லண்டனைத் தளமாகக் கொண்ட பிரபல போன்ஹாம்ஸ் தனியார் நிறுவனத்தினால் ஏலத்தில் விடப்படுகின்ற இலங்கையின் அனுராதபுர-காலத்தைச் சேர்ந்த சந்திரவட்டக்கல்லை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இலங்கை தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் தலைமை இயக்குநர் கலாநிதி செனரத் திசாநாயக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார்.கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் பழமையான இந்த சந்திரவட்டக்கல் பிரிட்டன் பணத்தில் 50 ஆயிரம் பவுண்டுகள் வரை (இலங்கைப் பெறுமதியில் சுமார் ஒரு கோடி ரூபா) பெறுமதியானது என்று பிரிட்டிஷ் பத்திரிகையொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.ஒரு தொன் எடையும் 8 அடி நீளமும் கொண்ட கிரானைட் கருங்கல்லால் ஆன இந்த கல் 1950களில் தேயிலைத் தோட்ட முதலாளி ஒருவரால் பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக போன்ஹாம்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இதேவேளை, அனுராதபுர வரலாற்று பாரம்பரிய பிரதேசத்தில் 1890-களில் இருந்தே தொல்பொருள் ஆய்வுகள் நடந்துவருவதாகவும் அங்கிருந்து சந்திரவட்டக்கல் ஒன்று காணாமல்போயிருப்பதற்கான பதிவுகள் எதுவும் தம்மி்டம் இல்லை எனவும் இலங்கை தொல்பொருள் ஆய்வுத் துறை தலைமை இயக்குநர் செனரத் திசாநாயக்க தமிழோசையிடம் தெரிவித்தார்.
அனுராதபுர காலத்தைச் சேர்ந்த 8 சந்திரவட்டக்கற்கள் தம்மால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தக் கல் தொடர்பான எந்தவொரு பதிவும் தம்மிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.
பிரிட்டனில் இருக்கின்ற கல் தொடர்பில் இலங்கைத் தூதரகம் ஆராய்ந்து பார்ப்பதாகவும் உண்மையான சந்திரவட்டக்கல் என்று உறுதிப்படுத்தப்பட்டால் அதனை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் செனரத் திசாநாயக்க தெரிவித்தார்.
அனுராதபுர இராசதானிக் காலத்தில் (கி.மு. 400- கி.பி.1017 வரையான காலம்) அமைந்த விகாரைகளின் நுழைவாயிலில் கருங்கல்லால் அமைந்த மிகப்பெரிய படிக்கல்லே சந்திரவட்டக்கல்; குதிரை, சிங்கம், யானை போன்ற மிருகங்கள் மற்றும் சில பறவைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும் அந்தக் கற்கள் பௌத்தக் கட்டடக் கலையில் மிகவும் பிரபல்யம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து பல்வேறு தொல்பொருட்கள் வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அவை இன்று லண்டன், பொஸ்டன் மற்றும் பல வெளிநாட்டு நகரங்களில் இருப்பதாகவும் தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவர் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire