mardi 1 janvier 2013

இராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

essayஇராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

* அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்தால் மோசடிக்கு இடம் ஏற்படும்

* மாகாணசபை முறையை இந்தியா திணிக்கவில்லை

*பண்டாரநாயக்க காலத்திலிருந்து விவாதிக்கப்பட்ட விடயம் அதிகாரப் பகிர்வு

* மாகாண சபையை ஒழிப்பதால் சிங்கள முஸ்லிம் இளைஞர்களுக்கும் தவறான  செய்தியாகிவிடும்

* மகிந்த சிந்தனையில் அளித்த வாக்குதியை நிறைவேற்றுகஇராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் மக்களின் இறைமையின் செயற்பாடானது பிரிக்கப்பட்டுவிட்டது. அது நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று ஜனாதிபதிக்குமிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

சட்டம் தயாரிக்கும் அமைச்சரவையை ஜனாதிபதி கட்டுப்படுத்துகிறார். அதற்கு தலைமை வகிக்கிறார். அது எண்ணிக்கை அதிகமான அமைச்சர் சபையானாலும் நாடாளுமன்றத்துக்கு அவர் பதிலளிப்பதில்லை.

அமைச்சுகளுக்கான செயலாளர்கள், பொதுச்சேவைகள் ஆணைக்குழு மற்றும் ஆணைக்குழுக்களின் செயலாளர்களையும் அவரே நியமிக்கிறார். அந்த வகையில் பொதுச் சேவைகள் முழுவதையும் அழுத்தமாகக் கட்டுப்படுத்துகிறார் ஜனாதிபதி.

ஜனாதிபதியே பிரதம நீதியரசரை நியமிக்கிறார். மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், நீதித்துறை சேவை ஆணைக்குழு ஆகியவற்றையும் நியமித்து அதன் வழியில் நீதித்துறையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.

ஆயுதப்படைகள் மீதும் ஜனாதிபதி கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார். நிதிகளின் மீது நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பாடு உண்டு. ஏனென்றால் வரவு செலவுத் திட்டத்தை அது நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் நிதியமைச்சர் என்ற முறையில் அதுவும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள அதிகாரிகளாலேயே தயாரிக்கப்படுகின்றது.

சகல அதிகாரங்களும் ஒரு தனிநபரிடம்


இவ்வாறாக 1978 ஆம் ஆண்டு அரசமைப்பின்படி பெரும்பாலும் சகல அதிகாரங்களும் நிறைவேற்று ஜனாதிபதி என்ற முறையில் தனிநபர் ஒருவரிடமே குவிக்கப்பட்டுள்ளன.
முக்கியமான சட்டவரைவுகளுக்கு மக்களின் ஒப்புதலை கருத்துக்கணிப்பின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விதிகள் இருந்தபோதிலும் அதுவும் கூட ஜே.ஆர்.ஜயவர்த்தனா காலத்தில் ஒரே ஒருமுறைதான் பயன்படுத்தப்பட்டது.

அதுவும் கூட அவருடைய அரசின் ஆயுளை தேர்தல் நடத்தாமலே நீடித்துக் கொள்வதற்காக. இவைகளுக்கு மாற்றீடாக நாடாளுமன்றம் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும். ஆக சகல அதிகாரங்களும் தனி ஒரு மனிதரிடம் மையப்படுத்தப்பட்டுள்ளன.

13 ஆவது திருத்தம் தந்த நன்மை

13 ஆவது திருத்தமானது மாகாண சபைகளை உருவாக்குவதன் மூலம் கொழும்பிலுள்ள அதிகாரங்களை அங்கிருந்து பகிர்ந்தளித்து மக்களை நெருங்கிச் செல்வதாகவும் 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பிலுள்ள ஜனநாயகத்துக்கு மாறான தன்மைகளை சமப்படுத்துவதாக அமைந்தது.

ஆனால் மாகாண சபைகளை 13 ஆவது திருத்தத்தை அழித்தும் அதன் மூலம் கிடைத்த நன்மையான பணிகளை குலைத்துவிடவும் ஜனநாயகத்துக்கு மாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது கவலையளிப்பதாகவுள்ளது. சமசமாஜக் கட்சியும் சோஷலிஸ கூட்டணியும் இந்த செயற்பாட்டை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இவ்வாறான ஜனநாயக விரோத செயல்களை நாடாளுமன்றத்திலுள்ள சுமார் 30 அரச உறுப்பினர்கள்  பல அமைச்சர்கள் தலைவர்களும் கூட இதில் எம்முடன் சேர்ந்து கொண்டிருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்தியாவின் திணிப்பா?

மாகாண சபைகள் முறையானது இந்தியாவால் திணிக்கப்பட்டது என்ற கருத்து முற்றிலும் தவறானது. 1926 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ ஆர்.டி.பண்டாரநாயக்க காலத்திலிருந்து சமஷ்டி அமைப்பில் பிராந்திய சபைகளை உருவாக்குவதை அவர் ஆதரித்திருந்தார். அதிகாரப் பரவலாக்கலுக்கான அலகுகளை உருவாக்குவது பற்றிய பிரச்சினை விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.

சிலர் மாகாணங்களை ஓர் அலகாக ஏற்றுக் கொள்ளலாம் என்று கருதினார்கள். வேறு சிலர் மாவட்டங்களை விரும்பினார்கள். ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோதுமாகாண சபைகளை ஓர் அலகாக ஏற்றுக் கொள்வது என்ற வகையில் கருத்துக்கள் நகர்ந்தன.

இன்னும் மாகாண சபை முறையானது வெள்ளையானைக்கு ஒப்பானது, பொது நிதிகள் இதன் மூலம் வீணாக்கப்படுவதாகவும் குறை கூறப்படுகின்றது. ஆனால் உண்மை என்னவென்றால், அரசின் முழு செலவினத்தில் 7.5 வீதம்தான் மாகாண சபைகள் மூலம் பயன்படுத்தப்படுகின்றது.

அதன் பெருந்தொகையும் பாடசாலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கான சம்பளம் மற்றும் செலவுகளுக்காகவே போகின்றது. மாகாண சபைகள் இல்லாது போனாலும் இவை அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டியவைகளே. மேலும் இந்தப் பணத்தில் ஒரு வீதமளவிலான பணம் அரசியல்வாதிகளின் செலவினங்களுக்குப் போகின்றது.

இவைகளில் மக்கள் நன்மைக்கான முக்கிய அதிக செலவு பிடிக்கும் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிக்கான செலவுகளை மாகாண சபைகள் நேரடியாக தமக்கு வரும் பணத்திலிருந்தே செய்து கொள்கின்றன.

இதற்கு மாற்றீடாக மாவட்ட சபைகளை நிறுவுவது பற்றி ஆலோனை தெரிவிக்கப்படுகின்றது. இவை பொருளாதார ரீதியில் பயனளிக்கவல்லதல்ல என்பதுடன் 25 மாவட்ட சபைகள் இருக்குமென்பதால் செலவுகளையும் அதிகரிக்க செய்வனவாக இருக்கும்.

அதிகாரம் பகிர்வதை தடுப்பதற்கு

இதன் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் மாகாண சபைகள், பிறகு உள்ளூராட்சி சபைகள் கடைசியில் கிராம சபைகள் மூலமாக மக்களை அதிகாரமுள்ளவர்களாக ஆக்கும் வழிமுறைக்கு ஒரு முடிவு கட்டி எல்லாத் தீர்மானங்களையும் கொழும்பிலிருந்தே எடுத்துக் கொள்வதற்கு வழி செய்வதே.

மாகாண சபைகள் உள்ளூராட்சிச் சபைகள், கிராம சகைள் மூலமாகவே மக்களுக்கு அதிகாரங்களைப் பகிரமுடியும். அதன் மூலம் அவர்களே தமது அபிவிருத்திகளை செய்து, ஊழல்களை ஒழித்துக் கொள்வார்கள். அதன்மூலம் அவர்களை ஒரே நாட்டுக்குள் ஒருங்கிணைக்க முடியும். அவ்வாறாயின் அவர்கள் ஒருபோதும் பிரிவினையைக் கோரமாட்டார்கள்.

உண்மையில் 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவானதையடுத்து ஆயுதம் ஏந்திய எல்.ரி.ரி.யினரைத் தவிர ஏனைய எல்லா போராளிக் குழுக்களும் ஆயுதங்களை வைத்துவிட்டு ஜனநாயக நீரோடையில் இணைந்து கொண்டன.

மாகாண சபை முறையை ஒழிப்போமானால் நாம் ஒரு தவறான செய்தியை வழங்குபவர்களாக இருப்போம். அது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கும்  ஆனதாகவே இருக்கும். இங்கும் வெளிநாட்டிலும் செயற்படும் எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் மற்றும் ஜெனிவாவில் அமெரிக்காவின்  தலைமையில் நடைபெறும் சதித்திட்டத்துக்கு எம்மை தாக்குவதற்கான வெடி மருந்தை வழங்கியவர்களாவோம்.

ஒரு தனி மனிதரால் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது அவர் என்னதான் புத்திசாதுரியமானவராக இருந்தாலும் மோசமான தவறுகளை இழைத்துவிட முடியும். உதாரணத்துக்கு பிரதம நீதியரசர் நியமனம்.

ஒரு நபரிடம் அதிகாரங்கள் குவியும் போது அதிகாரத் துஷ்பிரயோகம் நிச்சயமாக இடம்பெறமுடியும். அதிகாரம் மோசடிக்கு இடம்கொடுக்கும். முழுமையான அதிகாரம்,  முழுமையான மோசடிக்கு வழிவகுக்கும் என்பது முதுமொழி.

இராணுவ சர்வாதிகாரம் தோன்றும்


அடுத்து வரும் ஜனாதிபதியாக இராணுவப் பின்னணியுள்ள பொன்சேகாவைப் போன்ற  ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் இராணுவ சர்வாதிகாரம் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கின்றது. இப்பொழுதும் கூட செயற்பட்டுக் கொண்டிருக்கும் அது பெரிதாக விஸ்தரிக்கப்பட்டு விடும்.

எனவே தான் எவ்வளவு விரைவாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து 1972 ஆம் ஆண்டு அரசமைப்பில் பொருத்தமான சீர்திருத்தங்களை செய்து ஒரு  கலப்பு முறையான தேர்தல் முறைக்கு வருகிறோமோ அது நாட்டுக்கும் நாட்டின் எதிர்காலச் சந்ததியினருக்கும் நன்மையாக இருக்கும்.

அடுத்த தேர்தலில் இதைச் செய்வதாக வாக்குறுதியளிப்பவர்கள் இந்த அபரிமிதமான அதிகாரங்கள் கிடைத்த பின் செய்வார்கள் என்று நம்ப முடியாது. நாம் இன்றைய ஜனாதிபதியை மஹிந்த சிந்தனையில் அவர் வாக்குறுதியளித்ததை செய்யும் படி கோரி நிற்கின்றோம்

Aucun commentaire:

Enregistrer un commentaire