lundi 9 mars 2015

பிரேமதாஸ கொடுத்த ஆயுதம், பணத்தை பிரபாகரன் பெற்றார் - ராஜபக்சே கொடுத்த பணத்தையும் பிரபாகரன் பெற்றார்..விக்கிரமசிங்கே!

ராஜபக்சே கொடுத்த பணத்தை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பெற்று கொண்டார் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக கூறி சூட்டை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரணில் விக்கிரமசிங்கே அளித்துள்ள பேட்டியில், ''கச்சச்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இந்திய அரசும் அது இலங்கைக்குச் சொந்தம் என்றே கருதுகிறது. அதனால், கச்சத்தீவைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா குரல் எழுப்பாது. நாங்களும் கச்சத்தீவை விட்டுத் தரப்போவதில்லை. இது, தமிழக அரசியலில் ஒரு பகுதி என்று எனக்கு தெரியும்.

கச்சத்தீவில் மீன்பிடிக்கும் விவகாரத்தைப் பொருத்தவரை, அது எங்கள் வடக்குப் பகுதி மீனவர்களின் பாரம்பரிய உரிமை சார்ந்தது. எங்கள் தெற்குப் பகுதி மீனவர்கள் கூட, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மீனவர்கள் வந்து இழுவை மூலம் மீன் பிடிப்பதாகக் கூறுகின்றனர். இது எங்களுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது.

இது எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. போர்க் காலத்தில் எங்கள் மீனவர்களை நாங்கள் மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை. நாங்கள் அனுமதித்து இருந்தால், அவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வந்திருப்பார்கள். ஒரு கட்டத்தில், இந்தியாவிலிருந்து வரும் மீனவர்களைச் சுட ஆயுதம் கூட விடுதலைப்புலிகள் கொடுத்தனர். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

தமிழக-இலங்கை மீனவர்களிடையேயான பிரச்னையை, பேசித் தீர்க்க வேண்டும். இந்திய மீனவர்கள் இழுவைமடி வலைகள் கொண்டு மீன் பிடிப்பதை அனுமதிக்க முடியாது. இலங்கை மீனவர்கள், இந்திய கடல் பகுதியில் இப்படி மீன் பிடித்தால் என்ன செய்திருப்பீர்கள்? கச்சத்தீவு உடன்படிக்கை ஏற்பட்ட காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட படகு வகைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தத் தயார் என்றால் அதுதொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். சில அப்பாவி தமிழக மீனவர்களை கடந்த காலங்களில் இலங்கைக் கடற்படை சுட்டுள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், தற்போது சுடுவதில்லை.

இந்திய-இலங்கை உறவை, சீன-இலங்கை உறவில் இருந்து வேறுபடுத்தியே வைத்திருக்கிறோம். இரண்டும் எங்களுக்கு முக்கியமானவை. இந்தியாவுடன் எங்களுக்கு வரலாற்று உறவு உள்ளது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் வரும் எந்த ஒரு செயலையும், மற்ற நாடு செய்யாது என்று பரஸ்பரம் முடிவு செய்திருக்கிறோம். எனவே சீனாவுடனான உறவிலோ, இதர நாடுகளுடனான உறவிலோ இந்த ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு தான் செயல்படுகிறோம்.

ஆனால் ராஜபக்சே ஆட்சியில் என்ன நடந்தது என்றால் சீனாவை மிரட்ட இந்தியாவின் பெயரையும், இந்தியாவை மிரட்ட சீனாவின் பெயரையும் பயன்படுத்தினார். இது விவேகமற்ற கொள்கை. இந்தியா எங்களுக்கு உதவி செய்தது. இந்திய உதவி இல்லாமல், ராஜபக்சேவால் புலிகளை அழித்திருக்க முடியாது. இந்திய உதவிகளை பெற்றுக் கொண்டவர், 13-வது சட்ட திருத்ததை அமல்படுத்தி, பின் அதற்கும் மேலே சலுகைகளை அளிப்பதாக வாக்களித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை.

இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு செய்தனர் என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதை நான் ஏற்கவில்லை. வடக்கு மாகாண முதல்வரின் பேச்சு பொறுப்பற்றது. அவருடன் தொடர்பு கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தும் தீர்மானம் இது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன் போன்றவர்களுடன் இதுபற்றிப் பேசி வருகிறேன். போர் நடந்தபோது அனைத்துத் தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டது உண்மை. தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும், சிங்கள மக்களும் கூட கொல்லபட்டனர்.

பொதுவாகச் சொன்னால், இலங்கை பாதுகாப்புப் படையினர், இந்திய அமைதிப் படை, விடுதலைப் புலிகள் என்று அனைத்துத் தரப்பினராலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இதற்கு, இலங்கை அரசு மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியுமா? யாழ்ப்பாணத்தில் புலிகளின் அரசியல் தலைமை மிச்சம் இருந்திருந்தால், விக்னேஸ்வரன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று முதல்வராகப் பதவி ஏற்றிருக்க முடியாது என்பதை அவரே அறிவார்.

ராஜபக்சேவை அதிபராக்கியது யார்? தென் பகுதி மக்கள் அல்ல. 3 முதல் 4 லட்சம் தமிழர்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பதில், ராஜபக்சேவிற்கும், புலிகளுக்கும் ஓர் உடன்படிக்கை இருந்தது. ராஜபக்சே புலிகளுக்கு பணம் கொடுத்தார். இதை ராஜபக்சே கூட மறுத்ததில்லை. பிரபாகரன் பணத்தை பெற்று கொண்டார். பணத்தை எடுத்து சென்று கொடுத்தவர் இன்றைக்கும் மத்திய கிழக்கு ஆசியாவில் எங்கோ உள்ளார்" என்று கூறி உள்ளார்.                                                     .....சாகரன்

Aucun commentaire:

Enregistrer un commentaire