இனப் பிரச்சினை சிக்கலடைந்தமைக்கு எம்மவருள் ஒற்றுமையின்மையும் சில தலைவர்களின் எதேச்சதிகார போக்கும், சுயநல நோக்கமும் காரணங்களாகும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்துள்ளது.எத்தனையோ அவமானங்களை எதிர்நோக்கிய போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாறாக செயற்படும் நோக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு நான் கடிதம் ஒன்றையும் முன்னர் எழுதினேன்.
நான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். நான் அரசியலில் தூய்மையாக செயற்பட்டு ஜீ.ஜீ.பொன்னம்பலம் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சகபாடிகளாலும் நேசிக்கப்பட்டவன். தமிழர் விடுதலைக் கூட்டணியை பாதுகாக்க குறிப்பாக எமது சில தலைவர்களின் மறைவிற்குப் பின்னர் எவ்வாறு செயற்பட்டுள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 55 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் இருந்து உங்களுடனும் தற்போது இல்லாத சிரேஷ்ட தலைவர்களுடனும் இணைந்து பல கலந்துரையாடல்களில் பங்குபற்றியமையால் நீங்கள் தற்போது அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை காண பெருமளவு உதவியிருப்பேன். இந்த விடயத்தில் அனுபவம் உள்ளவர்களின் பங்களிப்பு மிகவும் உதவக் கூடியதே.
என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதில் சிரமம் இல்லை. ஏனெனில் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் நானும் ஒருவனாகத்தான் இருந்தேன். 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அத்தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பேரில் நான் 36.000 வாக்குகளை பெற்று ஒன்பது பேரில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அமெரிக்காவின் அழைப்பை பெற்றுக்கொண்டவேளை இந்த விடயத்திலேனும் என்னுடைய கருத்தையும் சித்தார்த்தன் அவர்களுடைய கருத்தையும் கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. நீங்கள் அங்கிருந்து திரும்பியதும் மூன்று வாரங்களாயும் உங்கள் குழுவுக்கும் அமெரிக்க அல்லது கனடிய குழுவுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதைக் கூறவேண்டுமென்று நீங்கள் அக்கறை கொள்ளவில்லை.
அரச தரப்பிடம் நீங்கள் என்ன கேட்டீர்கள் என்பது உங்கள் குழுவினருக்குத் தெரிந்திருக்கும். நான் அறிய விரும்புவது எதை யாருக்கு மறைக்கின்றீர்கள் என்பதே. உங்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்தவர்களுக்கு நியாயமான விளக்கத்தைக் கொடுத்து உங்கள் செயற்பாட்டை நியாயப்படுத்தினால் அன்றி அதை இரகசியமாக வைத்திருப்பது நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பலனளிக்காது என்றே நான் கருதுகின்றேன்.
உள்ளூரிலும் வெளியூர்களிலும் சகல சக்திகளும் ஒன்றிணைந்து என்னை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்ற கங்கணம்கட்டி நிற்கின்றார்கள் என்பது தெளிவாகிறது. சகல துறைகளிலும் உள்ள தமிழர்களின் ஆதரவை பெற்று என்னை ஓரங்கட்ட ஒரு திட்டமிட்ட பிரசாரம் ஏன் என்பதைத்தான் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனது நாட்டுக்கும், மக்களுக்கும் என்ன குற்றமிழைத்தேன்?எந்த சந்தர்ப்பத்திலும் எவருக்கும் நான் தீங்கிழைக்காது நாட்டுக்கும் மக்களுக்கும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அரை நூற்றாண்டுக்கு மேல் சேவையாற்றி வந்துள்ளேன்.
சில தலைவர்களின் சுயநல போக்கு மக்கள் எனது அறிவுரையை ஏற்க அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக மனிதனின் பொறுமைக்கப்பால் பெருமளவு அவதூறுகள், கீழ்த்தரமான முறையில் என்மீது அள்ளி வீசப்பட்டு ஓர் அரசியல்வாதியை அவமானப்படுத்த இந்த நாட்டில் பயன்படுத்தப்படுகின்ற துரோகி என்ற கெளரவ பட்டம் எனக்கு வழங்கப்பட்டது.
நீங்களோ அல்லது உங்கள் கட்சியை சேர்ந்த வேறெவரேனும் அரசியலில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல அனுபவங்களை பெற்ற நானும் முப்பது ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டு திம்பு பேச்சு வார்த்தைகள் போன்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட சித்தார்த்தன் அவர்களும் உங்களுடன் இணைந்து செயற்படுவதை பொருத்தமற்றதென கருதினால் தயவுசெய்து கூறுங்கள். நாம் எவரினதும் முதுகில் ஏறி சவாரி செய்வதோ அல்லது எம்மீது எவரும் சவாரி செய்வதையோ அனுமதிக்கப் போவதில்லை. நன்றியுடன் இக்கடிதத்தை பூர்த்தி செய்கின்றேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறினேன்.
நடந்து முடிந்த தேர்தல் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி தலைவரும், அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தன், அரசும் சர்வதேச சமூகமும் மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டுமென்றும் தவறின் தமிழ் மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாக கணிக்கப்படுவார்களென்றும் கூறியுள்ளார். இத்தகைய அறிக்கைகள் அவர்களின் மட்டத்தில் தேர்தல் காலங்களில் மட்டும் வெளிவருவது வழக்கம்.
அரசும் சர்வதேச சமூகமும் தமது தேர்தலை அங்கீகரிக்கமாட்டார்கள் என்ற பயம் சம்பந்தன் அவர்களுக்கு ஏற்பட்டதன் காரணமென்ன? இலங்கை தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65.119 மட்டுமே. இது யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 9 வீதம் ஆகும். திரு. சம்பந்தனுடைய கட்சி 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 90 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாக அவர் தம்பட்டம் அடித்தாலும் அத் தேர்தலில் அவரின் தமிழரசுக் கட்சி முற்றுமுழுதாக தனது நாணயத்தை இழந்துவிட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு புகழைத் தேடித் தந்தவர்களில் சம்பந்தன் அவர்களும் நானும் அடங்குவோம். இந்தப் பாரம்பரியத்தை இரா. சம்பந்தன் ஏன் கடைப்பிடிக்கவில்லை. தந்தை செல்வாவின் நாமத்தைகூட உச்சரிக்கும் தகுதி தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கோ செயலாளர் மாவை சோனாதிராசா அவர்களுக்கோ இல்லை.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகவே தொடர்ந்து செயற்பட்டனர். புலிகள் இயக்கத்தினரையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரையும், ரெலோ இயக்கத்தினர் இருவரையும் மற்றும் வன்னி, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிலரையும் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்த பின்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்காது கடந்த தேர்தல் வரையும் அதே பெயரில் செயற்பட்டனர்.
தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இயங்குகின்ற இலங்கை தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இதுவே காரணம். தமிழ் மக்களை தொடர்ந்தும் தவறாக வழிநடத்தாது இலங்கை தமிழரசுக் கட்சியினர் மிகக் கண்ணியமான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பென அழைப்பதை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையான வரலாறு அப்பாவி தமிழ் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு விட்டது தெரிந்தோ, அப்பாவித்தனமாகவோ, சில புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள் போன்றோரால் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பை 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென நம்பவைத்து தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர்.
உண்மையில் இந்த தேசிய கூட்டமைப்பானது 2001 ஆம் ஆண்டு எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை அநேகர் மறந்து விட்டனர். இப்போது ‘உண்மை’ வெளிப்பட்டு விட்டது. 06 ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் தமது கடமைகளை செய்யாத படியினால் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தை புகட்டவென காத்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இப்பாராளுமன்ற உறுப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுதும் மக்களுக்கு வேண்டிய கடமைகளை செய்ய தலைமையின் அனுசரணையின்மையால் பெருமளவு உறவினர்களையும், பல கோடி பெறுமதிமிக்க சொத்துக்களையும் இழக்க நேர்ந்தது என்பதை உணர்கின்றனர்.
செல்வாக்குமிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வழி காட்டியவர்களே இப் பேரழிவுகளுக்கும், உயிர்களின் இழப்புக்களுக்கும் பொறுப்பாளியாவார்கள். இழந்த உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நட்டஈட்டை பெற்றுத்தருவதில் தவறிவிட்டனர்.
அப்பாவி மக்களை புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தக்கூடாதெனவும் அவர்களை விடுவிக்கும்படியும் சர்வதேசமே வேண்டிநின்ற போதும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்கள்மீது மிக மிக அக்கறை காட்ட வேண்டிய இவர்கள் மெளனம் சாதித்தனர். அன்று பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு புது உறுப்பினர்தான் அதை செய்ததாக உண்மைக்குப் புறம்பான ஒரு புதுக்கதை கூறுகிறார். இந்தப் பாவத்தில் எனக்கு பங்கில்லை.
ஆறு ஆண்டுகள் வன்னியில் இடம்பெற்ற அத்தனை மரணங்கள், யுத்தத்துக்கு ஆட்சேர்த்தல், பிள்ளைகளை பறிகொடுத்த அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் போன்ற அனைத்துக்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தன் அவர்கள் தமிழரசுக் கட்சி தலைவராகவோ, அன்றேல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்தும் வட கிழக்கு மாகாண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தன்மையை இழந்துவிட்டார்.
கடைசி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும்படி தவறாக வழிகாட்டியவர்கள் தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவார்களா? சம்பந்தன் அவர்கள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பை சில ஆசனங்களை வெற்றிபெற வைத்தமைக்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் இவர்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்தில் 65.119 வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
சம்பந்தன் அவர்கள் கூறியதுபோல் தாம் சரத் பொன்சேகாவிற்கு பெற்றுக்கொடுத்த 113.873 வாக்குகளோடு ஒப்பிடுகையில் சில உண்மைகள் தெரியவருகின்றன. கடும் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பொறுப்பற்ற முறையில் பிரசாரம் செய்தவர்கள் நடந்துகொண்ட முறையே. புத்திஜீவிகள் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும், சுதந்திர ஊடகவியலாளர்கள் எனவும் கூறிக் கொண்டவர்கள் சில ஊடகவியலாளர்களுடன் இணைந்து யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் திரைமறைவில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தாது மறைந்துவிட்டனர்.
புலிகளின் மரணங்கள் இறுதிக்கட்டப் போரின் போதும் சிறுவர்களைப் போராளிகளாக பலவந்தமாக சேர்க்கப்பட்டமையையும் முற்றுமுழுதாக மக்களுக்கு மறைத்து விட்டனர். முல்லைத்தீவில் குடியிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு இவ்விடயங்கள் கொண்டுவரப்பட்ட போதும் யுத்த காலத்தில் இவ்வாறான இழப்புக்கள் தவிர்க்க முடியாததென்று கூறியுள்ளார். இறுதியாக வன்னியில் அவர் நீர் இறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்கினார் என அறியப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire