lundi 2 février 2015

உலகம் முழுவதும் இலங்கை அகதிகள் என்ற வார்த்தை இருக்க கூடாது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பெருந்தோட்டநிறுவனங்களின் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் இந்தியாவில் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தியாவின் கோபாலபுரம் பிரதேசத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
தி.மு.க. தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போது உள்ள அரசியல் மாற்றம் குறித்தும், அரசியல் சூழ்நிலை குறித்தும், தமிழ் மக்களின் நிலை குறித்தும் கருணாநிதியிடம் எடுத்து கூறினேன்.
ராஜபக்ஷ மீதான போர்க் குற்றம் குறித்து இலங்கை அளவில் விசாரணை மேற்கொள்ளப்படும். முகாம்களில் உள்ள தமிழர்கள் மீண்டும் அவர்கள் வாழ்விடத்திற்கு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். மேலும் இராணுவம் அதிகம் உள்ள முகாம்களில் இருந்து இராணுவத்தினர் திரும்ப பெறப்படுவார்கள்.
உலகம் முழுவதும் இலங்கை அகதிகள் என்ற வார்த்தை இருக்க கூடாது. எனவே மற்ற நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும். இலங்கையில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. நிம்மதியாக வாழலாம். விருப்பம் உள்ளவர்கள் வரலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விரைவில் நாங்கள் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து பேச இருக்கிறோம். அதற்கு நாங்கள் நேரம் கேட்டு இருக்கிறோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire