lundi 2 février 2015

அல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்;கலையகம்

பாரிஸ் நகரில் புதிதாக வந்து குடியேறும் தமிழ் இளைஞர்கள் மத்தியில், பிரான்ஸ் பற்றி நிறைய தவறான கருத்துக்கள் காணப்படுவது வழமை. அதற்கு முதல் காரணம் அவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறார்கள். பாரிஸ் நகரை சுற்றிலும், ஏராளமான தமிழர்கள், குறைந்தது ஐம்பதாயிரம் பேர் வாழ்வதால், அது ஒரு மூடுண்ட சமுதாயமாக இருக்கிறது.

Gare du Nord ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள லா சாப்பல் (La Chapelle), பாரிஸ் நகரில் தமிழர்கள் அதிகமாக கூடும் பகுதி ஆகும். அங்கே வரிசைக்கு தமிழ்க் கடைகள் தான் இருக்கும். பலசரக்குக் கடைகள், புடவைக் கடைகள், உணவகங்கள், முடி திருத்தும் சலூன், புத்தகக் கடை போன்ற எல்லாம் அங்கே உண்டு. போதாக்குறைக்கு வார இறுதியில் திரையரங்கில் புதிதாக வந்த தமிழ் சினிமாப்படம் போடுவார்கள்.

உண்மையில், சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் கூட, அந்தப் பகுதியில் அல்ஜீரியர்கள், ஆப்பிரிக்கர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள் தான் பெருமளவில் இருந்தன. புலம்பெயர்ந்த தமிழர்கள் சில தெருக்களை தமக்கென "ஆக்கிரமித்து" விட்டார்கள்.

பாரிஸ் வாழ் தமிழர்கள் பெரும்பான்மையானோர், தமிழரைத் தவிர மற்ற இனத்தவருடனும் பழகுவதில்லை. (தமக்கு அப்படி எந்த தேவையும் இல்லையென்று சிலர் நேரடியாகவே சொல்வதுண்டு.) இது ஒரு வகையில் "கெட்டோ" (Ghetto) மனப்பான்மையை உண்டாக்குகின்றது. 

பெரும்பாலான பாரிஸ் தமிழர்களுக்குகும், அல்ஜீரிய சமூகத்திற்கும் இடையில் நட்பு ரீதியான பழக்கம் மிகவும் குறைவு.  அல்ஜீரியர்களை "அடையார்" என்று பட்டப் பெயர் சூட்டி அழைப்பார்கள். நேரடிப் பழக்கம் இல்லா விட்டாலும், ஆதாரம் இல்லாவிட்டாலும், எப்போதும் அல்ஜீரியர்களைப் பற்றிப் பல எதிர்மறையான கதைகளை மட்டுமே பேசுவார்கள்.

ஏனென்று கேட்டால், அவர்கள் "திருடர்கள், கிரிமினல்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள்," என்று பல காரணங்களை அடுக்குவார்கள். போதாக்குறைக்கு, "சமீப காலமாக பிரான்ஸின் அமைதியைக் குலைக்கும், ஷரியா சட்டம் கோரும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் அவர்கள் தான்..." என்று சொல்வார்கள்.

இன்றைக்கு, பிரான்சில் வாழும் அல்ஜீரியர்களை, "இஸ்லாமிய பயங்கரவாதிகளாக" அல்லது "திருடர்களாக" மட்டுமே கருதி மிரண்டு கொண்டிருக்கும், அரைவேக்காடுகளுக்கு இந்த உண்மை தெரிந்திருக்க நியாயமில்லை. பிரான்சில் வாழும் அல்ஜீரிய குடியேறிகளில் பலர், அந்த நாட்டிற்கு சர்வதேச புகழைத் தேடித் தந்திருக்கிறார்கள்.

அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமாக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என்று பல துறைகளிலும் பிரகாசித்து வந்திருக்கின்றனர். பலரது புகழ் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றது. பிரபல பெண் ஆவணப் பட இயக்குனர் யாமினா (Yamina Benguigui), இன்றுள்ள பிரான்சுவா ஹோலந்த் அரசினால் கடல் கடந்த பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

பிரெஞ்சு தேசிய கால்பந்தாட்ட அணியில் விளையாடிய சிடான் (Zinedine Yazid Zidan) பற்றி கேள்விப் படாத விளையாட்டு இரசிகர்களே இருக்க முடியாது. இப்படிப் பலரது பெயர்களைக் குறிப்பிடலாம்.

அப்படியான, பிரான்சில் குடியேறிய அல்ஜீரிய பிரபலங்களில் ஒருவர் காலித் (Khaled Hadj Ibrahim). உலகப் புகழ் பெற்ற பொப் இசைப் பாடகர். அமெரிக்காவில் சிறந்த பாடகருக்கான கிராமி விருதை (Grammy Awards)பெற்றவர். அல்ஜீரியாவில், காலித் பிறந்த ஊரில், அடித்தட்டு சமூக மக்களால் இசைக்கப்படும், நாட்டார் பாடல்கள் வகையை சேர்ந்த ராய்(Raï) இசை மூலம் உலகப் புகழ் பெற்றார். தமிழக சினிமா மூலம் பிரபலமான "கானா பாடல்கள்" வகையுடன் இதை ஒப்பிடலாம்.

1996 ம் ஆண்டு, ராய் இசையில், காலித் பாடிய "ஆயிஷா... ஆயிஷா..." எனும் பிரெஞ்சு மொழிப் பாடல், பல ஐரோப்பிய நாடுகளில் வருடக் கணக்காக பிரபலமாக இருந்தது. அன்று அந்தப் பாடல் வரிகளை முணுமுணுக்காத ஐரோப்பிய இளைஞர்களின் வாய்கள் இல்லை. MTV போன்ற இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சேனல்களில், வாரக் கணக்காக முதல் பத்து பாடல் தெரிவுகளில் ஒன்றாக இருந்தது.

அந்தக் காலங்களில், காலித்தின் ஆயிஷா ஆயிஷா பாடலின் இசையை நகலெடுத்து, நமது தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்தனர். இன்றைக்கும் அந்தப் பாடல்களை இரசிக்கும் தமிழர்கள் பலருக்கு, தாங்கள் ஒரு அரபி இசையை கேட்கிறோம் என்ற உண்மை தெரியாமல் இருக்கலாம்.

இசைக்கு மொழி கிடையாது. ஓரளவு பிரெஞ்சு மொழி தெரிந்தவர்கள், அந்தப் பாடலை இரசித்துக் கேட்க விரும்புவார்கள் என்பதால், பாடல் வரிகளை கீழே தந்திருக்கிறேன்.  

Aucun commentaire:

Enregistrer un commentaire