mardi 1 janvier 2013

ஆண்மை நீக்கம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு


பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.
பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை 30 நாட்கள் வரை காவலில் வைக்கவும், அவர்கள் முன் ஜாமீன் பெறாமல் இருக்கவும், கைது செய்யப்படுவோர் வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் விடுவிக்கப்படாமல் இருக்கவும் சட்டத்திருத்தங்கள் வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழகத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவச் சிகிச்சைக்கான மொத்தச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்வதுடன், அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகளையும் அரசே செய்யும் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் புதுடில்லி சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தனது வேதனையைத் தெரிவித்திருக்கும் அவர், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் குறைவாகவே இருந்தாலும், அறவே அவற்றைக் களைவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்.
குண்டர் சட்டம் திருத்தப்படும்
அதன்படி பாலியல் பலாத்காரம் போன்ற கொடிய குற்றங்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால், சம்பந்தப்பட்டவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு வழி செய்யும் வகையில் குண்டர் தடுப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்படும்.
அண்மையில் அவர், முதற் குற்றமே சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்குமானால் அத்தகைய சம்பவங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தினைப் பயன்படுத்தவென தகுந்த சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படும் எனக்கூறியிருந்தார்.
பொதுக் கட்டடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்படும், பொதுமக்கள் அதிகமாக நடமாடும் வணிக மையங்கள், பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடியவர்களின் நடமாட்டத்தைச் சீருடை அணியாத காவல்துறையினர் கண்காணித்து, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பர்.
மேலும் பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படவிருப்பதாக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
இந் நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞர்களாக பெண்களே நியமிக்கப்படுவார்கள். அந்நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக தினசரி வழக்குகளை நடத்தி, விரைவில் தீர்ப்பு பெற சம்பந்தப்பட்டவர்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.காவல்துறைக்கு பயிற்சி
பாலியல் வன்முறை வழக்குக்கள் கொடுங்குற்றங்களாகக் கருதப்பட்டு, துணைக் கண்காணிப்பாளர்களின் நேரடி மேற்பார்வையில் ஆய்வாளர்கள் புலன் விசாரணை மேற்கொள்வது, இயன்றவரை இவ்வழக்குவிசாரணைகளில் பெண் காவல் ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவது, மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணைத் தலைவர்கள் ஆகியோரும் இவ்வழக்கு விசாரணைகளை ஆய்வு செய்வது, தற்போது புலன் விசாரணையிலும், நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருக்கும் அனைத்து பாலியல் வன்முறை வழக்குகளையும் மண்டல காவல்துறைத் தலைவர்கள் தீவிர ஆய்வு செய்து சட்டம், ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநருக்கு 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்புவது உள்ளிட்டவையும் புதிய அணுகுமுறையில் அடங்கும்.
குழந்தைகளுக்கென 24 மணி நேரமும் உதவி செய்யும் வகையில் இலவச தொலைபேசி அழைப்பு சேவை இயங்கி வருவது போல், ஆங்காங்கு தனித்தனியே இயங்கும் பெண்கள் உதவித் தொலைபேசி சேவையினை ஒருங்கிணைத்து ஆதரவற்ற மகளிருக்கு ஆலோசனை அளிக்கும் பயிற்சி பெற்றவர்களையும் உள்ளடக்கிய புதிய அமைப்பொன்றும் நிறுவப்படும்.
பாலியல் வன்முறை வழக்குகள், பெண்கள் இன்னல் தடுத்தல் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் சட்டம் 2012 குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அப் பயிற்சி வகுப்புகளில், பாலியல் வழக்குகளில் சரியான விசாரணை நடத்துவது பற்றி மட்டுமின்றி, இக்குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களை கனிவுடனும், கண்ணியத்துடனும் நடத்துவது குறித்தும் போதிக்கப்படும் என்று கூறும் முதல்வர் பெண்களிடம் அச்ச உணர்வு நிலவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் எனவும் உறுதியளித்திருக்கிறார்.
புதுடில்லி சம்பவம் குறித்து இப்போதுதான் முதல்முறையாக ஜெயலலிதா கருத்து தெரிவித்திருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

Aucun commentaire:

Enregistrer un commentaire