இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வடக்காக 10 கிலோமீட்டர் தொலைவில் மிகப்பெரியதான திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
தெற்காசியாவின் மீன் ஏற்றுமதியின் தங்க வாயிலான கேந்திர நிலையம், திக்கோவிட்ட மீனவ துறைமுகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. மீன் ஏற்றுமதிக்காகவே தயாரிக்கப்பட்ட இந்த புதிய துறைமுகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பசில் ராஜபக்ஷ, பீளிக்ஸ் பெரேரா, பிரதியமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, சரத் குமார குணரத்ன, துலீப் விஜேசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.
இலங்கையில் 19-வது மீன்பிடித் துறைமுகமாக திறக்கப்பட்டுள்ள திக்கோவிட்டத் துறைமுகம் தேசிய மீன்பிடித் துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
'மீன்- ஏற்றுமதித் துறையை ஊக்குவிப்பதற்காக இந்தத் துறைமுகத்தில் உள்நாட்டுக்கான பிரிவு மற்றும் ஏற்றுமதியை நோக்காகக்கொண்ட பிரிவு இரண்டு பிரிவுகள் உள்ளன. வடக்கு பகுதி முழுமையாக உள்நாட்டு மீனவர்களுக்கு உரியது. அங்கு 305 மீன்பிடி படகுகளும் தெற்கே ஏற்றுமதி பகுதியில் 150 படகுகளும் ஒரே நேரத்தில் தரித்து நிற்கக்கூடிய பாரிய துறைமுகம் இது' என்றார் நுவன் ஜயசிங்க.
மீன்களைப் படகுகளிலிருந்து பதப்படுத்தும் நிலையங்களுக்கு ஆட்களைக் கொண்டு நகர்த்தாமல் நவீன நகரும் பெல்ட்டுகள் மூலமாகக் காவிச்செல்லும் வசதிகள் உள்ளதாக திக்கோவிட்ட துறைமுக முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
'கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 நிமிடங்களில் மீன்களை கொண்டுசெல்லும் வசதிகள் இருக்கின்றன, வடக்கு தெற்கு என்று நாட்டின் எந்தப் பகுதியிலுள்ள மீன்பிடிப் படகுகளும் இங்கு வந்து தரித்துநின்று ஏற்றுமதி தொழிலில் ஈடுபடமுடியும்' என்றும் நுவன் ஜயசிங்க கூறினார்.இதேவேளை, பெரிய அளவான தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் ஆழ்கடல் மீனவர்களுக்கு மட்டுமே நன்மை அளிக்கக்கூடிய இவ்வாறான திட்டங்களை போல, நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சிறிய ரக மீன்பிடித் தொழிலாளர்களை ஊக்குவிப்பதில் அரசு அக்கறையின்றி இருப்பதாக இலங்கையின் தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹேர்மன் குமார தமிழோசையிடம் தெரிவித்தார்.
'வெறும் 25-30 வீதமானவர்களே ஆழ்கடல் படகுகள் மூலம் மீன்பிடிப்பவர்கள், மற்ற பெரும்பான்மை மீனவர்கள் கரையை அண்டிய சிறிய ரக மீன்பிடியாளர்களே, இவர்கள் எல்லோரையும் உள்ளடக்கியது தான் நாட்டின் தேசிய மீன்பிடித்துறை' என்றார் ஹேர்மன் குமார.
'நாட்டில் ரக மீன்பிடித் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகவே சிறு நங்கூர-துறைகளை அமைத்துத்தருமாறு கோரிக்கை விடுத்துவருகிறார்கள். ஆனால் சிறிய மீனவர்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை' என்றும் கூறினார் ஹேர்மன் குமார.
அத்தோடு பெரிய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பெரும்பாலும் கடலின் ஆழத்தில் தரையை துளாவி மீன்பிடிப்பதாலும் சிறிய கண்களைக் கொண்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதாலும் கரையை நோக்கிவரும் மீன்வளங்கள் அழிக்கப்படுவதாகவும் அதனால் கரையோரத்தை அண்டி பிழைப்பு நடத்தும் சிறிய ரக மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் எனவே அவ்வாறான மீன்பிடி முறைகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இலங்கையின் தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹேர்மன் குமார மேலும் சுட்டிக்காட்டினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire