samedi 14 mars 2015

ஈழத்தை கைவிட்டு தனது புளொட் தலைமை ஆழுமை பலகீனம் நிறைந்தது என்பதை ஒப்புக்கொண்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்

SLT-Sithadthanதர்மலிங்கம் சித்தார்த்தன். ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் “புளொட்” இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராக இருக்கின்றார்.
இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் அவர் சென்னை வந்திருந்தார். அவரை குமுதம் சஞ்சிகையினர் நேரில் சந்தித்து ஈழத்தின் இன்றைய நிலை குறித்து கேட்டபோது அவர் வழங்கிய கருத்துக்கள்!.
இன்னமும் முகாம்களில் கணிசமான மக்கள் அடைப்பட்டிருக்கிறார்களா?
யாழ்ப்பாணம்” வலிவடக்கு பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முகாம் அமைத்து மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது போன்ற முகாம்களில் அடைப்பட்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை உத்தேசமாக முப்பதாயிரம் இருக்கும்.
அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறதா?
2009 இறுதிப் போருக்கு பிறகு அவர்களுக்கு அரசு உதவிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இவர்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தவர்கள். இப்போது உள்நாட்டில் வேறு தொழில்கள் எதையும் செய்ய முடியாமல் பரிதாபமான முறையில் தான் காலத்தை கழிக்கிறார்கள்.
உங்களது வடக்கு மாகாண அரசு, ஏன் உதவவில்லை?
அவர்களுக்காக ஒரு நிதியம் அமைத்து உதவும் திட்டம் இருக்கிறது ஆனால் இதுவரை இலங்கை அரசு மறைமுகமாக அதற்கு தடைபோட்டு வந்திருக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, “ தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவால் ஜெயித்தேன் என வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எனவே, புதிய அரசு என்ன செய்யப் போகிறது? என்பதைப் பார்க்க வேண்டும்.
மைதிரிபால அரசு மீது தமிழர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
மகிந்த காலத்தில் ஒவ்வொரு தமிழனும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் இருந்தார்கள் இப்போது அந்தப் பயம் இல்லை. தமிழர் பகுதியில் புதிதாக சிங்களவர் குடியேற்றம் இல்லை. தமிழர்களின் மீள் குடியமர்த்தல் பற்றி கதைக்கிறார்கள். ஜெயில்களில் இருப்பவர்களை விடுதலை செய்வது குறித்து பட்டியல் தயாரித்து கொண்டிருக்கின்றார்கள்.
புதிய அரசு அமைந்து, இரண்டு மாதம் ஆகிறது. இவர்களின் நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை இல்லை.
வடக்கு மாகாண அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
மகிந்த அரசு இருந்தவரை, மக்கள் எதிர்ப்பார்த்த அளவில் செயல்பட முடியவில்லை. இப்போது புதிய அரசு வந்திருக்கிறது. மாகாண அரசின் நடவடிக்கைகளில் நேரடி தலையீடுகளை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் அபிவிருத்தி பணிகளை மாகாண அரசின் மூலமாக செய்ய வேண்டும். ஆளுனரின் தலையீட்டை தடுக்க வேண்டும்  இதெல்லாம் நடந்தால்தான் மாகாண அரசால் செயல்பட முடியும்.
வாழ்விடங்களுக்குத் திரும்பிய தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடிகிறதா?
முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை (வயல்களை) இராணுவம் பறித்து சிங்களவர்களிடம் கொடுத்திருக்கிறது. அவர்களால் தங்களின் நெல் வயல்களில் வேலை செய்ய முடியாது.
திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே கொக்குத்திருவாய் என்ற இடத்தில் தமிழர்களின் மாடுகளை சிங்களவர்கள் பறித்து கொண்டு போவதாக அந்தப் பகுதியினர் என்னிடம் கூறினர். வடக்கு மாகாணம் முழுக்க இப்படி களவு, கொள்ளை அதிகம் இருக்கிறது சமூக ரீதியான பிரச்சினை இருக்கிறது போலீஸ் நடவடிக்கை இல்லை.
மீண்டும் தமிழீழப் போராட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா?
இந்த தருணத்தில் இன்னொரு ஆயுதப் போராட்டம் உருவாகும் என நான் நம்பவில்லை காரணம். மக்கள் மிகக் களைத்துவிட்டார்கள் மக்களிடமும் முன்னாள் போராளிகள் பலரிடமும் பேசிவிட்டு அவர்களின் மனநிலையை அறிந்து இதைச் சொல்கிறேன்.
ஆனால் தமிழீழம் தான் தீர்வு! என தமிழகத் தலைவர்களான நெடுமாறன் வைகோ போன்றவர்கள் வலியுறுத்துகிறார்களே?
இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நியாயமான தீர்வைக் கொண்டுவரும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அழுத்தம் தான் இந்திய அரசை இலங்கை பிரச்சினையில் ஓரளவு செயல்பட வைத்திருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட்டால் ஈழக் கோரிக்கை குறைந்துவிடும்.
இலங்கைத் தமிழர்கள், தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டதாகக் கூற முடியுமா?
முழுமையாக கைவிட்டதாகச் சொல்ல மாட்டேன் ஆனால் தனி ஈழம் சாத்தியமற்றது. என்ற மனநிலையில் இருக்கின்றார்கள் அந்த கோரிக்கையை முழுமையாக கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழும் மனநிலைக்கு கொண்டு வரவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு! அதாவது நாங்களும் இலங்கை நாட்டின் மக்கள் தான் என தமிழ் மக்கள் உணரும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
மீண்டும் ஆயுத போராட்டத்தை தமிழர்கள் ஆரம்பிக்கக்கூடும் என்கின்ற பயத்தில் தான் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க சிங்கள அரசு தயங்குகிறதா?
மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வரும் என்கின்ற நம்பிக்கை  சிங்களத் தலைவர்களுக்கே இப்போது இல்லை. அதேசமயம் சிங்கள மக்களை தங்கள் பக்கத்தில் வைக்க இதை ஒரு அரசியல் உத்தியாக பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இது எதிர்விளைவுகளை தான் உருவாக்கும். என்பதுகளில் நாங்களாக விரும்பி ஆயுதத்தை எடுக்கவில்லையே சிங்கள அரசுகள் எங்கள் மீது திணித்த இராணுவ அழுத்தங்கள் தான் ஆயுதப் போராட்டங்களுக்கு காரணம் எனவே இன்றய தலைவர்களும் ஒரு நியாயமான தீர்வை தராமல் இருந்தால் இருபது அல்லது இருபத்ததைந்து வருடங்களில் இளைஞர்கள் வேறு முடிவுகளுக்கு போகலாம்.
இந்தியாவிடம் என்ன மாதிரியான ஆதரவை எதிர்ப்பார்க்கின்றீர்கள்?
இரண்டு விதமான எதிர்ப்பார்ப்புக்கள் உண்டு மக்களுக்கு வீடுகள் உள்ளிட்ட வாழ்வாதார உதவிகள் இன்னும் கூடுதலாக தேவை!
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நியாயமான அரசியல் தீர்வுக்கு இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்
தமிழ் மாகாண கவுன்சிலுக்கு நில அதிகாரம், மத்திய அரசின் நேரடி தலையீடு அற்ற நிர்வாகம் நாங்களே எங்கள் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரம் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிகாரம் ஆகியவற்றை பெற்று தர வேண்டும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விசிட் குறித்து தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
சுதந்திரத்திற்கு பிறகு யாழ்ப்பாணம் வரும் முதல் இந்தியப்பிரதமர் மோடி தான் வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை அவர் சந்தித்துப் பேசுவார் என நினைக்கின்றோம். அது போல இலங்கைத் தமிழ் மக்களையும் சந்தித்துப் பேச வேண்டும் தமிழர்களின் மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை ஆகிய தீர்வுகளுக்கு மோடி அழுத்தம் கொடுப்பார் என மக்கள் எதிர்ப்பார்கின்றார்கள்.
தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி இலங்கை பிரதமர் ரணில் பேசியிருக்கின்றாரே?
அவரது பேச்சை ஏற்க முடியாது அதேசமயம் இலங்கைத் தமிழ் மீனவ சமூகம் முப்பது வருடங்களாக அழிவை எதிர்நோக்கிய சமூகம். வறுமை கோட்டுக்கு கீழ் நின்று வாழும் சமூகம். அந்த சமூகம் தங்கள் தொழிலை செய்வதற்கு வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் இதை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைமைளும் மீனவர்களும் உணர்ந்து அதற்கேற்ப பேச்சுவார்த்தை மூலமாக பிச்சினையைத் தீர்க்க வேண்டும்.
இரு நாட்டு தமிழ் மீனவர்களின் மோதலாக இந்தப் பிரச்சினையை இலங்கை அரசுதான் திசை திருப்புகிறதோ?
இரு தரப்பு தமிழ் மீனவர்களும் கடலில் சந்திக்க வேண்டியிருக்கிறது தொழில் போட்டி இருப்பது இயற்கை எனினும் அதை ஊதி பெருக்க சிங்கள அரசு முயற்சிக்கும் எனில் தமிழர்களும் தமிழர்களும் மோதுவதை சிங்கள அரசு விரும்பும்.
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பும் சூழல் உள்ளதா?
அவர்களுக்காக வாழ்விட வசதிகள் அங்கு வழங்கப்பட்டால் தான் அது சாத்தியம். அங்கு குடி பெயர்ந்த மக்களுக்கே இன்னும் வாழ்வாதாரம் கொடுக்கவில்லையே. இந்தியாவில் உள்ள அகதிகளின் காணிகள், இலங்கையில் தமிழர்களாலேயே பிடிக்கப்பட்டிருக்கலாம். அதை எல்லாம் சரி செய்ய கால அவகாசம் தேவைப்படலாம்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக ஈழத்தமிழர்கள் நம்புகிறார்களா?
தமிழ் மக்களில் பலர் அவர் இல்லை என்று நம்புகிறார்கள் சிலர் இருப்பதாக கூறுகின்றனர். எனினும் மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க தலைவராக அவர் பார்க்கப்படுகின்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire