jeudi 23 février 2012

என்ன இழவோ ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டு - ராஜபக்சே

உலகமெங்கும் வாழும் ஈழத்து மக்களுக்கு....

போர்க்குற்ற விசாரணைகளுக்கு பயந்து - அல்லது சர்வதேச நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து - அல்லது என்ன இழவோ ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டு - ராஜபக்சே சில உறுதிமொழிகளை இந்திய அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிடம் வழங்கியிருக்கிறார்.

"சரித்திரம் திரும்பும் ; சரித்திரம் திரும்புகிறது " என்றெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பிளிறுவதை கேட்டிருக்கிறேன். இதோ இலங்கையில் ஒரு சரித்திரம் திரும்புகிறது : ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம்!

'மாகாண சபை அதிகாரம்' என்கிற முதல் உரிமைப் படிக்கட்டில் ஏற்றி வைத்த இந்த ஒப்பந்தம் யார் யாராலோ அலைக்கழிக்கப்பட்டு - சிதறடிக்கப்பட்டு -பல லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த பிறகு - சாம்பல் மேட்டில் இருந்து மீண்டும் எழுப்பப்படுகிறது : "ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தின்படி....

" பழையதைக் கிண்டி அதில் அரசியல் லாபம் தேடுகிற அவசியம் இல்லாத எவரும் இந்தக் கட்டுரையில் - விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.

இன்று ஈழத் தமிழருக்கு வேண்டியதெல்லாம் கண்ணீரற்ற வாழ்க்கை... நிம்மதி...நெடுநாள் இழந்துவிட்ட உறக்கம்...ரத்தம் தோயாத பொழுதுகள்! இவை மட்டுமே! ஆம்! இவை மட்டுமே வேறெந்த பெரிய லட்சியத்தயும்விட முன் நிற்கும் முதல் தேவை! இலங்கை மண்ணில் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிற நம் தமிழர்களின் வாழ்க்கை கோரிக்கை!

மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்கிற துர்ப்பாக்கிய நிலைமைக்கு தமிழர் போராட்டம் பின்னுக்கு இழுக்கப்பட்ட போக்குக்கு இலங்கையில் இருந்தவர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. தமிழகதிற்கு இதில் மிகப் பெரிய பொறுப்பு - இழிவை தலை சுமக்க வேண்டிய பொறுப்பு உண்டு!

இலங்கையில் போராட்டக் களத்தில் இருந்தவர்களையும், போர்க்களத்தில் இருந்தவர்களையும் தவறாக வழி நடத்தி - அல்லது தவறுகளுக்கு உறுதுணையாக இருந்து ஈழப் போராட்டத்தை சிதைத்த பங்கு தமிழகத் 'தலைவர்'களுக்கு நிச்சயம் உண்டு !

கேவலம் - மிகக் கேவலம்! 'தலை' வெளியே தெரிவதற்காக ஈழத்தை தலையில் சுமந்தவர்கள் - 'நாற்காலி பசை'க்காக தமிழர்களை பகடைக் காயாக மாற்றியவர்கள் - 'தேர்தல் நேர சுயநலத் 'துக்காக தமிழ்க் குரல் எழுப்பியவர்கள் ...என்று பிரிந்து நிற்கிற இந்தத் தமிழக அரசியல்வாதிகள் சாதித்ததெல்லாம் தத்தமது பொழுதைப் போக்கியது மட்டுமே!

இழந்ததெல்லாம்... இழந்ததெல்லாம்...நீங்கள்தாம்...நீங்கள் மட்டும்தாம்...ஈழத் தமிழர்களே...நீங்கள் மட்டும்தாம்! அவர்களுக்கு எந்த இழப்புமில்லை. ஒரு மயிரிழைகூட இழப்பு இல்லை!

கணவனை இழந்தீர்கள் ஈழத் தாய்மார்களே...பெண்டு பிள்ளையரை இழந்தோம் ஈழத்து ஆண் மக்களே... தாய் தந்தையரை இழந்தோம் தமிழர்களே...பச்சிளம் பிஞ்சுகளின் சவத்தை அருகில் கிடத்தி உயிர் சீவித்திருந்தோமே தமிழர்களே...இக்கொடுமைகளில் ஆயிரத்தில் ஒரு பங்காவது இந்த தமிழக அரசியல்வாதிகளுக்கு இழப்பு உண்டா?

இல்லை.இல்லவே இல்லை. கிஞ்சிற்றும் இல்லை. ஒரு மயிரளவும் இல்லை.

ஆனால் நீங்கள்...? நீங்கள்...?நாடெங்கே? வீடெங்கே? காலில் நழுவிய பூமிஎங்கே? உறவுகள் எங்கே? குடும்பங்கள் எங்கே? செத்துப்போன நம் பிள்ளைகுட்டி பெண்டுகள் கணவன்மார்கள் எங்கே? எங்கே? தேடுங்கள்...தேடுங்கள்...நாலாபுறங்களிலும் நாற்திசைகளிலும் தேடுங்கள்...இழப்பின் வலியை எந்த ஈனப் பிறவிகளால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்?

ஆனால் இன்னும் அவர்கள் உங்களை விட மாட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழனின் தீக்குளித்த பிணம் எந்தத் தெருவில் விழுகிறது என்று மலர் வளையங்களுடன் திரிந்து - புகைப்படக் கருவிகளின் முன் சோக முகம் காட்டி நிற்கிற இழிந்த அரசியல்வாதிகள் இன்னும் உங்களை விட மாட்டார்கள்.

இந்த 'பச்சை தமிழன்'கள், 'செந்தமிழன்'கள், 'புரட்சி புயல்'கள், புதுக் காதல் கொண்டுவிட்ட பொதுவுடைமை சிங்கங்கள்', 'பாட்டாளி சொந்தங்கள்', 'இனமானத்' தலைவர்கள், 'தமிழர் தலைவர்'கள் - இந்தத் தமிழகத்து அரசியல்வாதிகளிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். சிங்கள அரசை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!

உங்கள் ரத்தம் இவர்களுக்கு பானம்! உங்கள் மரணம் இவர்களுக்கு அரசியல்! உங்கள் வாழ்க்கை இவர்களுக்கு பகடை! உங்கள் அரசியலோ இவர்களுக்குத் தேவையற்ற ஒன்று!

ஏதாவது நிகழாதா என்று குருதியின் மணம் இன்னும் காற்றில் வீசுகிற மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழனுக்கு தமிழச்சிக்கு தேவை வாழுகிற உரிமை! இப்போதைக்கு அதுவே முன்னுரிமை! அதற்குக்கூட விடமாட்டேன் என்று தமிழகத்தில் 'கொள்ளிபோடுகிற' இந்த அரசியல்வாதிகளை ஈழத் தமிழர்களே...புரிந்து கொள்ளுங்கள்! வெளிநாட்டில் வாழும் தமிழர்களே...இவர்களை கூட்டிவந்து கொட்டிக் கொடுப்பதை நிறுத்துங்கள்!

இவர்களுக்கு இங்கே அரசியல் கிடையாது. தனிநபர்த் தாக்குதல்கள் அன்றி வேறு அரசியலும் தெரியாது! குடும்பம் வளர்ப்பவன் - அவனோடு கோபித்துக் கொண்டு வந்தவன் - குறுக்கில் புகுந்து லாபம் சம்பாதிக்க நினைப்பவன் - இவர்களது பதவிப் போட்டியில் - ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் - இவர்களுக்கு இன்னமும் நீங்கள் தேவைப்படுகிறீர்கள்! கழுகுகளுக்கு இரையாக இடம்கொடாதீர்கள்!

உங்கள் புரட்சியை நீங்கள் தீர்மானியுங்கள்! உங்கள் உரிமையை நீங்களே வென்றேடுங்கள் ! உங்கள் வாழ்க்கை இலங்கையில் இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் உயிர் ஈழத்தில் இருக்கிறது! எவர் உதவியும் - எவன் உதவியும் தேவையில்லை உங்களுக்கு! குறிப்பாக, நரிகளின் நாட்டாமை நமக்குத் தேவையே இல்லை!

உங்கள் பிரதிநிதிகள் வாயிலாகவே உங்கள் போராட்டம் நடைபெறட்டும்! புரட்சியைக் கடன் வாங்குகிற நிலைமை நமக்கு இல்லை! இவர்கள் கற்ப்பிக்கிற போக்கும் நமக்கான அரசியலில்லை! நாம் நாமாயிருப்போம்! தொப்பூழ்க்கொடி சொந்தமென்று அணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு - தமிழ்நாட்டில் சுவரொட்டி அடித்து அரசியல் பிழைக்கிறவர்களின் சகவாசம் நமக்கு வேண்டாம்!

நம் வேலையை நாமே பார்க்கப் போகிறோம்! நம் கனவை நாமே அடையப் போகிறோம்! நன்மையுள்ளவன் என்றாலும் நல்ல ஆலோசனை மட்டுமே பெறுவோம்! நாமே போராடுவோம்! அதில் பிழையிருக்கிறதா தோழர்களே?

சென்னையிலிருந்து அழகிய மணவாளன்

Aucun commentaire:

Enregistrer un commentaire