vendredi 24 février 2012

புலிகளுக்கு நிதி வசூலித்து கொடுத்த குற்றத்திற்காக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஆறு பேருக்கு சிறைத்தண்டனை

பிரான்ஸ் பாரிஸ் நகர மேன்முறையீட்டு நீதிமன்றம் புலிகளின் முன்னரங்க அமைப்பாக செயற்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இத் தீர்ப்பில், விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதிசேர்த்த குற்றத்திற்காக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஆறு பேர் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு பிரெஞ்சு ஊடகங்களில் வெளியாகியிருந்தன. தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைளுக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களிடம் பலவந்தமாக நிதி சேர்த்தார்கள் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பரிதி என்று அழைக்கப்படும் நடராசா மதீந்திரனுக்கு ஆகக்கூடிய சிறைத்தண்டனையாக 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேத்தா என்று அழைக்கப்படும் அரவிந்தன் துரைசுவாமிக்கு 5 வருட சிறைத்தண்டனையில் 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யோகராசா சிவதர்சனுக்கு 3 வருட சிறைத்தண்டனையில் ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்திரேசுப்பிள்ளை வின்சட், லோறன்ஸ் செல்வராசா அல்லது புலேந்திரன், எம்.ரவிமாணிக்கம் ஆகியோருக்கு 2வருட சிறைத்தண்டனையில் 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதிசேர்த்த குற்றத்திற்காக பிரான்சில் தண்டனை வழங்கப்படுவது இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தக் குற்றச்சாட்டின் பேரில் 22 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire