 207 சிறுமிகள் கடந்த இரு ஆண்டுகளில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனைவிட அதிகமான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. சில சம்பவங்கள் அரசியல் செல்வாக்கினால் மூடி மறைக்கப்படுகின்றன. வேறு சில சம்பவங்களை பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரே சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு மூடி மறைக்கின்றனர். இப்படியான பாலியல் துஷ்பிரயோகங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கு பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள சமூகம் புரள்வான சிந்தனையே காரணமாகும். பொது மக்களிடம் முறையான விழிப்புணர்வு தேவை. பெண்களுக்கெதிரான வன்முறைகள் இங்கு அதிகமாக நடைபெறுகின்றன. கடந்த வாரம் மண்டைதீவுப்பகுதியில் 4 வயதுச் சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அதேபோல் மன நிலை பாதிக்கப்பட்ட யுவதியொருவரையும் காரைநகர் பகுதியில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தபின் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டிலும் தொடக்கத்திலேயே இப்படியான பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் நடைபெறத் தொடங்கி விட்டன. எனவே  இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். பெற்றோர்களுக்கும் இவ்விடயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தச் செயற்பாட்டை அரசாங்கம் மேற்கொள்ளாவிடின் யாழில் இப்படியான வன்கொடுமைகள் இடம்பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire