dimanche 6 janvier 2013

எதிரும் புதிருமானவர்கள் இதற்கு எப்படி ஒப்புக் கொண்டார்கள்?அரசியலில்

 ஈழ போராட்டமானது இலங்கையில் ஆட்சி செய்த அரசுகளின் இனவிரோத போக்கால் ஏற்பட்டு அதற்காக போராடிய இயக்கங்கள் இடையே ஏற்பட்ட முரன்பாடுகளால், குறிப்பாக புலிகளின் சகோதர படுகொலைகள் காரணமாக அழியத் தொடங்கி, இறுதியில் புலிகளின் பாசிச கொள்கை காரணமாக முற்று முழுதாக அழிந்து விட்டது. இந்த போராட்டமானது ஆரம்பத்தில் சாத்வீக போராட்டமாக தொடங்கியதற்கு தமிழ் அரசு கட்சியே காரணமாக இருந்தது.தமிழ் அரசு கட்சியை அந்த நாட்களில் பலர் இதற்காக ஆதரித்தனர். தமிழ் அரசு கட்சி இளைஞர்களை வழி நடத்தி தமிழ் ஈழத்தை பெற்று கொடுத்து விடுவார்கள் என பலர் எண்ணி இருந்தனர்.அதற்காக அது தமிழர் விடுதலை கூட்டணியாக உருமாற்றம் பெற்றது.
 தமிழர் விடுதலை கூட்டணி இதனை செய்வதற்கு அருகதையற்ற கட்சி என பின்னர் அதனை இனங்கண்டு தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட புறப்பட்டனர்.
தமிழ் இளைஞர்கள் பல பெயர்களை கொண்ட இயக்கங்களாக போராடினர்.ஆயுத போராட்டம் மும்முராக நடைபெற்ற வேளையில் இயங்களிடையே ஒற்றுமை இருந்தால், தமிழ் ஈழம் இலகுவாக கிடைத்துவிடும் என பலர் சொல்லத் தொடங்கினர். அந்த ஒற்றுமை நடந்தும் நடக்காது போல் அமைந்தது.
இயக்கங்களிடையே ஒற்றுமை இல்லை இவர்கள் உருப்பட மாட்டார்கள் என பலர் கூறினர்.அதன் படியே எல்லாம் நடந்தது.
இறுதியாக எல்லா இயக்க தலைவர்களையும் அழிக்க காரணமாக இருந்த புலிகள் இயக்கமும், அதன் தலைமையும் அழிந்து போனது.
 புலிகள் இயக்கம் ஆயுத ரீதியாக பலமாக இருந்த போது அதற்கு அரசியல் ரீதியாக ஒரு பலம் தேவை என, தமிழ் கட்சிகளை ஒற்றுமை படுத்தி உருவாக்கியதே தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று இன்று சாட்சியாக சொல்ல பிரபாகரனும் இல்லை தமிழ்செல்வனும் இல்லை, தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அவர்கள்தான் இதனை உருவாக்கினார்கள் என ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரு வகையில் புலிகளால் மிகவும் பாதிக்கப்ப்பட்ட கட்சிகள்.அப்படி இருக்கையில் இந்த உடன்படிக்கை எப்படி ஏற்பட்டது. எதிரும் புதிருமானவர்கள் இதற்கு எப்படி ஒப்புக் கொண்டார்கள் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று கவுண்டமணி பாணியில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டவர்.ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டவர்.ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா புலிகளால் கொல்லப்பட்டவர்.
இப்படியெல்லாம் இருந்தும் இது எப்படி சாத்தியமானது?
அது மட்டுமல்ல நாம் ஆரம்பத்தில் சொன்ன தமிழரசு கட்சி பிழையாக இளைஞர்களை வழி நடத்துகிறது என தூக்கி எறிந்த கட்சியை மீண்டும் இன்று தலைமைத்துவ கட்சியாக நாம் ஏற்றுக் கொண்டுள்ளேம்.இது எப்படி?
ஆக இந்த ஈழ போராட்டமானது மக்களுக்கும், அதற்காக மடிந்த, காணாமல் போன பல நாடுகளில், இலங்கையில் குறிப்பாக மலையகம்,வடக்கு-கிழக்கு ஆகிய பகுதிகளில்வாழும் இதனால் பாதிக்கபட்ட பலருக்கு அடுத்த நாள் என்ன செய்யப்போகிறோம், என்ற கேவலமான வாழ்கையையே கொடுத்துள்ளது என்பது வேதனையை கொடுக்கிறது. மலைய இளைஞர்களை இன்று யாரும் கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை. அப்பகுதி இளைஞர்கள் பலர் இதற்காக மடிந்துள்ளதுடன். இன்னும் தமிழக முகாம்களில் அவர்கள் வாழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கூட கொள்வதில்லை.
இந்த ஈழ போராட்டமும், அதன் தொடர்ச்சியும் இன்னும் பலருக்கு சௌகரியத்தை கொடுக்கிறது..அவர்கள் அரசியல் செய்து மேலும் மேலும் சௌகரியத்தை வளர்க்க இது வழி வகுத்து நிற்கிறது.
 நாம் பேசிய சோசலிச ஈழம் எங்கே? சமதர்ம ஈழம் எங்கே?

 நன்றி - ஸ்ரனிஸ் அவர்கள் 

Aucun commentaire:

Enregistrer un commentaire