dimanche 1 mars 2015

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்.அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை;அற்புதன் தொடர் - 17

ஜே.ஆரின் யாழ்.விஜயமும் வெடித்த குண்டுகளும்
தனித்தலைமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க
prabakaran arrestவேண்டும் என்று பிரபாகரன் கேட்டார். தலைவரே முடிவுகளை எடுக்கவேண்டும்.அதற்கு மறுபேச்சு இருக்கக்கூடாது. அப்படியானால் தான் சரியான இயக்கமாக வளரமுடியும் என்று சொன்னார் பிரபாகரன்.
பிரபாகரன் இந்த நிபந்தனையை விதித்தபோது புலிகளது செயற்குழுவில் ஏழு பேர் இருந்தனர். பிரபாகரன்,கலாபதி, கடாபி, அன்ரன், ராகவன், சாந்தன்,சீலன் ஆகியோரே அந்த ஏழு பேர்.
ஒருவரிடம் தனித்தலைமை கொடுக்கப்படுவது சர்வாதிகாரப் போக்குக்கு வழிவகுக்கும். எனவே பிரபாவிடம் தனித்தலைமை கொடுக்கப்படக்கூடாது என்று ராகவன், கடாபி, கலாபதி ஆகியோர் எதிர்த்தனர். செயற்குழுவில் மூன்று பேர் பிரபாகரனின் கருத்துக்கு ஆதரவாகவும் ஏனைய மூன்று பேர் எதிராகவும் நின்றனர்.
இந்த நிலையில் செயற்குழுவில் இருந்த சாந்தன் (இவர் கியூபா இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டவர்) இயக்கத்தை விட்டு ஒதுங்கினார். கலாபதி ஒரு காதல் விவகாரத்தின் காரணமாக இயக்கத்தை விட்டு விலகினார். (யாழ்.மேயர் துரையப்பா கொலை நடவடிக்கையில் பிரபாவோடு பங்கு கொண்டவர் கலாபதி) ராகவன் இயக்க அலுவல் காரணமாக இந்தியா சென்றிருந்தார். இந்த நிலையில் கடாபி மாத்திரமே செயற்குழுவில் பிரபாகரனுக்கு எதிராக நின்றார். எனினும் பிரபாவிடம் தனித்தலைமை கொடுக்கப்பட்டது. ஒருவரே தலைவர்:அவர் சொல்வதே கொள்கை: அவர் உத்தரவே இறுதியானது – உறுதியானது என்ற  நிலை உருவாகியது. .செயற்குழு கூடி முடிவெடுப்பது என்ற நிலை முடிவுக்கு வந்தது. கடாபி பின்னர் படிப்படியாக இயக்கத்தை விட்டு ஒதுங்கத் தொடங்கினார். தற்போது இவர் வெளிநாடொன்றில் வசிக்கின்றார்.
மாத்தையாவின் தலைமை
பிரபாகரன் தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்தபோது இங்கே இயக்கத்தை வழிநடத்தியவர்களில் மூவர் முக்கியமானவர்கள். மாத்தையா, சீலன், குண்டப்பா (ரகு) ஆகியோரே அந்த மூவர். மாத்தையாவே பிரபாகரன் நாட்டில் இல்லாத வேளைகளில் தலைமை வழங்கினார். மாத்தையா-சீலன்-குண்டப்பா ஆகியோர்களில் பொறுப்பாளராக இருக்கத் தகுந்தவர் யார் என்று இங்கே இருந்த புலிகள் மத்தியில் ஓர் இரகசிய வாக்கெடுப்பு நடந்தது. அதில் மாத்தையாவே வெற்றி பெற்றார்.பிரபாகரனுக்கு அடுத்த தலைவராகவும் மாத்தையாவே புலிகளால் மதிக்கப்பட்டார். இதேவேளையில் புலிகளிலிருந்து ஒதுங்கிய செல்லக்கிளி அம்மான் பம்பாய் சென்று கடத்தல் தொழிலில் ஈடுபட்டார். பம்பாயில் ஒரு’தாதா’போல செல்லக்கிளி விலாசமாக இருந்தார். அது பிரபாவுக்கு பிடிக்கவில்லை.இயக்கத்துக்காக வியாபாரம் செய்வது தவறல்ல, இயக்கத்தை விட்டு விலகி தனிப்பட்ட  லாபத்துக்காக தவறான வழியில் செல்வது தவறு என்பது பிரபாவின் கருத்து. எனவே பம்பாயில் இருந்த செல்லக்கிளியுடன் பிரபாகரன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை.
இதேவேளை உமா மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் வளரத் தொடங்கியது. ‘சுந்தரம் புலிப்படை’என்ற பெயரை உமா மகேஸ்வரன் அணியினர் பயன்படுத்தி வந்தனர்.
முதல் மோதல்
1982மே மாதம் 29ஆம் திகதி. தமிழ்நாட்டில் சென்னையில் பாண்டிபஸார் என்னும் ஒரு பகுதி இருக்கிறது. சன நெரிசல் மிகுந்த பகுதி அது. அங்குள்ள உணவு விடுதி ஒன்றுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் உமா மகேஸ்வரனும் ஜோதீஸ்வரன் என்னும் கண்ணனும் வந்தனர். அதே சமயத்தில் அங்கு பிரபாகரனும் அவரோடு சிவகுமார் என்பவரும் அங்கு தற்செயலாக வந்தனர். பிரபாகரன் உமா மகேஸ்வரனைக் கண்டு விட்டார். தன்னால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் கண் எதிரில் நிற்கிறார்.என்ன செய்யலாம்? உடனடியாக தனது கைத்துப்பாக்கியை எடுத்த பிரபாகரன், உமா மகேஸ்வரனை நோக்கி சுடத் தொடங்கினார். அப்போது பாண்டிபஸார் பகுதியில் கடமையில் இருந்த பொலிசார் இரு பகுதியினரையும் உடனடியாக கைது செய்தனர். அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் வெளியே விடவேண்டாம். உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று பொலிசாருக்கு தெரிவித்துவிட்டார் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஈழப்போராளிகளுக்குள் நடந்த முதல் மோதல் சம்பவம் அது தான். பத்திரிகைகளில் அந்தச் செய்தி வந்த போது தமிழ்நாட்டினைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீது பற்றுக் கொண்ட பிரமுகர்கள் கவலை தெரிவித்தனர். “போராளிகள் தமது ஆயுதங்களை தமது நாட்டில் வைத்துவிட்டு வரவேண்டும். இங்கு வந்து தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது.அதனை தமிழக அரசு அனுமதிக்காது” என்று தனது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.
ஒற்றுமை முயற்சிகள்
இதே சமயம் கைது செய்யப்பட்ட ஈழப்போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் எம்.ஜி.ஆர் அரசு அதனை மறுத்தது. கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இயக்கங்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சிகளில் பலர் ஈடுபட்டனர். ஈரோஸ் அமைப்பிலிருந்து விலகியிருந்த ‘அருளர்’சென்னையில் ஈபிஆர்எல்எவ் அலுவலகத்தில் தங்கிருந்தார். இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமை முயற்சியில் அவரும் ஈடுபட்டார். புலிகள் என்ற பெயரை உமா மகேஸ்வரன் அணியினர் பயன்படுத்தக்கூடாது என்று பிரபாகரன் கூறினார். அதனை உமா மகேஸ்வரன் அணியினரும் ஏற்றுக்கொண்டனர். ஒற்றுமை நடவடிக்கைக்கு அருளர் ஒரு திட்டத்தை முன்வைத்தார். அந்த திட்டம் இது தான்;
புலிகள் - இராணுவ விவகாரம்;: புளொட் - அரசியல் விவகாரம்; ஈ.பி.ஆர்.எல்.எவ். – மாணவர் விவகாரம்: ஈரோஸ் - புனர்வாழ்வு புனரமைப்பு விவகாரம் என்று பொறுப்புக்களை பகிர்ந்து கொள்வது. இது தான் அருளரின் திட்டம். அருளரின் திட்டத்தைக் கேட்ட இயக்கங்களுக்கு கோபம் வந்துவிட்டது. இந்த திட்டத்தை முன்வைக்கும்போது அருளர் ஈ.பி.ஆர்.எல்.எவ்.அலுவலகத்திலிருந்து புளொட் அமைப்பினரோடு சென்று தங்கிருந்தார்.
அவரது திட்டத்தால் ஏற்பட்ட கோபத்தால் புளொட் அமைப்பினரும் அருளரோடு முரண்பட்டுக் கொண்டனர். ஈ.பி.ஆர்.எல்.எவ். அலுவலகம் சென்ற அருளர் தாக்கப்பட்டார். ‘தனக்கிடா உத்தியோகம் தன் பிடரிக்குச் சேதம்’என்ற கதையாக அருளரின் திட்டம் முடிந்தது.
லங்கா ராணி
ஆனாலும் அருளர் எழுதிய ‘லங்கா ராணி’ என்ற நாவல் ஈழப்போராட்டத்தில் முதன் முதலில் வெளிவந்த சிறந்த இலக்கியப்படைப்பாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இனக்கலவரத்தால் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தமிழ் அகதிகளை சுமந்து சென்ற கப்பலில் கதை நடக்கிறது. கதையின் ஊடே ‘ஈழம் ஏன் அவசியம்- அந்த ஈழம் எவ்வாறு அமையவேண்டும்’ என்று எளிமையான விளக்கங்கள் உரையாடல்களாக அமைந்திருந்தன.
நெல்லியடி தாக்குதல்
1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அரச பயங்கரவாதம் இலங்கையெங்கும் தமிழர்களை எரித்தது.அதன் பின்னர் சரியாக ஒரு வருடத்தின் பின்னர் 1982ஆம் ஆண்டு ஜுலை மாதம் 2ம் திகதி புலிகள் ஒரு தாக்குதல் நடவடிக்கைக்கு தயாரானார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து 16மைல் தூரத்திலிருக்கின்றது நெல்லியடி. அங்கு ரோந்தில் ஈடுபடும் பொலிசார் மீது குறி வைத்தனர். திடீர்த் தாக்குதல்.புலிகளது துப்பாக்கிகள் வேட்டுக்களைப் பொழிந்தன. நான்கு பொலிசார் கொல்லப்பட்டனர்.மூன்று பொலிசார் படுகாயமடைந்தனர். பொலிஸ் கான்ஸ்டபிள் குணபால,பொலிஸ் கான்ஸ்டபிள் மல்லவராச்சி, பொலிஸ் கான்ஸ்டபிள் அருந்தவராஜா, ஜீப் சாரதி ஆரியரட்ண ஆகியோரே கொல்லப்பட்டவர்கள். ஆயுதங்களைக் கைப்பற்றிக் கொண்டு புலிகள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். அந்தத் தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவர் சங்கர் என்றழைக்கப்படும் எஸ்.சத்தியநாதன்.
பிரபாவின் அணுகுமுறை
தனித்தலைமை என்ற போதிலும் கெரில்லா இயக்கத்திற்குரிய விதிகளை பிரபாகரன் நுட்பமாகக் கையாண்டார். எதிரி எங்கே பலவீனமாக இருக்கின்றானோ அங்கே தாக்கு. தாக்குவதற்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடக்கூடாது. அதற்கான திட்டங்களை வகுத்து நிலைமைக்கு ஏற்ப செயற்படும் சுதந்திரம் கெரில்லா அணித் தலைவர்களுக்கு இருந்தால் தான் கெரில்லாக்கள் போர்க்குணத்தோடு செயற்பட முடியும்.
எல்லாவற்றையும் தலைமையிடம் இருந்தே எதிர்பார்க்கத் தொடங்கினால் நடவடிக்கைகளின் வேகம் தடைப்படும். சிறந்த பொறுப்பாளர்களை நியமித்து முன்முயற்சி எடுத்து செயற்படும் சுதந்திரத்தைக் கொடுக்கவேண்டும். அதே சமயம் தலைமையின் உத்தரவுக்கு உடனடியாகக் கட்டுப்படும் வகையிலும் இருக்கவேண்டும். இது தான் பிரபாகரன் தலைமையின் கீழ் புலிகள் நடத்திய தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்தமைக்கு காரணம். சாதனைகளின் அறுவடைக்கும் அது தான் காரணம். 1977ல் பதவிக்கு வந்த ஜே,ஆர்.1982 ல் ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்கத் தயாரானார்.
ஜனாதிபதித் தேர்தல்
ஜே.ஆர்.அரசின் ஐந்து ஆண்டுகால ஆட்சி தமிழர்களுக்கு பயங்கரவாதத்தையும் இனக்கலவரத்தையும் பரிசாக வழங்கியிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டார் ஜே.ஆர். யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வரப்போவதாக திகதியும் குறித்தார். ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கப் போவதாக அறிவித்தது தமிழர் விடுதலைக் கூட்டணி. அதன் மூலம் ஜே.ஆர் அரசின் செல்லப்பிள்ளைகளாக கூட்டணி மாறிவிட்டது என்ற கருத்தை உடைத்துவிடலாம் என்பது தான் கூட்டணியின் திட்டம். தேர்தலை பகிஷ்கரிக்கப் போவதாக அறிக்கை விட்டபோதும் எதிர்ப்பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்தது கூட்டணி. ஜே.ஆரின் நட்பை இழக்கவும் விரும்பவில்லை. தமிழர்களதும் இளைஞர்களதும் கோபத்தை சம்பாதிக்கவும் விரும்பவில்லை என்பது தான் கூட்டணியின் நிலையாக அமைந்தது.
ஜே.ஆரை எதிர்ப்பது போல நடிப்பது ஒரு முகம்.
ஜே.ஆரின் திருவடிக்கு விசுவாசமாக காவடி தூக்குவது இன்னொரு முகம். கூட்டணிக்கு இருப்பது இரண்டு முகம் என்று கண்டனம் தெரிவித்தது ஈழ மாணவர் பொதுமன்றம் (GUES) ஜே.ஆரின் வருகையை இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. புலிகள் தமது பாணியில் எதிர்ப்பு தெரிவிக்கத் திட்டமிட்டனர்.
பாலத்தில் குண்டுகள்
1982ம் ஆண்டு செப்படம்பர் 29ம் திகதி ஜே.ஆர்.யாழ்ப்பாணம் சென்றார். அதேthe tiger தினத்தில் யாழ்ப்பாணத்தில் காரைநகரில் உள்ள பொன்னாலைப் பாலத்தில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்துவிட்டு காத்திருந்தனர் புலிகள். அந்தப் பாலத்தின் வழியாகத் தான் காரைநகர் கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் யாழ் நகருக்கு வரவேண்டும். ரோந்து நடவடிக்கைக்காகவும் குடிநீர் எடுத்துச் செல்லவும் கடற்படை வாகனங்கள் அந்தப் பாலம் வழியாக வந்து செல்வதுண்டு. அன்றும் வரிசையாக கடற்படை வாகனங்கள் பாலம் வழியாக வந்து கொண்டிருந்தன.
நேரம் அதிகாலை 6.30மணி. குண்டுகளை வெடிக்க வைத்ததில் சிறு தவறு. கடற்படை வாகனங்கள் தப்பிக் கொண்டன. பாலம் பெரும் சேதமடைந்தது. குண்டுகள் வெடித்த சத்தம் மூன்று மணி நேரம் தொடர்ந்து கேட்டது. குறி தவறியபோதும் ஜே.ஆருக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பாக அந்த நடவடிக்கை அமைந்தது. இலங்கைப் படையினருக்கு எதிரான முதலாவது நிலக்கண்ணிவெடித் தாக்குதல் முயற்சியாகவும் அது அமைந்தது. அந்தத் தாக்குதல்  தோல்வியில் முடிந்தமையால் மற்றொரு பாரிய தாக்குதலுக்கு திட்டமிட்டனர் புலிகள்.தாக்குதலுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு சார்ள்ஸ் அன்ரனி என்னும் சீலனிடம் ஒப்படைக்கப்பட்டது.
(தொடரும்)18

Aucun commentaire:

Enregistrer un commentaire