samedi 26 janvier 2013

தெரிவுக்குழுவில் இணைந்து தங்கள் விவகாரத்தைப் பேசவேண்டும், 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப்பகிர்வே சாத்தியமானது,


தமிழ்த் தரப்பினர் சர்வகட்சி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து தங்கள் விவகாரத்தைப் பேசவேண்டும், 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப்பகிர்வே சாத்தியமானது, அதனடிப்படையில் தீர்வைக்காண துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது.
இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்திற்காக புதுடெல்லி சென்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது குறித்து சர்வகட்சி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் வடிவமைத்திருக்கிறது, அதில் இணைந்து பிரச்சினைக்குத் தீர்வுகாண தமிழ்த்தரப்பினர் வரவேண்டுமென ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டதை அடுத்து, கருத்துத் தெரிவித்த சல்மான் குர்ஷித், 13வது திருத்தத்தைக் கட்டியெழுப்பு வதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியுமென நாங்கள் கருதுகிறோம், இதுவே தேசிய நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியா வலியுறுத்தும் இந்தத் திட்டத்தை விட மேலான வேறு எந்தத் திட்டத்தையும் எந்தவொரு சர்வதேச நாடும் சொல்லப் போவதில்லை. இந்தயதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை மறைத்து வேறு கற்பனைகளில் திளைக்க விடுவதன் மூலம் சுயலாப அரசியலையும், வேறு வியாபாரங்களையும் செய்துகொண்டிருப்பவர்களை இனங்காண வேண்டும்.
இந்தியாவும் ஏனைய சர்வதேசமும் திரும்பத் திரும்பச் சொல்லிவருகிற, 13வது திருத்தத்தின் அடிப்படையில் சர்வ கட்சித் தெரிவுக்குழுவில் சென்று பேசி சமரசமான ஒரு அதிகாரப் பகிர்வுக்கு வாருங்கள் என்கிற வலியுறுத்தலை காதிலேயே கேளாத மாதிரி, தீர்வை எடுத்துத்தர சர்வதேசம் வரும் என்று தமிழ்மக்களின் காதில் தொடர்ந்து பூ சுற்றிக் கொண்டிருக்கிறவர்கள், இப்போதாவது மக்களுக்கு நேர்மையாகப் பதில் சொல்ல வேண்டாமா?
எந்தச் சர்வதேசம் எந்தத் தீர்வை எடுத்துத்தர இங்கு வரவிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டாமா? மந்திரத்தில் மாங்காய் விழும் என்று சொல்கிறவர்களைப் பார்த்து, எந்த மாங்காய் எங்கே இருந்து எப்படி எப்போது விழப்போகிறது என்றாவது நாம் கேட்க வேண்டாமா? எதையும் கேளாமல் வெட்டவெளியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்போமானால், எங்களை அந்தச் சர்வதேசம் கூட எப்படி நினைத்துக் கொள்ளும்?
நடைமுறையில் சாத்தியப்படக் கூடியதை சிந்தித்து, சாத்தியப்படக் கூடியவற்றைப் பேசி, சாத்தியமானதை எடுத்துக் கொண்டு முன்னகரும் விவேகத்தை நாம் காண்பிக்கவே மாட்டோமா? நம் விருப்பங்கள் ஆகாயமளவுக்கு இருக்கலாம். அதையெல்லாம் அள்ளியெடுத்து விடலாம் என்று காட்டிக் காட்டி வீரமும் பெருமையும் பேசி, மக்களை சேற்றிலும் முட்களிலும் நடக்க விடுவது ஏமாற்றும் வஞ்சனையுமல்லவா!
மற்றவர்கள், மற்ற சமூகத்து மக்கள் நினைப்பது பற்றியெல்லாம் நமக்குக் கவலையில்லை. நாம் நினைப்பதைத் தரவேண்டும்; அல்லாமல் வேறெதையும் பேசமாட்டோம் என்று அடம் பிடிப்பது, ஒருவகையில், நிலவைக்கையில் பிடித்துத் தரக்கேட்கும் குழந்தைத்தனமல்லவா! அவர்கள் இறங்கி வராமல், நாங்கள் எதற்கு இறங்கிப் போக வேண்டும் என்று ரோசத்தைக் காட்டிக்கொண்டிருப்பது, கஷ்டப்படுகிற மக்களைக் கவனத்திலெடுக்காத, வசதிபடைத்தவர்களின் வறட்டு வீம்பாகத்தானிருக்க முடியும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire