- வரதராஜப் பெருமாள்
“தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்பார்கள். இது ஜனாதிபதி மஹிந்த அவர்களுக்கும் பொருந்தும். அவர் தம்பிகளை மட்டுமல்ல, தனது அண்ணனையும் பொறுத்த அரசியல் அதிகார பீடத்தில் வைத்திருக்கிறார். அவர் தனது மகன்களையும் இறைமை அதிகாரங்கள் பல பெற்றவர்களாக செயற்பட வைத்திருக்கிறார். 2005ம் ஆண்டுக்கு முதல் மஹிந்தவைப் பார்த்தவர்கள் அவரை “பௌத்த போதனைகளின் பண்புகள் நிறைந்தவர்”, “சோசலிசத்தின் நண்பன்”, “தொழிலாளர்களின் தோழன்”, “ஏகாதிபத்தியம், சியோனிசம், பேரினஆதிக்கவாதம் போன்றவற்றின் எதிரி” என்றுதான் பார்த்தார்கள். இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் அவரை “ஒரு நல்ல சிங்கள பௌத்தன் ஆனால் இனவாதியல்ல” என்றுதான் அடையாளம் கண்டார்கள். இந்தியா அவரையும் அவரது சகோதரர்களையும் “அவர்கள் ஒப்புக் கொள்வதை செய்கிறார்கள், தம்மால் முடியாததை நேரடியாக தமக்கு முடியாது” என்கிறார்கள் என அவர்களது நேர்மையில் நம்பிக்கை வைத்தது. 2005ம் ஆண்டு மஹிந்தாவை ஜனாதிபதி ஆக்குவதில் பெரும் பங்காற்றிய பிரபாகரனும் அவரை ஒரு யதார்த்தவாதி என்றார். எனினும் பிரபாகரன் மஹிந்த அவர்கள் ஒரு பலயீனமான ஜனாதிபதியாக இருப்பார் என்றே எதிர்பார்த்தார். ஆனால் மஹிந்த அவர்கள் ஜனாதிபதி ஜெயவர்த்ததனாவின்; கணித்து செயற்படும் ஆற்றல், ஜனாதிபதி பிரேமதாசாவின் நினைத்ததை நினைத்தவாறே முடிக்கும் வல்லமை, ஜனாதிபதி சந்திரிகாவின் மக்கள் கவர்ச்சி ஆகிய மூன்று ஆளுமைகளினதும் மொத்த உருவாகமாக விசுவரூபம் எடுத்து நிற்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
2005ல் அவர் ஆட்சிக்கு வந்த உடன் 13வது அரசியல் யாப்பு திருத்தத்துக்கும் அப்பாற் சென்று மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கி இனப்பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு காணப் போவதாக உறுதி அளித்தார். பிரபாகரன் ஏற்றால் தான் வன்னிக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணத் தயாராக உள்ளதாக அக்கறை காட்டினார். தனது ஆசை ஆசியாவின் அதிசயமாக இலங்கையை ஆக்குவதென அறிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷாவை ஓரளவாயினும் அறிந்தவர்கள் பலர் தமது கருத்துக்களிலும் எழுத்துக்களிலும் “மஹிந்த அவர்கள் தான் நினைத்ததை செயலுக்குக் கொண்டு வரும் வல்லமை கொண்டவர். அவருக்கு தான் எதைச் செய்ய வேண்டும் அதை எப்படிச் செய்ய வேண்டும் அதை எப்போது செய்ய வேண்டும் என விடயங்களைக் கணித்துச் செயற்படுவதில் மிகத் தெளிவானவர்” என்றே கூறினார்கள்
நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜபக்ஷாக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்களும், அவர்களின் கைகளில் தொடர்ந்து அதிகாரங்கள் எல்லையற்ற விதமாக குவிக்கப்பட்டு வரும் விதங்களும், நாட்டின் பாதுகாப்பில், சட்ட ஒழுங்கு நடைமுறைகளில், கல்வியில், பல்கலைக் கழகங்களின் நிர்வாகங்களில், திறைசேரி நிதிகளில், மாவட்ட சிவில் மற்றும் அபிவிருத்தி நிர்வாகங்களை இராணுவமயமாக்குவதில், தேசிய இயற்கை வளங்கள் மற்றும் நில வளங்களை சுயசொத்துக்களாக மாற்றுவதில் என பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் ஏற்பட்டு வரும் ராஜபக்ஷாக்களின் எதேச்சாதிகார மாற்றங்கள் தொடர்பாக நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளிலும் நாட்டின் ஜனநாயக அரசியலிலும் அக்கறை கொண்டோர் பல தொடர் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
மஹிந்த அவர்கள் தேர்தல் மூலம் அடுத்தடுத்து மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியானவர். எனினும்; அவரும் அவரது வாரிசுகளும் பர்மாவில் நடந்து வரும் இராணுவ குண்டர் ஆட்சி, பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் நடத்திய ஆட்சி, இந்தோனேசியாவில் சுகார்ட்டா நடத்திய ஆட்சி, சிலியில் பினோட்சே நடத்திய ஆட்சி ஆகியவற்றை அரசியல் வழித்தடமாகக் கொண்டு செயற்பட முனைவதாகவே இன்று பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உள்நாட்டில் புலிப்பயம் காட்டும் அரசியல், சிங்கள பௌத்த தேசபக்தி பிரச்சாரம், இராணுவத் தலைமை அதிகாரிகளின் ஆதரவு, சிதறிக் கிடக்கும் சிறுபான்மைக் கட்சிகள் அவற்றின் சீரழிந்த தலைமைகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு சாம பேத தான தண்டம் என அனைத்தையும் பாவித்து மீண்டும் மீண்டும் தேர்தல்களில் வெல்லலாம், அதிகாரங்களைத் தங்கள் கைகளில் குவித்து வைத்துக் கொள்ளும் வகையான சட்டங்களை ஆக்கிக்கொள்ளலாம் என்ற நினைவுகளோடும் திட்டங்களோடுமே செயற்படுகிறார்கள் என்று பலரும் தெரிவிக்கும் கருத்துக்களில் தவறு இருப்பதாகக் கருத முடியவில்லை.
நாட்டில் கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளாக தப்பிப் பிழைத்து வரும் தேர்தல் ஜனநாயகத்துக்கும், இன்னும் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் சட்டத்தின் ஆட்சி முறைக்கும், அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்ட வகையில் இன்னமும் நூலிழையில் தொங்கும் நாட்டு மக்களின் இறைமைக்கும் ராஜபக்ஷ சகோதரர்கள் இறுதிச்சடங்கு நடத்தி விடுவார்களோ என்ற பயம் இன்று நாட்டில் தலைதூக்கியுள்ளது.
நாட்டின் நீதியரசருக்கே நீதி கிடைக்கவில்லை என்று ஏற்பட்டுள்ள நிலைமையானது நாட்டின் சட்டத்தின் ஆட்சியையும், நாட்டின் வலுவேறாக்க அரசமைப்பு முறையையும்; முடிவு கட்டுவதற்கான இறுதிக்கட்டமோ என்று கருதத் தூண்டியுள்ளது. “நாட்டின் சர்வ அதிகாரங்களினதும் இறைமை ராஜபக்ஷாக்களிடமே உள்ளது”, “ராஜபக்ஷாக்கள் எவ்வேளையிலும் தவற விடமாடார்கள் எனவே அவர்கள் நாட்டின் சட்டங்களுக்கும் நீதி மன்றங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள்”, ராஜபக்ஷாக்களும் அவர்களின் அரவணைப்புக்கு உட்பட்டவர்களும் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் ஏனையவர்கள் எதைச் செய்தாலும் அரசின் பொலிஸ் படைகளும் உளவுப் படைகளும் அவர்களைத் துரத்தும்”, “நாட்டின் எல்லா அரச நிறுவனங்களும் அரச நிர்வாகங்களும் ராஜபக்ஷாக்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் மட்டுமே உரியன”, “ராஜபக்ஷாக்களை அண்டினால் சொர்க்க வாழ்வு சீண்டினால் அதளபாதாள அழிவு” என்ற நிலைமைகளை உருவாக்குவதை நோக்கியே நாட்டை அவர்கள் கொண்டு செல்கிறார்கள் என்ற கருத்தே இன்று நாட்டிலும் உலக மன்றங்களிலும் வலுவடைந்து வருகின்றது.
இலங்கை பல குறைபாடுகளின் மத்தியிலும் இன்னமும் ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஆட்சியாளர்களின் அதிகார இருப்புகளும் ஆட்சி மாற்றங்களும் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மணிமுடி தாங்கிய மன்னருமல்ல. அவரது சகோதரர்களும் மகன்களும் வாரிசு முடியேந்திய இளவரசர்களுமல்ல.
வரலாற்றில் ஆனானப்பட்ட சக்கரவர்த்திகள் எல்லாம் மக்களின் புரட்சிகளி;ன் முன்னால் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள். தமது அதிகாரத்துக்கு எதிரானவர்களென தாம் சந்தேகப்பட்டவர்களுக்கு மரணதண்டனை, தமக்கு அடங்காதவர்களுக்கு சிறைத்தண்டனை என தலை எது கால் எதுவென புரியாமல் அதிகார வெறி ஆட்டம் போட்ட சர்வாதிகாரிகள் எல்லாம் அடக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளின் முன்னால் ஓடி ஒழிந்து முடிந்த போன கதைகள் ஏராளம் வரலாற்றில் உண்டு.
அதிகாரக் கனவுலகில் இருந்து பின்னர் காணாமற் போன பலரது கதைகள் உலகின் வேறு நாடுகளில் மட்டுமல்ல நவீன இலங்கை வரலாற்றிலும் உண்டு. டீ.எஸ் சேனநாயக்காவுக்குப் பின்னால் டட்லி சேனநாயக்கா அதற்குப்பின்னால் தான்தான் அதிகார வாரிசு என முனைந்த ருக்மன் சேனநாயக்கா இன்று அதே ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு மூலையில் தேடிப்பார்க்கப்பட வேண்டியவராக இருக்கிறார்.
ஜே.ஆரின் ஆட்சியின் போது அவரது ஒரே மகனான ரவி ஜெயவர்த்தனா விசேட அதிரடி பொலிஸ் படையை உருவாக்கி அதனை தனது கைக்குள் வைத்துக் கொண்டு எத்தனை ஆட்டம் போட்டார். இன்றைக்கு அவர் எங்கே என்று எத்தனை பேருக்குத் தெரியும்.
எப்படி புலிகள் 2005ல் மஹிந்தவை ஜனாதிபதியாவதற்கு பிரதானமான துணையாக இருந்தார்களோ அவ்வாறே பிரேமதாசா அவர்கள் 1998ம் ஆண்டு ஜனாதிபதி ஆவதற்கு ஜே.வி.பி காரர்கள் துணையாக நின்றார்கள். பின்னர் அதே பிரேமதாசாவின் ஆட்சியால் ஜே.வி.பி.காரர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். அதில் வந்த அகங்காரம் பிரேமதாசாவை கண்மண் தெரியாமல் செயற்பட வைத்தது. பிரேமதாசா புலிகளால் படுகொலை செய்யப்படாமல் உயிரோடிருந்து 2004ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் கூட அவர் நிச்சயமாக மக்களால் தோற்கடிக்கப்பட்டிருப்பார் என்பது பிரேமதாசா ஆட்சியில் இருந்த போதே உறுதியாகிவிட்டது.
எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்காவுக்குப் பிறகு அவரது மனைவி சிறிமா பண்டாரநாயக்கா அதன் பின்னர் யூ.என்.பி.யின் அதிகார வெறி பிடித்த பதினேழு ஆண்டுகால ஆட்சிக்குப் பாடம் புகட்ட இலங்கை மக்கள் சந்திரிகா பண்டாரநாயக்காவை ஆட்சிபீடம் ஏற்றினார்கள்;. ஜே ஆர் மற்றும் பிரேமதாசாவின் ஆட்சியில் வெறுப்படைந்த மக்கள் சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் அடுத்தடுத்து பதினேழு தடவைகள் பல்வேறுபட்ட தேர்தல்களின் போதும் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்தார்கள்.
தொடர்ந்து கொண்டிருந்த போரின் காரணமாக சலிப்படைந்திருந்த மக்கள் ரணில் விக்கிரமசிங்காவினால் சமாதானம் கிடைக்கும் என நம்பி ஆட்சியை மாற்றி ஒப்படைத்தார்கள். ஆனால் ரணில் அவர்களோ பிரதமர் பதவியிலிருந்து ஏறி தானும் ஜனாதிபதிப் பதவியில் எப்படியாவது உட்கார்ந்து தானும் ஒரு முறை சர்வ அதிகாரங்களையும் வைத்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்ற ஆசையில் புலிகளின் கொலைப் பற்களுக்கு தமிழர்களையும் அவற்றை கீறிக் கிழிக்கும் நகங்களோடு துள்ளித்திரிய முழு நாட்டையும் திறந்து விட்டார். அதன் விளைவு அவரை இனி எப்போதுமே எந்தத் தேர்தலிலும் வெல்ல முடியாதவராக ஆக்கிவிட்டது.
மஹிந்த ராஜபக்ஷாதான் 2005ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்ற நிலைமை உறுதிப்பட்டிருந்த வேளையிலும் தனது சகோதரிக்குப் பிறகு தான்தான் நாட்டை கட்டி ஆள வேண்டும் என்ற நப்பாசையில் அநுரா பண்ரநாயக்கா சிறி லங்கா சுதந்திரக் கட்சியை பண்டாரநாயக்காக்கள் தான் தலைமை தாங்க முடியும், எனவே அடுத்த ஜனாதிபதி தான்தான் என்று கங்கணம் கட்டி நின்றார்;. இன்றைக்கு அநுரா பண்டாரநாயக்காவை இலங்கையில் நினைவு வைத்திருப்பவர்கள் எத்தனை பேர்?
புலிகளின் வரலாற்iயும் அவர்களின் எக்காள உறுமல்களையும், ஹிட்லரின் கோயபல்ஸ்களையும் மிஞ்சியவர்களாக அவர்கள் செய்த மாயப்பிரச்சாரங்களையும் மீட்டுப்பாருங்கள். “புலிகள் கொலை செய்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்”, “புலிகள் மக்களிடம் பணம் பறித்தால் அதில் ஒரு தர்மம் இருக்கும்”, புலிகள் சகோதர இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் அழித்தால் அதில் சுதந்திர தாகம் இருக்கும்” என உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையெல்லாம் பேச வைத்த வல்லவர்களல்லவா அவர்கள். …. இன்று எங்கே அவர்கள்?.
சமூகத்தின் பாவங்களை சிலுவையாகச் சுமந்த யேசுநாதரின் சீடர்கள் மட்டும்தான் தாம் விசுவசித்தவரை மறுதலித்தார்கள் என்றில்லை. கொடூர சர்வாதிகளுக்கு தூக்குத்தூக்கி ஏந்தி சேவகம் புரிந்து சுகம் பெற்றவர்களும் அதையேதான் வரலாற்றில் செய்தார்கள். புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பதால் தமக்கென ஒரு சமூக அந்தஸ்த்து, பதவிகள், பணம், ஊர் நாட்டாமை என்றிருந்தவர்களெல்லாம் இன்று “புலிகளின் மாவீரர்களுக்காக சுடரேற்றவில்லை கார்த்திகை விளக்கைத்தான் ஏற்றினோம்” என தங்களது செயலுக்கான உண்மையான நோக்கங்களை வெளியில் சொல்லத் திராணியில்லாமல் தாம் வணங்கிய பிரபாகரனையே மறுதலித்து நிற்கிறார்கள்.
வரலாற்றிலிருந்து மஹிந்தவும் அவரது சகோதரர்களும் கற்றுக் கொள்ள வேண்டும். மஹிந்தவின் அதிகாரம், அரசியற் செல்வாக்கு என்பன எப்போதும் அசைக்கப்பட முடியாதவை போல இன்றைக்கு தோற்றமளிக்கலாம். ஆனால் அரசியல் வரலாறு அப்படிப்பட்டதல்ல. ராஜபக்ஷாக்களின் கோட்டையில் ஒரு பொறுத்த இடத்தில் ஓட்டை விழுந்தால் போதும் அந்தக் கோட்டையை இறுகக் கட்டியிருப்பதாகக் கருதப்படும் கற்களெல்லாம் ஒவ்வொன்றாக உதிர்ந்து கோட்டை மண்ணோடு மண்ணாகி விடும். பதவி. உயரும் போது துணிவு மட்டுமல்ல பணிவும் சேர வேண்டும். செயலாற்றல் உள்ள ராஜபக்ஷாக்களிடம் நல்லவற்றைப் பாதுகாக்கும் மற்றும் உய்ர்ந்தவற்றை மேலும் உயர்த்திடும் சிந்தனையும் சேர வேண்டும்;.
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக தம்பிமாரை மட்டும் வைத்துக் கொண்டு உற்றார் உறவினர்கள், தோள் கொடுத்த நண்பர்கள், துணைக்கரம் கொடுத்த அயலவர்கள் எல்லோரையும் இனித்தேவையில்லை – ஆறு கடந்தாயிற்று இனி ஏன் அண்ணன் தம்பியென - என எள்ளிநகையாடி பகைத்துக் கொள்வது தன்தலையிலேயே ஒருவன் கொள்ளி வைத்து அழிவைத் தேடிக் கொள்ளும் வேலையாகும்.
அதிகார வெறி நல்லோர் பெரியோர்களைப் பகைக்கும், சர்வாதிகார வெறி சந்தேகங்களை அதிகரித்து உறவுகளைக் கெடுத்து நண்பர்களைப் பகைக்கும், கெட்ட நோக்கங்கள் கொண்ட கெட்டித்தனங்கள் அயலவர்களை அந்நியப்படுத்தும். ஒரு நாட்டிற்கு நல்லாட்சி தருவதற்கு தன் சொந்த இனத்திற்கே பிரயோசனம் தராத புலிகளின் கெட்டித் தனங்களைக் கற்று பிரயோகிப்பது பொருத்தமானதல்ல. நல்ல ஆட்சியில்லையென்றால் பொருளாதார அபிவிருத்தியில்லை. அதிகாரம் குவிந்தால் அத்துடன் யாரும் கேள்வி எழுப்ப முடியாத நிலை இருந்தால் இலகுவாக அபிவிருத்திகளை அடைந்துவிட முடியும் என்பது தேசபக்தியின் வெளிப்பாடல்ல மாறாக எல்லாமே நான்தான், எல்லாமே என்னாற்தான், எல்லாமே எனக்குத்தான் எனக் கொள்ளும் பாசிசத்தை - நாசிசத்தை தழுவத்துடிக்கும் சிந்தனைப் பிசகே அது.
நாட்டின் வரிப்பணத்தில் பெருந்தொகை அரச படைகளைப் பராமரிப்பதற்கும்; பெற்ற கடன்களுக்கு வட்டி செலுத்துவதிலும் செலவழிப்பதிலேயே முடிவடைந்து விடுகின்றது. நடந்துகொண்டிருக்கும் விடயங்களுக்கான மீண்டெழும் செலவுகளைச் சமாளிக்க ஒரு சிறு பகுதிக்குக் கூட மீதி வருமானம் போதியதாக இல்லை. பெருவீதிகளை அமைப்பதுவும், பள்ளிக்கூடங்களை சீரமைப்பதுவும், வைத்தியசாலைகளை விருத்தி செய்வதுவும் வெளிநாட்டு உதவிகளிலேயே ஓடுகின்றது. எங்கேயாவது ஒரு வீடு அல்லது ஒரு வீதி அல்லது ஒரு பாலம் அல்லது ஒரு துறைமுகம் அல்லது ஒரு மின்சார உற்பத்தி நிலையம் என எந்த ஒன்று கட்டப்பட்டாலும்; அது ஏதோவொரு நாட்டிடமிருந்து பெற்ற கடன் உதவியில் கட்டியதாகத்தான இருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை மக்கள் அனைவரும் பட்டினி கிடந்தாலும் இதுவரை பெற்றுக் குவித்துள்ள கடன்களை அடைத்து முடிக்க முடியாது என்ற அளவுக்கு இலங்கை கடனாளியாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில் இலங்கை ஆசியாவின் அதிசமாக ஆகிக்கொண்டிக்கின்றது என்று சொல்வதை யாராவது நம்புவார்களா?
நாட்டின் அபிவிருத்தி மக்களின் உழைப்பிலும் அறிவார்ந்தோர்களின் மனமார்ந்த ஒத்துழைப்பிலும், சீரான அரசியல் ஓட்டத்திலும் தங்கியிருக்கின்றது@ அதற்கு நாட்டில் நீதிநியாயம் நிலவ வேண்டும்@ சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும்@ மக்களின் அடிப்படை உரிமைகள் பேணப்பட வேண்டும்@ நாட்டின் அரசியல் யாப்பு ஜனாதிபதியாலும், நாடாளுமன்றத்தாலும், அரச உயர் அதிகாரிகளாலும் கௌரவிக்கப்பட வேண்டும்@ மக்கள் அச்சத்தால் அல்ல மாறாக அன்பால் ஆளப்பட வேண்டும் என்பனவற்றை மஹிந்தவும் அவரது சகோதரர்களும் அவரது ஏனைய வாரிசுகளும் புரிந்து கொண்டால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.
2010ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் கடைசி நாட்களில் தமது எதிர்காலம் பற்றி கிடுநடுங்கிப் போயிருந்ததை ராஜபக்ஷ சகோதரர்கள் மறந்து விடக் கூடாது. அப்போது புலிகளுக்கான யுத்த வெற்றியைப் பெற்று ஆறு மாதங்கள் மட்டுமேதான் கடந்திருந்த காலம். ஆனால் கடந்த மூன்று வருடங்களில் ராஜபக்ஷ சகோதரர்கள் தமக்கெதிரான தேசியப் பிரச்சினைகளையும் அவை தொடர்பான மக்கள் போராட்டங்களையும் தொடர்ந்து அதிகரிக்க வைத்திருக்கிறார்கள் - தமக்கெதிரான அரசியல் எதிரிகளை எண.ணிக்கை ரீதியில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலக நாடுகள் ராஜபக்ஷாவின் ஆட்சியைக் கவிழ்க்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்புது ராஜபக்ஷாக்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும். அரசாங்கத்தை ஆதரித்து நிற்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் எந்த நேரத்திலும் கழன்று கொண்டு போகக் கூடியவை என்பதையும் அவர்கள் அறிவார்கள். இந்தியா ராஜபக்ஷாக்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறியதற்காக மிகுந்த அதிருப்தி கொண்டிருக்கிறது என்பதை இன்னேரம் புரிந்திருப்பார்கள். சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இப்போதைக்கு எதுவும் செயய முடியாதவர்களாக இருப்பினும் உள்ளுர ராஜபக்ஷாக்கள் மீது ஆத்திரம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் மேலும் அவர்கள் எந்த நேரமும் காலைவாரி விடுவார்கள் என்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.
பொருளாதார நெருக்கடிகளாலும், ராஜபக்ஷாக்களின் அகங்கார எக்காளங்கள் கொண்ட ஆட்சி நிர்வாகங்களாலும் யுத்தவெற்றியால் பெருகியிருந்த ஆதரவு படிப்படியாக விலகி குறைந்து வருகின்றது என்பது வெளிப்படை. ரணில் விக்கிரமசிங்காவின் எதிர்க்கட்சி அரசியற் தலைமையின்; பலயீனம்தான் இன்றைக்கு ராஜபக்ஷாக்களின் பிரதானமான அரசியற் பலமாக உள்ளது. இராணுவமும் பொலிஸ_ம் தங்களது அரசியற் செல்வாக்கை மக்கள் மத்தியில் காப்பாற்றி வைத்திருக்கும் மேலும் தேர்தல்களின் போதெல்லாம் தம்மை வெற்றி பெற தொடர்ந்து ஆதரவாகச் செயற்படும் என ராஜபக்ஷாக்கள் நம்பினால் அது அவர்களின் தவறாகவே முடியும். சிங்கள சமூகத்தில் - சிங்களக் கிராமங்களில் மக்களின் மத்தியில் செல்வாக்குப் பெறும் எண்ணங்கள் - கருத்துக்களின் படியே இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் செயற்படுவார்கள். அவர்களை அரசியல் இயந்திரங்கள் என வரட்சியாகப் பார்க்க முடியாது. எனவே அவற்றை தமது ஒரு குடும்ப தேர்தல் இயந்திரமாக ராஜபக்ஷாக்கள் கருதினால் இன்னும் சில ஆண்டுகளில் அது ஒரு மகா தவறு என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.
அரசியலில் மக்கள் திசை திரும்பி ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக இலட்சக்கணக்கில் வீதிகளில் இறங்குவதற்கு பல வருடங்கள் ஆகுமென்றில்லை. சிலவேளைகளில் அது சில நாட்களிலும் நடக்கும். அந்தப் பொறி தட்;டுப்பட்டால் அதற்கு எண்ணெயூற்றி கொழுந்து விட்டு எரிய வைக்க பல சக்திகள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் காத்துக் கொண்டிருக்கின்றன. ராஜபக்ஷாக்களை வைத்து தனது காரியசித்திகளை ஆற்றும் சீனா அவர்களைக் காப்பாற்ற சிரமம் எடுக்காது. யப்பான் ஒரு வியாபாரி. பாகிஸ்தானுக்கு அதனது தலையில் ஆயிரம் நெருக்கடிகள். ரஷ்யாவும் ஈரானும் இந்தியாவைக் கடந்து வரமாட்டா. ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் அத்துடன் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் ஐ.நா சபையில் இலங்கையைக் காப்பாற்றலாம் ஆனாலும் ராஜபக்ஷாக்களின் அரசு எந்த வேளையும் ஜெனீவா மனித உரிமைகள் சபையில் நெருப்பின் மீது நடக்கும் சோதனைதான்.
எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில் 18வது அரசியல் யாப்பு திருத்தத்தால் மூன்றாவது மற்றும் நாலாவது தடவையும் தானே ஜனாதிபதி ஆவதற்கான கதவைத் திறந்து விட்டார் ராஜபக்ஷா. ஆனால் இன்னமும் மூன்றாண்டுகளுக்கு மேலுள்ள 2016ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலானது ராஜபக்ஷாக்களுக்கு சுலபமாகக் கடக்கும் ஒரு கட்டமாக இருக்கப்போவதில்லை என்பது தெரிகின்றது. ராஜபக்ஷாக்கள் தம்மைத் தாமே நிதானித்து தமக்குள்ளேயாயினும் சுயவிமர்சனம் செய்து தமது தவறுகளிலிருந்து தம்மை மீள விலக்கி சீரமைத்துக் கொள்வார்களா? அல்லது அவர்கள் திரும்பவே முடியாத ஒரு பிழையான பாதையில் பல தூரம் ஏற்கனவே போய்விட்டார்களா? அல்லது அவர்கள் செல்லும் பாதையை அவர்களின்; பிரச்சாரங்களை நம்பியபடி அமோக அளவில் சிங்கள மக்கள் எல்லாவற்றையும் கடந்து தொடர்ந்து ஆதரித்து நிற்பாhகளா? இவற்றுக்கான விடைகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தெளிவாகுவது நிச்சயம்;;
Aucun commentaire:
Enregistrer un commentaire