இலங்கையில் சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தனித்தனியாகப் பாடப்பட்டு வரும் தேசிய கீத்த்தை, இரு மொழிகளையும் கலந்து ஒரு புதிய வடிவிலான தேசிய கீதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாடு மற்றும் இன விவகாரங்கள் அமைச்சின் முன் முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த இசை வடிவம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பார்வைக்கு அனுப்பபட்டு, அதன் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்த இருமொழி கலந்த தேசிய கீதம் அமலுக்கு வர, இலங்கையில் ஒரு அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படலாம் என்று கூறிய அமைச்சர் நாணயக்கார, நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை இப்போது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதன் தேவை குறித்து விளக்கிய அவர், இலங்கை அரசியல் சட்டத்தில், தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும், ஒரே இசை மற்றும் ஒரே அர்த்த்த்துடன் எழுதப்பட்டுள்ளது என்றும் எந்த சமூகம் அதைப் பாடுகிறது அல்லது கேட்கிறது என்பதை வைத்து சிங்களம் அல்லது தமிழில் பாடப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்.
இது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஏற்ப மொழிவாரியாக பாடப்படாமல், இரு மொழிகளிலும் பாடப்பட வேண்டும் என்பதே தனது கருத்து எனவும் அவர் கூறுகிறார்.
தேசிய நிகழ்வுகளில் இருமொழிக் கலப்பில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதமே பாடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார். அது தேச ஒற்றுமைக்கு உதவும் எனவும் அமைச்சர் நாணய்க்கார கூறுகிறார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire