mardi 23 avril 2013

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்


மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் – ஜனாதிபதி
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தத் தயார் எனஅவர்சுட்டிக்காட்டியுள்ளார்.இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் பாதுகாக்கவுமே அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும், இவை மனித உரிமை மீறல்களாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உதயன் பத்திரிகையின் மீதான தாக்குதல் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும், காவல்துறையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதாகவும் கடந்த வாரம் அமெரிக்கா வெளியிட்டிருந்த மனித உரிமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சபாஷ்!கே.பி யா ? தயா மாஸ்ரரா ?

வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறுமென நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கடந்த வருடமே மேற்கொள்ளப்பட்டதுதான். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு முன்னாள் புலிகளிடையே போட்டி நிலவுவதாக அறியக்கிடைக்கின்றது. 

புலிகளின் முன்னாள் ஆயுதக்கடத்தல் மன்னனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதனுக்கும், புலிகளின் முன்னாள் ஊடக ஒருங்கிணைப்பாளரான தயா மாஸ்ரர் எனப்படுகின்ற வேலாயுதம் தயாநிதி என்பவருக்குமிடையே யார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடுவது என்ற விடயத்தில் போட்டி நிலவுகின்றதாம்.

வட மாகாண சபை ஒன்று அமையுமானால் நான் தான் அதில் முதலமைச்சர் என்று வீணைக்கட்சியின் தலைவர் டக்ளஸ் பன்நெடுங்காலமாக கூறிவருனகின்றார் என்பதும் மறுபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நானே என முதலமைச்சர் என சுரேஸ் பிறேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, வித்தியாதரன் என பட்டியல் நீண்டுசெல்வதும் யாவரும் அறிந்தது.

எல்.ரீ.ரீ.ஈயின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிக்கவில்லை


sambanthansurendranஸ்ரீலங்காவில் ஜனநாயகத்தின் கழுத்து மெதுவாக ஆனால் உறுதியாக நசுக்கப்பட்டு வருகிறது, அரசாங்கத்தை விமர்சிக்கும் பலர், குறிப்பாக ஊடகங்கள் ஒரு சோகமான விதியை சந்தித்து வருகின்றன என்பது மறுக்கமுடியாததாக உள்ளது. சம்பந்தன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரும் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் யாவும் வடக்கிலுள்ள தமிழர்கள் மீது அரசாங்கத்தால் மேற்கொள்ளப் பட்டவை என்று தேனொழுகப் பேசி வருகிறார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்கள்மீது சம்பந்தன் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த குற்றச்சாட்டுகளில் ஏதாவது ஒன்றாவது முற்றிலும் கட்டுக்கதையாக இருக்கும் என்று பரிந்துரைப்பதுகூட முற்றிலும் நம்பமுடியாததாக இருக்கிறது. எனினும் எதிராளிகளை உடல்ரீதியாக தாக்கும் பழக்கம் வடக்கிலுள்ள அரசாங்கத்தின் தமிழ் எதிராளிகளுக்கு மட்டும் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இத்தகைய தாக்குதல்கள் நாட்டின் இதர பாகங்களிலுள்ள சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதும் நடத்தப்பட்டுள்ளன. ஒன்றில் சம்பந்தன் அல்லது சுரேந்திரன் நடைபெற்றதாக புலம்பும் விடயங்களில் உண்மையான அல்லது நேர்மையான ஏதாவது தடயங்கள் வைத்திருப்பார்களானால், ஒருவர் இயற்கையாகவே எதிர்பார்க்ககூடியது, அவர்கள் பாதகமான கருத்துக்களை வெளியிடுவதுபோல, சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையும் நிறுத்தும்படி குரல் கொடுத்திருக்க வேண்டும்.
எனினும் அவர்கள் அப்படி செய்யாதது மட்டுமல்ல, ஒன்றில் சம்பந்தன் அல்லது சுரேந்திரன் ஆகியோரில் ஒருவர்கூட எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்ட அட்டூழியங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட மூச்சு விடவில்லை. அப்படிச் செய்வது உண்மையில் அவர்களது கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. உத்தேச உலகத் தமிழ் பேரவை (ஜி.ரி.எப்) எல்.ரீ.ரீ.ஈ யின் வழித்தோன்றல்கள் அல்லது அதன் வாரிசாக இருப்பதுற்கு முயற்சி செய்யும் ஒரு வதந்தி கிளப்பும் அமைப்பாகும், அதேவேளை ரி.என்.ஏ மற்றும் அதன் அங்கங்களான இலங்கை தமிழரசுக் கட்சி(ஐ.ரி.கே.ஏ), ஈபிஆர்எல்எப் (சுரேஸ்), புளொட், மற்றும் ரெலோ போன்ற கட்சிகள் கொண்டிருக்கும் நபர்கள், அவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ ஆனால் எல்.ரீ.ரீ.ஈ தான் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை உண்மையில் ஏற்றுக்கொள்ளும் முறையற்ற கருத்தினைக் கொண்டவர்களாக உள்ளார்கள், மற்றும் இதன் காரணமாக சம்பந்தன் மற்றும் மோசடிகளில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமல்லாது, ஆனால் அவர்களைப் போலல்லாது கண்ணியம், சுயமரியாதை என்பனவற்றை கொண்ட சட்டத்தை மதிக்கும் ஒழுங்கான தமிழர்கள் எல்லோருமே அதை பின்பற்றுகிறார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ, சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை தொடர்ச்சியாக தாக்கிவந்துள்ளது. மற்றும் சகல இனம், பால் ,வயது என்பனவற்றை சேர்ந்த அனைவரும் அவர்களால் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். சம்பந்தன் மற்றும் ரி.என்.ஏ, அதேபோல சுரேந்திரன் மற்றும் இன்னும் பிறக்காத ஜி.ரி.எப் இனை சேர்ந்த, அதன் ஏனைய அங்கத்தவர்கள் ஆகிய அனைவரும் இது விடயத்தில் பெரும் மௌனத்தை கடைப்பிடித்தார்கள். எல்.ரீ.ரீ.ஈயின் அட்டூழியங்கள் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு முறையான கணக்கெடுப்பு நடத்தப்படுமாக இருந்தால், அநேகமாக அவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை போராட்டத்தில் அயுதப்படையினரால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட அதிகமாக இருக்கும். இந்த விடயங்கள்தான் சம்பந்தன் மற்றும் ரி.என்.ஏ, அதேபோல சுரேந்திரன் மற்றும் இன்னும் பிறக்காத ஜி.ரி.எப் இனை சேர்ந்த அதன் ஏனைய அங்கத்தவர்கள் ஆகிய அனைவரையும் ஊமையாக்கியுள்ளது, அவர்கள் தங்களது பிழைப்புக்கு முக்கியமான எல்.ரீ.ரீ.ஈ யை எந்தக் காரணத்துக்காகவும் தாக்குவதற்கு தைரியமோ அல்லது கவலையோ கொள்ளமாட்டார்கள்.Mullivaikal-6
எல்.ரீ.ரீ.ஈயினால் நிகழ்த்தப்பட்ட இறுதியான அட்டூழியம் யுத்தத்தின் கடைசி நாட்களில்தான் நடத்தப்பட்டது, அந்தச் சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈ யின் நடத்தை காரணமாக சகல வயதையும் மற்றும் பாலையும் சேர்ந்த தமிழ் பொதுமக்கள் அனைவரையும் பணயக் கைதிகளாக பிடித்து முல்லைத்தீவின் ஒரு சிறிய துண்டு நிலத்தினுள் அடைத்து வைத்து, அதேவேளை ஸ்ரீலங்கா இராணுவம் அவர்கள்மீது நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக அந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்களுக்காக இப்போது சம்பந்தன் மற்றும் சுரேந்திரன்  ஆகியோர் தேனொழுகப் பேசி, தங்கள் தவிப்பையும் புலம்பலையும் வெளிப்படுத்துகிறார்கள். இருந்தும் சம்பந்தன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரும் புலிகளின் இந்த அட்டூழியம் அதன் அளவில் மிகப்பெரியதாக இருந்தும்கூட ஆழ்ந்த மௌனத்தை கடைப்பிடிக்கிறார்கள் (அல்லது ஜெயலலிதாவை போல்). இதுவும் மற்றும் சில முக்கியமான சில விடயங்களைப்போல சம்பந்தன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரும் மௌனம் காக்கும் ஒரு விடயமாகும். அதேவேளை எல்.ரீ.ரீ.ஈ தமிழ் சிறுவர்களை கடத்திய போதும், மற்றும் வயதுவந்த தமிழர்களைக் கடத்திச்சென்று கப்பம் பெறுவதற்காக அவர்களை சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்தது அல்லது அடிமைத் தொழிலாளர்களாக அதன் பயங்கரவாத அங்கத்தவர்களுடன் சேர்த்தபோதும், அதேவேளை எல்.ரீ.ரீ.ஈ உத்தேச வரிகளை மக்கள்மீது திணித்து அவர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு தேடிய பணத்தை கப்பமாக அறவிட்டபோதும் இந்த சம்பந்தன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரும் மௌனமாகவே இருந்தனர்.
அவர்கள் ஒன்றில் நடப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் (இதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது), அல்லது எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பு குரல்களை எழுப்புவதற்கும் அவர்கள் மிகவும் பயந்திருக்க வேண்டும். எனினும் எல்.ரீ.ரீ.ஈ மீதிருந்த அத்தகைய மரண பயம் காரணமாக தமிழ் மக்களுக்கு அவர்கள் புரிந்த இத்தகைய தவறான அட்டூழியங்களையும் பார்த்து மௌனமாக இருந்த இவர்களுக்கு, சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ ராஜபக்ஸ அரசாங்கத்துக்கும் மற்றும் எங்கள் ஆயுதப்படையினருக்கும் எதிராக கடுமையான பொது விமர்சனங்களில் ஈடுபடுவதற்கு மனச்சாட்சி என்ற ஒன்று இடம் தராது. இது விசித்திரமானதாக உள்ளது அல்லவா?
இந்த விடயங்களுக்கு அப்பால் சம்பந்தன் மற்றும் சுரேந்திரன் ஆகியோரால், அரசாங்கம் மற்றும் எங்களது ஆயுதப்படையினர் ஆயுத மோதல் நடைபெற்ற இருண்ட காலகட்டத்தில் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையை குறித்து எந்தவிதமான வழியிலாவது பாராட்டுகளை தெரிவிக்கவில்லை .இது எல்.ரீ.ரீ.ஈ யானது வட மாகாணத்தின் பெரும்பகுதியையும் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளையும் தனது நடைமுறை கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்த காலகட்டம். இருந்தும் ஸ்ரீலங்கா அரசாங்கம் மக்களின் நிதியை (அது குறிப்பாக சிங்கள மக்களின் நிதியை) கொண்டு உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் அந்தப் பகுதியில் வாழும் தனது குடிமக்களுக்கு வழங்கியது, அந்தப் பகுதியில் உள்ள மருத்துவ மனைகளை இயங்க வைத்து அதற்கு தேவையான மருந்துகளையும் மற்றும் உபகரணங்களையும் வழங்கி அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படும் போரில் காயமுற்றவர்கள் உட்பட நோயாளிகளுக்கும் காயமுற்றவர்களுக்கும் சிகிச்சை வழங்கியது.
ஸ்ரீலங்கா அரசாங்கம்தான்  அந்தப்பகுதிகளில் நிலைகொண்டிருந்த மருதmullivaikal3்துவ அலுவலர்களுக்கான வேதனத்தை வழங்கியது, மற்றும்; அந்தப் பகுதியில் வேலை செய்த வெளிநாட்டவர்களிலிருந்து அங்கு கடமையாற்றிய வைத்தியர்களுக்கு தனது சொந்தப்பணத்தில் அரசாங்கம் பயிற்சிகளை வழங்கியுள்ளது. அந்தக் காலகட்டம் முழுவதும் அந்தப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசாங்க திணைக்களங்கள் யாவும் இயங்குவதற்கு வழி செய்யப்பட்டிருந்தன, மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் முழுவதையும் ஸ்ரீலங்கா அரசாங்கமே வழங்கியது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மேற்பார்வையின்கீழ் பொதுப் பரீட்சைகள் நடத்தப் பட்டதுடன் மற்றும் நோய் தடுப்பு பிரச்சாரங்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடத்தப்பட்டதை போல வடமாகாணம் முழுவதும் நடத்தப்பட்டது, இவையாவும் அந்தப் பிரதேசங்கள் எல்.ரீ.ரீ.ஈயின் இரும்புப்பிடியின் கீழ் இருக்கும்போதே நடத்தப்பட்டன. இவை யாவும் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் சட்டவிரோத கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பிரதேசங்களுக்கு அரசாங்கம் ஆற்றிய சேவைகள் ஆகும்.
 சம்பந்தன் அல்லது சுரேந்திரன் அல்லது அவர்களைப் போலுள்ள யாராவது அப்படியான  உதவிகள் எதையாயாவது செய்திருந்தால் என்ன உதவிகளைச் செய்துள்ளார்கள் என்று யாராவது கேட்கலாம்? அவர்கள் நம்பிக்கையற்ற, வெட்கம்கெட்ட, ஏமாற்றுக்காரர்கள், அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை ஆனால் தமிழ் மக்களின் கண்ணீரில் தங்களை பலப்படுத்திக் கொண்டவர்கள். இந்த மோசடிக்காரர்களின், ஏமாற்று வேலைகள் அல்லது அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் வற்புறுத்தல் மூலமாக அல்லது வேறுவழியிலோ தங்கள் பணத்தின் ஒரு பகுதி மூலம் புலிகளின் பொக்கிஷத்தை நிறைக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். இந்த பங்களிப்புகள் ரி.என்.ஏ யின் பதவிகளிலுள்ள சம்பந்தன் குழுவினரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு உதவியதுடன் பல சந்தர்ப்பங்களில் தமிழ் புலம்பெயர் சமூகம் என அழைக்கப்படும் அமைப்புகளை பிரபலமாக்கவும் உதவியது.
எனவே அந்த நாட்களில் நாங்கள் அதிகம் கேட்டிராத சுரேந்தினும், அதேபோன்ற மற்றவர்களும், ஏழைகளும் மற்றும் எளிதில் ஏமாறக்கூடியவாகளுமான தமிழர்களின் பணத்தை கொண்டு வெளிநாட்டு காலநிலைக்கு ஏற்ற உல்லாச சுகபோகங்களை அனுபவிக்கலானார்கள். சுரேந்திரன் போன்றவர்கள் வெளிநாட்டு சூழலில் வாழும் எளிதில் ஏமாறக்கூடிய தமிழர்களின் கடின உழைப்பில் பெறப்பட்ட பணத்தில் எப்படி தின்று கொழுத்துள்ளார்கள் என்பதை பாராட்டத் தக்கவிதத்தில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹ_ல் அவர்கள் எழதியுள்ள ‘நாடு கடந்தவர்களின் திரும்புதல் அல்லது திரும்பிவந்த நாடுகடந்தவர்கள்’ எனும் தலைப்பிலான புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், அந்த அற்புதமான புத்தகத்தை ஒருவர் கட்டாயம்; படிக்க வேண்டும்.
இறுதியாக சம்பந்தன் அல்லது சுரேந்திரன் அல்லது அவர்களின் கூட்டத்திலுள்ள எவராவது முல்லைத்தீவில் அகப்பட்டிருந்த தமிழர்களை விடுவித்தார்களா அல்லது சம்பந்தன் அல்லது சுரேந்திரன் அல்லது அவர்களின் கூட்டத்திலுள்ள எவராவது தமிழ் சிறுவர்கள் கடத்தப்படும்போது, அல்லது அதேபோல பிராயமான தமிழர்கள் எல்.ரீ.ரீ.ஈயினால் கடத்தப்பட்டு அவர்களது கடின உழைப்பினால் தேடிய பணத்தை எல்.ரீ.ரீ.ஈ கப்பமாக அறவிட்டபோது, அதை தடுத்து அவர்களைக் காப்பாற்றினார்களா. ஸ்ரீலங்காவின் ஆயுதப்படையினர்தான் தங்கள் உயிர்களையும் உடல் அவயங்களையும் கட்டுப்பாடற்ற வகையில் தியாகம் செய்து வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு இந்த நினைவுச்சின்னமாக நிலைத்து நிற்கும் சேவையை புரிந்துள்ளார்கள். இந்த நன்றிகெட்ட தன்மை நிச்சயமாக முன்னெப்போதும் கண்டிராத ஒன்று, தமிழர்களுக்கு அவர்களின் கடைசி மணி நேரத்தில் தேவையான நேரடி உதவிகளைக்கூட இந்த இந்த சிறப்புமிக்க மோசடிக்காரர்கள் போதுமானளவு செய்யவில்லை, எனவே வெட்கமில்லாமல் கடுமையான கோரிக்கைகளை எல்.ரீ.ரீ.ஈயினர் புரிந்த பலவிதமான அக்கிரமங்களிலிருந்தும் வடபகுதியிலிருந்து தமிழ் மக்களை மீட்க மட்டுமே செய்த எங்கள் ஆயுதப் படையினரின்மீது சுமத்துகிறார்கள், - இதிலிருந்து ஊகிக்கக்கூடியது என்னவென்றால் தமிழர்களின் துன்பங்களிலிருந்து ஒரு நல்ல வாழ்க்கையை தமிழர்களுக்கு அமைத்துக்கொடுக்க அவர்கள் இதுவரை ஒன்றும் செய்யவில்லை, அது தொடர்வதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள், அந்த துன்பங்கள் முடிவதை அவர்கள் விரும்பவில்லை, ஏனெனில் அவர்கள் அதை வெளிப்படையாக செய்வதால் அரசியல் ரீதியாக அவர்கள் எவ்வளவு பொருத்தமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது  அப்பட்டமாகத் தெரிகிறது.
அந்த இருண்ட நாட்களிலிருந்து இன்றைய நாட்களுக்கு வருவதில், சம்பந்தன் மற்றும் அவரது குழுவினர் அல்லது சுரேந்திரன் மற்றும் அவரது குழுவினர் பொருள் அடிப்படையில் மற்றும் பொதுவாக தமிழர்கள் அதுவும் குறிப்பாக வடபகுதி தமிழர்கள் என்கிற உறுதியான வகையில் நிலைக்ககூடிய என்ன செய்துள்ளார்கள்? இதற்கு மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணமாக எழுவது, இந்தத் தமிழர்களுக்கு, தென்னிந்தியத் தமிழர்களால் குறிப்பிடத்தக்க வகையில் அவர்களது மீனவர்களால் தொடர்ச்சியாக ஏற்படும் இடையூறுகள்தான்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் மீன்பிடி ஒரு பிரதான தொழில் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரதேசங்களை சுற்றியுள்ள நீரில் மீன்கள் நிறைந்துள்ளன, அங்குள்ள எளிய தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்கள், மீன்பிடிப்பதை  தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கை நடத்தவும் மற்றும் இந்த நாட்டிலுள்ள முழு மக்களுக்கும் கட்டுப்படியான விலையில் மீன்களை வழங்கவும் அவை உதவியாக உள்ளன. எனினும் அந்த பிடி, தென்னிந்தியாவை சேர்ந்த தமிழ் மீனவர்களால் சோனியா காந்தி, மன்மோகன்சிங், ஜெயலலிதா, மற்றும் கருணாநிதி ஆகியோர்களின் ஆசீர்வாதத்துடன் தொடர்ச்சியான அடிப்படையில் திருடப்பட்டு வருகின்றன, இந்த எளிய மீனவர்களின் மீன்களை தண்டனை எதுவும் இல்லாது திருடிச்செல்வது காரணமாக ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களின் வாழ்வாதரம் பாதிப்புக்கு உள்ளாகிறது.
சம்பந்தன் அல்லது சுரேந்திரன் மற்றும் அவர்களைப் போன்றவர்கள் தென்னிந்தியாவின் தமிழ் மீனவர்கள் புரியும் இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் குறித்து  அல்லது அவர்களுக்கு வழங்கப்படும் அரசியல் ஆதரவு குறித்து எப்பொழுதாவது ஒரு சிறிய சிணுங்கலையாவது வெளிப்படுத்தியிருப்பார்களா? இன்று அவர்களது முதலமைச்சர் ஜெயலலிதா, இந்திய மீனவர்கள் எங்கள்  எல்லைக்குள் இருக்கும் நீருக்குள் அத்துமீறிப் பிரவேசித்து எங்கள் உணவை திருடிச் செல்வதை தடுத்து எங்கள் கடற்படையினர் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை ஆக்கிரமிப்பு நடவடிக்கை எனக் குற்றம் சாட்டுகிறார். உண்மையில் இந்த நடிகை யதார்த்த வாழ்க்கையின் உண்மைகளைப் பற்றி அறியாமலிருக்கிறார்.
எங்கள் கடல் எல்லை எங்கள் நிலத்தை போலவே எங்களது எல்லையாகும், இந்தியனோ, சீனனோ, அவுஸ்திரேலியனோ அல்லது அமெரிக்கனோ,
யாராக இருந்தாலும் எந்த வெளிநாட்டவருக்கும் எங்கள் கடல் எல்லைக்குள்ளேயோ அல்லது எங்கள் நிலத்துக்குள்ளேயோ ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் எழுத்து மூலமான அனுமதி இன்றி,வழக்கமாக அது ஒரு கடவுச்சீட்டில் விசா வடிவத்தில் வழங்கப்படும,; அதை தவிர வேறு எந்தக் காரணத்தைக் கொண்டும் அடியெடுத்து வைப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. இந்த மீன் கொள்ளையர்கள் எவரிடமும் விசா கிடையாது என்பதை யாரும் மறுக்கமுடியாது. எங்கள் கடல் எல்லைக்குள் அவர்கள் மீன்பிடிக்கும் அவர்களது நடத்தை,  ஒரு கொள்ளைக்கூட்டத்தினர் மற்றொருவருடைய வீட்டுக்குள் புகுந்து அவரது பொருட்களைக் கொள்ளையடிப்பதற்குச் சமனானது,
மற்றும் அந்த வீட்டைக் கொள்ளையடிப்பவர்களைப் போலல்லாது இந்த மீன் கொள்ளைக்காரர்களுக்கு சோனியா காந்தி, மன்மோகன்சிங், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோருடைய ஆதரவு உள்ளது, எங்கள் மீனைக் கொள்ளையடிக்கும் இந்த திருடர்கள் அத்தகைய அதிகாரசக்திகளின் பின்துணையை பெற்றுள்ளார்கள். அவர்கள் ஸ்ரீலங்காவின் மீன்களை களவாடி வடக்கு மற்றும் கிழக்கினை சேர்ந்த எளிய தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். சம்பந்தன் மற்றும் சுரேந்திரன், ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் சிசன், சர்வதேச மனித உரிமை பேரவையை சேர்ந்த நவி பிள்ளை ஆகியோர் உட்பட மற்றும் பலரும் இந்த விடயத்தில் ஏன் மௌனமாக உள்ளார்கள்? இந்தியாவை எதிர்ப்பதற்கு அவர்கள் அஞ்சுகிறார்களா? அது அப்படித்தான் என்று தோன்றுகிறது. அதன்படி இதுபோன்ற முற்றிலும் கறைபடிந்த சக்திகளிடமிருந்து வெளிவரும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் என்பனவற்றுக்கு எத்தகைய கனம் மற்றும் தீவிரம் என்பனவற்றை ஒருவர் செலுத்த முடியும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

lundi 22 avril 2013

இராஜதந்திரிகளுக்கும் இலங்கை அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அரசுடன் கலந்தாலோசிக்காமல், எவ்வித இராஜதந்திர தீர்மானங்களையும் எடுக்கக்கூடா தென வெளிநாடுகளில் சேவையாற்றும் தனது அனைத்து இராஜதந்திரிகளுக்கும் இலங்கை அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

   இவ்விடயம் தொடர்பாக பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சினூடாக இராஜதந்திரிகளுக்கு அரசு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என தெரியவருகின்றது. 

   அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய கடந்த வாரம், கொழும்பு நிர்வாகத்துடன் கலந்துரையாடாமல் இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் சம்பந்தமாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன் போது, சீனாவுக்கு எதிராகவும் அவர் கருத்து வெளியிட்டார் எனவும், அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடத் தயாராக இருந்தார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

   இந்த விவகாரமானது இலங்கை அரசுக்கு பெரும் சர்ச்சையாக மாறியதுடன், சீனா உள்ளிட்ட பல தரப்பிடம் இருந்து எதிர்ப்புகள் வந்ததாகவும் அறிய முடிகின்றது. 

   இதனையடுத்தே, கொழும்புடன் கலந்தாலோசிக்காது எவ்வித இராஜதந்திரச் செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டாம் என தமது இராஜதந்திரிகளுக்கு இலங்கை பணிப்புரை விடுத்துள்ளது. 

   இதன்படி இனிவரும் காலப்பகுதியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. 

   அதேவேளை, இராஜதந்திர கோட்பாடுகளுக்கு அப்பால் செயற்பட்டமை குறித்து அரசு, ஜாலிய விக்கிலமசூரியவை கடுமையாகக் கண்டித்திருக்கிறது என்றும் அறிய முடிகின்றது. 

   நாட்டுக்கு எதிராக கடும் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில், தூதுவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டால் அது மேலும் அழுத்தங்களை உண்டுபண்ணும். இந்த விடயம் உட்பட முக்கிய சில விடயங்களைக் கருத்திற்கொண்டே அரசு இராஜதந்திர செயற்பாடுகளுக்கு புதிய சுற்றறிக்கையை வகுத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.

dimanche 21 avril 2013

ஏமாத்து வாதிகளான ஜோதிடரை நம்பி மாகாணசபைத் தேர்தல்........தினம் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

ஜோதிடரின் ஆலோசனைக்கு அமைய வட மாகாணசபைத் தேர்தல் தினம் நிர்ணயிக்கப்படும் - ஜனாதிபதி
 ஜோதிடரின் ஆலோசனைக்கு மைய வட மாகாணசபைத் தேர்தல் 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தலை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், தேர்தல் தினம் பற்றி ஜோதிடருடன் கலந்தாலோசித்தே தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெற்றியீட்டக் கூடிய தினமொன்றை ஜோதிடர் வழங்குவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிகரட், மதுபான விலை அதிகரித்த போது எவரும் முறைப்பாடு செய்யவில்லை எனவும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

7200 அடி உயரத்திலும் 24 கிலோமீற்றர் நடந்து சென்று பயிலும் நான்காம் வகுப்பு மாணவன்

பாடசாலைக்கு செல்வதற்காக நாளொன்றுக்கு 24 கிலோமீற்றர் நடக்கும் நான்காம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவன் இரத்தினபுரி,பலாங்கொடை நான்பெரியல்ல தோட்டத்தில் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாணவர் விவேகானந்தா வித்தியாலயத்திலேயே கல்விபயின்று வருகின்றார். இந்த பாடசாலை மற்றுமொரு தோட்டத்திலேயே இருக்கின்றது.

சப்ரகமுவ மாகாண சபை உத்தியோகஸ்தர்கள் அடங்கிய குழு முதலமைச்சர் மஹிபால ஹேரத்துடன் இப்பகுதிக்கு விஜயம் செய்தது.

நான்காம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவன் பாடசாலை செல்வதற்கு அதிகாலை 4 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டுவிடுவார் என்றும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்கு இரவு 7 மணியாகிவிடும் என்றும் இந்த குழுவினர் கண்டறிந்துக்கொண்டனர்.

குடும்பத்தில் மூத்தபிள்ளையான இவர் தனது பெற்றோருடன் நெக்குரேன் தோட்டத்தில் வசித்து வருகின்றார். இந்த தோட்டம் சப்ரகமுவவில் அதியுயரமான பகுதியிலேயே இருக்கின்றது.

மலைப்பாங்கான இப்பகுதியில் போதியளவான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. வீதிகளும் குத்துசரிவானதாகவே இருக்கின்றது.

சில காலங்களில் வீசுகின்ற பலமான காற்று பொது மக்களின் போக்குவரத்திற்கு கூட தடையாக அமைந்துவிடுகின்றது. இந்த தோட்டம் கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்திலும் பலாங்கொடையிலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கின்றது.

இந்த தோட்டத்தில் வாழ்கின்ற 16 பிள்ளைகளில் இவர் மட்டுமே பாடசாலைக்கு செல்கின்றார். இந்நிலையில் ஏனைய 15 மாணவர்களுக்கும் கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

குறித்த மாணவனை சந்தித்த முதலமைச்சர் இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியிலும் கல்வியை தொடர்வதனையிட்டு அவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.         -கெலும் பண்டார

நோய்களை தடுக்கும் மருந்துகள் இலங்கையில் தயாரிப்பு.


Colombo National HospitraiColombo National Hospitrai. 1அடுத்துவரும் மூன்று, நான்கு வருடங்களில் தொற்றா நோய்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.அத்துடன் பல வருடங்களாக நடை முறைப்படுத்தப்படாதுள்ள சேனக பிபிலேயின் தேசிய மருந்துப் பொருள் கொள்கையை செயலுருப்படுத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கடந்த கால அரசாங்கங்கள் முடிவுகள் எடுப்பதற்கும் தயங்கிய விடயங்களில் கூட நாட்டு மக்களின் ஆரோக்கிய நலன்களைக் கருத்தில் கொண்டு நாம் தீர்மானங்கள் எடுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 660 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பத்து மாடிகளைக் கொண்ட மூன்றாவது வார்ட்டுத் தொகுதியை வைபவ ரீதியாக நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில் உங்கள் அனைவருக்கும் நான் முதலில் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு உங்கள் அனைவரதும் நல்லாரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த 30 வருடங்களாக நாம் எந்த இடத்திலாவது மரணிப்போம் என்ற நிலையில் தான் வாழ்ந்தோம். அப்போது இந்நாட்டு மக்களின் ஆயுட் காலத்தினை சுகாதாரத்துறை தீர்மானிக்கவில்லை. மாறாக பயங்கரவாதிகளே மக்களின் ஆயுட்காலத்தைத் தீர்மானிப்பவர்களாக விளங்கினர்.வெளியில் சென்ற நாம் உயிருடன் திரும்ப முடியுமா என்ற அச்சம் நிலவியது அதற்கு நீங்களே நல்ல சாட்சியாளர்கள்.
அன்று எத்தனை ஆயிரம் பேர் துப்பாக்கிகளாலும், குண்டுகளாலும் காயப்படுத்தப்பட்டும், கொல்லப்பட்டும் இந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களில் படைவீரர்களை விடவும் அப்பாவியான மனிதர்களும், தாய்மாரும், குழந்தைகளும் தான் அதிகளவில் இருந்தனர்.அதேநேரம் கொழும்பு விபத்து சிகிச்சைப் பிரிவுக்குத்தான் நாட்டில் எங்காவது இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களாலும், துப்பாக்கி பிரயோகங்களாலும் காயமடைந்தவர்களினதும் உயிரிழந்தவர்களதும் உடல்கள் கொண்டுவரப்பட்டன. என்றாலும் இனிமேல் அப்படியான ஒரு நிலைமை இந்நாட்டில் மீண்டும் ஏற்படாது. அப்படியான நிலைமை ஏற்படவும் நாம் இடமளிக்கவும் மாட்டோம்.
இந்நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக நாம் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். எமக்குப் பாரிய பயங்கரவாத சவால் இருந்த போதிலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வளவுதான் நிதியொதுக்கிய போதிலும் இந்நாட்டின் அபிவிருத்திக்கும், சுகாதார சேவைக்கும் ஆற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிறைவேற்ற தவறவில்லை. இதுவரையும் எந்த அரசாங்கமும் முடிவு எடுப்பதற்குத் தயங்கிய விடயங்களில் கூட மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நாம் தீர்மானங்களை எடுத்து இருக்கின்றோம். குறிப்பாக மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் தொடர்பாக நாம் முடிவுகளை எடுத்து இருக்கின்றோம்.
அத்தோடு மருந்து பொருட்களின் வர்த்தக நிலை குறித்தும் நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கவும் நாம் பின் நிற்கவில்லை. பல வருடங்களாக செயற்படுத்தப்படாதுள்ள சேனக பிபிலே மருந்துப் பொருள் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தீர்மானித்து இருக்கின்றோம்.மேலும் அடுத்துவரும் 3, 4 வருடங்களில் தொற்றா நோய்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இந்நாட்டிலேயே உற்பத்தி செய்யக் கூடிய வகையில் வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பித்து இருக்கின்றோம். இதன் நிமித்தம் நாம் அழைப்புக்களை விடுத்து இருக்கின்றோம். இதற்கென தனியான கைத்தொழில் பேட்டையொன்றைக் குருநாகலில் ஆரம்பித்து இருக்கின்றோம்.
நாம் வரலாறு நெடுகிலும் இலவச சுகாதார சேவையைப் பாதுகாத்து வந்துள்ளோம். சுகாதார சேவையின் வசதிகளை பெற்றுக்கொடுத்து அவற்றை மேம்படுத்தியுள்ளோம். நாம் இதனை நலன்புரி சேவையாக உயர் மட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும்.இந்நாட்டின் தாதியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்யவென 15,000 பேரைத் தாதியர்களாகச் சேர்த்தோம். அதேநேரம் வருடத்திற்கு 1.200 மருத்துவர்கள் அரசாங்க மருத்துவ சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள். இந்தக் காலப்பகுதியில் சுமார் 17 ஆயிரம் டொக்டர்கள் அரச சேவையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 2013 ஆம் ஆண்டுக்கென சுகாதாரத்துறைக்கு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக 125 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு ஆயிரம் ஆஸ்பத்திரிகளை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் நாம் ஆரம்பித்துள்ளோம். அதேநேரம் ஆஸ்பத்திரிகளுக்குத் தேவையான வார்ட்டுகளையும் சத்திர சிகிச்சை கூடங்களையும் ஏற்படுத்தியுள்ளோம். எமக்கு இப்படியான பொது வைத்தியசாலைகளை மாத்திரமல்லாமல் கிராமிய ஆஸ்பத்திரிகளையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புள்ளது. அப்போது சிகிச்சைக்காக எல்லோரும் கொழும்புக்கு வரத் தேவைப்படாது.
இந்நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்த வேண்டும். அதனால் நாமெல்லோரும் ஒன்றுபட்டு அதற்குத் தேவையான வேலைத்திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். நாம் ஒவ்வொரு வருடமும் சுகாதாரத்துறைக்கான நிதியொதுக்கீட்டை அதிகரித்து வருகின்றோம். எம்மால் புதிய கட்டடங்களை அமைக்கலாம். உபகரணங்களைப் பெற்றுத்தரலாம். என்றாலும் அவற்றைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்கென வேலைத்திட்டம் மிக அவசியம்.
இவ்வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் ஏ.எச்.எம். பெளஸி, பி. தயாரட்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

2 புதிய கோள்கள்:நாசா கண்டுபிடிப்பு


வாஷிங்டன் : பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு அருகில் உள்ள 5 கோள்களில் பூமியைப் போலவே இருக்கும் 2 கோள்களில் அதிக வெப்பமோ, அதிக குளிரோ இல்லாமல் இருப்பதாகவும், நீர் ஆதாரம் போதிய அளவு இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு கோள்களும் தலா 1.41 மற்றும் 1.61 சுற்றளவை கொண்டுள்ளன. இது பூமியை விட சுற்றளவில் பெரியதாகும். இருப்பினும் இந்த கோள்களில் நிலப்பரப்பு பாறை அமைப்பை கொண்டதா அல்லது நீர் அமைப்பை கொண்டதா என்பது குறித்து விஞ்ஞானிகள் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த கோள்கள் மனிதன் வாழ ஏற்ற சூழலை கொண்டதாக இருக்கும் என மட்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
:கெப்லர் 62 ( சூரியனை சுற்றி வரும் நட்சத்திரம் போன்ற கோள்கள்) க்கு அருகே சிறிய புள்ளி போன்ற ஒரு அமைப்பு காணப்படுவதை நாசா விஞ்ஞானிகள் கடந்த ஓராண்டுக்கு முன் கண்டறிந்தனர். அந்த புள்ளி போன்ற அமைப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய 2 கோள்களின் தன்மை கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த புள்ளி போன்ற நட்சத்திரம் போன்ற அமைப்பை சுற்றி 5 கோள்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு கெப்லர் 22பி சுற்றி உள்ள 600 ஒலி ஆண்டு தொலைவில் உள்ள சில கோள்கள் குறித்த ஆய்வை நாசா துவக்கியது. அப்போது பூமியை விட 2.4 மடங்கு பெரிய கோள்கள் கண்டறியப்பட்டது.

ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு நான் பக்கபலமாக நிற்பேன்! - சோபித்த தேரர்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதியளிக்கின்ற பொது அபேட்சகர் ஒருவருக்கு தன்னுடைய பூரண ஆதரவை வழங்குவேன் என்றும், எதிர்க்கட்சியின் பொது அபேட்சகராக ஜனாதிபதித் தேர்தலில் தான் ஒருபோதும் நிற்கப்போவதில்லை என்றும் மாதுலுவாவேசோபித்த தேரர் குறிப்பிடுகிறார்.

இந்த முறையை இல்லாதொழிப்பதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சர்கள் பலர் ஒத்துழைப்பு நல்க முன்வந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்ற தேரர், அந்தப் பிரதியமைச்சர்களுடனான கலந்துரையாடல் தமக்குப் பூரண திருப்தியளித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

இலங்கையரில் அதிகமானோர் மரணத்தைத் தழுவுவதில் முதலிடத்தில் இருப்பது மாரடைப்பாகும்

கடந்த மூன்று நான்கு மாதங்களில் இலங்கையில் மாரடைப்பு ஏற்படுபவர்களின் தொகை கணிசமான அளவு உயர்ந்துள்ளது என சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கிறது.

இதற்கேற்ப, இலங்கையில் மரணத்தை ஏற்படுத்தும் நோய்களுள் முதன்மையான நோயாக மாரடைப்பு உள்ளது எனத்தெரிவிக்கப்படுகின்றது. ஒருநாளைக்கு மாரடைப்புக்காக சிகிச்சை பெற வருபவர்களின் தொகை 620 ஐ எட்டுகின்றது. மாதாந்தம் 18,600 ஆகவும் வருடத்திற்கு இரண்டு இலட்சத்து இருபத்து மூன்றாயிரத்து இருநூறு பேர் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதில், 20பேர் தினந்தோறும் இறக்கின்றனர். மாதத்திற்கு 600 பேர், வருடாந்தம் 7000 க்கு மேற்பட்டோரின் உயிரைக் காவு கொள்ளக்கூடியதாக மாரடைப்பு முன்னணியில் நிற்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கேற்ப, இலங்கையரில் அதிகமானோர் மரணத்தைத் தழுவுவதில் முதலிடத்தில் இருப்பது மாரடைப்பாகும்.

இவ்வாறு மரணத்தைத் தழுவுபவர்களில் பெரும்பாலானோர் புகைத்தல், மதுபானம் அருந்துதல் போன்றவற்றில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள் மற்றும் கொலஸ்ட்ரோல் அதிகமாதல், அதிக இரத்தப் போக்குடையவர்கள், நாளைக்கு 5 நிமிடமாவது தேகாப்பியாசம் செய்யாதவர்கள் என்பவர்களே.

அதிக எண்ணெய், சீனி, மாப்பொருள் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்பவர்கள் மற்றும் ஒருநாளைக்கு 10,000 அடிகளேனும் நடக்காதவர்கள் ஆகியோர் மிக்க கவனமாக இருக்க வேண்டியவர்களாவர் என சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

(கேஎப்)

vendredi 19 avril 2013

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோதல் 9 மாவோயிஸ்ட்டுக்கள் பலி


இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோதல் ஒன்றில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 9 பேரை தாம் கொன்றதாக இந்தியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றில் ரோந்து சென்றவேளை மாவோயிஸ்ட்டுக்களின் மறைவிடம் ஒன்றில் தேடுதல் நடத்த முனைந்த பொலிஸார் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே இந்த மோதல் ஏற்பட்டதாக ஒரு உள்ளூர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலும் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் செயற்படுகிறார்கள்.
ஏழைகளின் உரிமைகளுக்காக தாம் போராடுவதாக மாவோயிஸ்ட் தலைவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா எதிர்கொள்கின்ற மிகப்பெரிய உள்ளக பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாவோயிஸ்டுகள் திகழ்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஐ.நா.சிறப்பு பிரதிநிதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஐ.நா.சிறப்பு பிரதிநிதி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் ஒட்டு மொத்த நிலவரத்தை மதிப்பிடு வதற்காக முதல் முறையாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்காணிப்பதற்கான ஐ.நா. மனித உரிமை குழுவின் சிறப்பு பிரதிநிதியான ரஷிதா மஞ்சு, வரும் 22ஆம் திகதி முதல் 10 நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது, டில்லி, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கேட்டறிய உள்ளார்.

இதுதொடர்பாக ரஷிதா கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கான காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளேன். சமீபத்தில் டில்லியில் இளம் பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டது உள்ளிட்ட சமீபத்திய நிகழ்வுகள், சட்டங்களை மேலும் கடுமையாக்க வாய்ப்பு வழங்கியிருக்கின்றன என்றார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையில் ரசிதா மஞ்சு, தனது பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்வார் என்று ஐ.நா. செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக மே 1ஆம் திகதி ரஷிதா மஞ்சு, செய்தியாளர்களை சந்தித்து தனது அறிக்கை தொடர்பாகபேச உள்ளார்.

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அளவில் கேள்வி எழுந்ததையடுத்து ஐ.நா.சிறப்பு பிரதிநிதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்தபோதும், இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பேசியது குறிப்பிடத்தக்கது.

பேச்சு நடத்தத் தயார்: பொருளாதாரத் தடையை விலக்கினால் : வடகொரியா

north korea prasidentதனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று வடகொரியா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும்; அமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்தும் போர்ப் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்பதை தனது நிபந்தனைகளாக வடகொரியா தெரிவித்துள்ளது.

அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்தது. இதையடுத்து கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பும் பேச்சு நடத்த வேண்டும் என்று சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதற்கிடையே தென்காரியாவுடன் இணைந்து அமெரிக்கா போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் தென்கொரியா வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தென்கொரியா அதிபர் பார்க் கியூன் ஹையுடன் பேச்சு நடத்தினார். அப்போது வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட்டால் பேச்சு நடத்தத்தயார் என பார்க் கியூன் அறிவித்தார்.

தென்கொரியாவின் யோசனையை பரிசீலிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ-மூன் வடகொரியாவுக்கு வேண்டுகோள் கொடுத்தார்.

இந்நிலையில், வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:ர்அமெரிக்காவும், தென்கொரியாவும் உண்மையாகவே பேச்சு நடத்த விரும்பினால், எங்களின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும். முதலாவதாக வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை ஐக்கிய நாடுகள் சபை நீக்க வேண்டும். இரண்டாவதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து மேற்கொண்டு வரும் போர்ப் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்காக தென்கொரியாவில் அமெரிக்கா குவித்துவைத்துள்ள போர் தளவாடங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும். பேச்சுவார்த்தையும், போர்ப் பயிற்சியும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது'' என்று தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் இக்கோரிக்கைகளை அமெரிக்காவும், தென்கொரியாவும் நிராகரிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக சர்வதேச விதிமுறைகளை பின்பற்றும் வகையில் அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே வடகொரியாவுடன் பேச்சு நடத்த முடியும் என்று அமெரிக்காவும், தென்கொரியாவும் நிபந்தனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

jeudi 18 avril 2013

உலக நாடுகளிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால்;விக்கிரமபாகு கருணாரட்ண


இலங்கை உலக நாடுகளிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் இன்று அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளன என்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.

கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யுத்தம் நிறைவடைந்து நாட்டில் ஜனநாயகம் நிலவுவதாக கூறப்படுகின்றது.ஆனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடங்கியுள்ள எந்தப் பரிந்துரையையும் அரசாங்கம் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை.
இந்நிலையில் அரசாங்கம் கடந்த 4 வருடங்களாக நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி தனது ஆட்சியை கொண்டு நடத்தியது.ஆனால் அதன் பிரதிபலிப்புக்கள் தற்போது ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன.அதிலொன்றுதான் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய உதவித் தொகையில் 20 வீதக் குறைப்பு.
இதேவேளை,ஏனைய உலக நாடுகளும் எமது நாட்டுக்கு எதிராக இவ்வாறு செயற்படுமேயானால் அரசாங்கம் அல்ல நாட்டு மக்களே பாரிய சவல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.ஆரம்பத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்பை மக்களே இவ்வாறான சுமைகளை தாங்கினர்.ஆனால் தற்போது சிங்கள மக்களும் இச் சுமையை சுமக்க தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பெண்ணிலைவாதத்திற்காவும், இனவாதத்திற்காகவும் குரல்கொடுக்கிறதாம்;‘நிர்வாண ஜிஹாத்

'பீமேன்' என்பது பெண்களில் ஒருபகுதியினர் தங்களது உடம்பை நிர்வாணமாக வெளிக்காட்டிச் செய்யும் ஒருவகையான பெண்ணியல் போராட்டமாகும். இந்த நிர்வாணப் போராட்டம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நைஜீரியா, லிபியா,கென்யா, உகண்டா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அறபு தேசம் உட்பட சர்வதேச ரீதியிலான இணைப்பைக் கொண்ட ஒரு தளம் அவர்களுக்காக இயங்குகின்றது. அண்மையில் ரியூனிசியாவைச் சேர்ந்த எமீனா ரைலர் என்பவர் தனது நிர்வாண உடம்பைத் தனக்குக் காட்டுவதற்கு உரிமையுள்ளது என குறிப்பிட்டதனால், அவர் கல்லெறிந்து கொலை செய்யப்பட வேண்டுமென ரியூனிசியாவைச் சேர்ந்த மதகுரு அடெல் அமி குறிப்பிட்டார். பீமேன் அதற்கு எதிர்ப்புக் காட்டியது எவ்வாறெனின், நேகட் ஜிஹாத் (நிர்வாண ஜிஹாத்) முறையில் தாங்கள் முஸ்லிம் பள்ளிவாசல்கள், கலாசார நிலையங்கள், அறபுகளின் தூதுவராலயங்கள் என்பவற்றுக்கு எதிராகச் செயற்பட்டனர். இஸ்லாமியர்கள், பெண்களின் உரிமைகளை மதிப்பதற்குப் பதிலாக, உரிமைகளைச் சாவடிப்பதற்கு முயல்பவர்கள் என அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்திய விதவைகளை பிரித்தானியர்கள் தடைசெய்யும்வரை விரதம் அநுஷ்டித்தல், பிரான்ஸுக்கு அடிமையாகியுள்ள அல்ஜீரிய பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும்வரை வீடுகளில் துன்பம் அனுபவித்தல், போன்றவற்றோடு இந்த நிர்வாணப் போராட்டத்தை மேற்கொண்டு பெண்ணடிமைத் தனத்திலிருந்து பெண்களைக் காப்பாற்றுதல் அவர்களது நோக்கங்களாகவுள்ளன. அறபு தேசங்களில் மட்டுமன்றி அவுஸ்திரேலிய பெண்களும் பெண்ணடிமைத்தனத்துக்குள் மூழ்கியுள்ளனர் என ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீமேன் பிரிவினர் மேற்கத்தேயத்திற்குள் அடக்கியொடுக்கப்பட்டுள்ள பெண்ணடிமைவாதத்தையும் வெளிக்கொணர்கிறது. பெண்களின் உடம்பு மட்டுமே தேவையாக உள்ள ஆண்களுக்கு எதிராகச் செயற்படுவதும் அவர்களைத் தெளிவுறுத்துவதும் அவர்களது நோக்கங்கள் என நிர்வாணிகள் குறிப்பிடுகின்றனர்.

இனவாதத்தை மேலெழுப்பாமல் அறபுப் பெண்கள் குரலெழுப்பி அவர்கள் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக இந்த நிர்வாணப் பெண்கள் பல்வேறு சூட்சுமங்களைக் கையாளுகின்றனர் என்பதும், இவ்வாறு பெண்கள் தங்களது அங்கங்கங்களைக் காண்பித்து உரிமைப் போராட்டத்தில் குதிப்பதனால் மேலும் ஆணாதிக்கமும், பாலியல் வன்புணர்வுகளுமே அதிகம் மேலெழும் என்பதுமே உண்மை!

(கேஎப்)

முஸ்லிம்கள் கத்னா (சுன்னத்து) வைப்பது தொடர்பாக ;ஜாதிக ஹெல உறுமய

முஸ்லிம்கள் கத்னா (சுன்னத்து) வைப்பது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய மிகவும் அநாகரிகமான முறையில் கருத்து தெரிவித்திருப்பதனை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடும்போது, இனவாதத்தைக் கக்கி அரசியலுக்கு வந்த ஜாதிக ஹெல உறுமய வாக்களித்த மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யாததால் அரசியல் வங்கரோத்து அடைந்த நிலையில் மீண்டும் இனவாதத்தைக் கக்குவதற்காக புதிய போத்தலில் பழைய கள்ளை ஊற்றுவதுபோல பொது பல சேன என்ற பெயரில் ஜாதிக ஹெல உறுமய மாறுவேடம் போட்டு சில இனவாத பிக்குகளிடம் ஒரு கொந்தராத்தைக் கொடுத்து இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.
ஆரம்ப காலத்தில்  பொதுபல சேனவின்  இனவாதம் சாதாரண சிங்கள பௌத்த மக்களுக்கு மத்தியில் ஓரளவு ஊடுருவிச்சென்றது. தாங்கள் கக்குகின்ற இனவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களும் மூர்க்கத்தனமான பிரதிபலிப்பைக் காட்டுவார்கள். அதை வைத்து ஒரு இனக்கலவரத்தைத் துாண்டலாம் என்ற ஜாதிக ஹெல உறுமயவினதும், பொது பல சேனாவினதும் எண்ணத்திற்கு எதிரான விளைவுகளையே முஸ்லிம்களின் நிதானப் போக்கும், காத்திரமான முன்னெடுப்புக்களும் கொண்டுவந்ததன.
இன்று நேர்மையாக சிந்திக்கின்ற சிங்கள பௌத்த மக்களே பொதுபல சேனாவிற்கு எதிராக போர்க்கொடி துாக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். அதன் பிரதிபலிப்பையே  அண்மையில் கொழும்பு தும்முல்ல சந்தியில் பொது பல சேனவிற்கு எதிரான மெழுகுவர்த்தி தீபம்  ஏற்றும் நிகழ்வில் கண்டோம். மட்டுமல்லாமல் நாளாந்தம் பலதரப்பட்ட இணையத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் படித்த சிங்கள சகோதரர்கள் தொடர்ச்சியாக பொதுபல சேனவிற்கு எதிராக எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் பொது பல சேன சிண்டு முடிவதற்காக அமெரிக்கா பறந்திருக்கின்றார்கள். (அமெரிக்காவில் இவர்கள் தங்கியிருக்கின்ற பௌத்த ஆலயத்தின் நிருவாகிகள் இவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும், இவர்களது பூஜை மற்றும் எந்தவித நிகழ்ச்சிகளிலும் தமது ஆலய பிராந்தியத்தில் வாழ் இலங்கை பௌத்தர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று அறிவித்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.) இவர்களின் தாய் இயக்கமான ஜாதிக  ஹெல உறுமயவினால் பொது பல சேன இல்லாத சிறிய இடைவெளியைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தாமே களத்தில் இறங்கியதன் விளைவுதான் முஸ்லிம்கள் தொடர்பான இந்த அநாகரீக கூற்றாகும். இது சினிமாவில் தாய் வில்லன் தம் தளபதி்களை களத்திற்கு அனுப்பி அத்தளபதிகள் செம்மையாக வாங்கிக்கொண்டு வருகின்றபொழுது தாமே களத்திற்கு போவது போன்றதாகும். அத்தாய் வில்லன்களுக்கும் நியாயமாகச் சிந்திக்கின்ற சிங்கள பௌத்த மக்கள் தளபதிகளுக்குக் கொடுத்த சிகிச்சையையே கொடுப்பார்கள், என்பது இந்தத்தாய் வில்லன்களுக்குத் தெரியாமலில்லை. ஆனாலும், ஆற்றாமை இவர்களை அநாகரிகமாகப் பேச வைக்கின்றது.
முஸ்லிம்கள் கத்னா (சுன்னத்) வைப்பது ஆபாசம் என்றால், பெண்கள் மகப்பேற்றுக்காக வைத்தியர்களிடம் செல்வதை இவர்களது பரிபாசையில் எவ்வாறு அழைக்கலாம் ? என்று கேட்க விரும்புகின்றோம். அதுவும் ஆபாசம் என்றால் இலங்கை வைத்தியசாலைகளிலுள்ள அனைத்து மகப்பேற்று பிரிவுகளையும் மூடுவதற்கு இவர்கள் பாராளுமன்றத்தில் பிரேரனை கொண்டு வருவார்களா ? மகப்பேற்றுக்குச் செல்லுவது வளர்ந்த மகளிர் ஆகும். கத்னா (சுன்னத்) செய்வது சிறு குழந்தைகளுக்காகும்.
எனவே, முந்தியது ஆபாசம் இல்லை என்றால் பிந்தியது எவ்வாறு ஆபாசமாகும் என்று கூறுவார்களா ? இதேபோன்று இன்னும் எத்தனையோ வியாதிகளுக்காக வைத்தியர்களிடம் செல்வதை இவர்களது பரிபாசையில் ஆபாசம் என்று சொல்ல வேண்டும். இருப்பினும் அதையெல்லாம் கேட்டு இவர்களை தர்ம சங்கடப்படுத்த விரும்பவில்லை. அதேநேரம் கத்னா செய்வதிலுள்ள சுகாதார நலன்களைக் கருத்தில் கொண்டு மேற்கத்தேய நாடுகளில் கத்னா செய்வதை ஊக்கப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்ற ஒரு காலத்தில் கத்னா செய்வதிலுள்ள நலன்களை இவர்களுக்கு விளங்கப்படுத்தவும் நாம் முனையவில்லை. ஏனெனில் துாங்குகின்றவர்களைத்தான் எழுப்பலாம். அதேநேரம் நாம் அடுத்தவர்களுக்கு கத்னா செய்ய முனையவில்லை. என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, சமயத்தலைவர்கள் என்பவர்கள் கண்ணியமாகப் பேச வேண்டும். நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுபவர்களாகும். அரசியல் வங்கரோத்து விரக்தியினால் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் பேசி தமது நிஜ நிறத்தினை மற்றவர்களுக்கு காட்ட வேண்டாம் என்றும்  வேண்டுகின்றோம் என்றுள்ளது.

mercredi 17 avril 2013

வடக்கில் இராணுவப் பிரசன்னம் இருப்பது முற்றிலும் உண்மை : அமைச்சர் வாசுதேவ நாணயகார!


வடக்கில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருவது முற்றிலும் உண்மையென சமூக மேம்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.இதேவேளை வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொள்கின்றது என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,வடக்கில் இனப்பரம்பலில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக கூட்டமைப்பினர் கூறும் குற்றச்சாட்டானது ஏற்க முடியாதது. ஆனால் வடக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகம். குடியியல் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையீடுகள் உள்ளன. வடக்கில் குடியியல் நிர்வாகம் இல்லை. எனவே இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்து இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி முழமையான குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இதேவேளை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை படிப்படியாக அமுல்படுத்தி வருகின்றது.வடக்கில் தமிழ் மக்களை அரசாங்கம் அடிமைப்படுத்தவில்லை.தமிழ் மக்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்

தனி நபர் வளர்த்த அதிசய காடு மாமனிதருக்கு... என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!


உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது... எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!!
 
                                                           
                                              மாமனிதருக்கு... என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!



யார் இவர் ?
 
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார்.
 
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும்  இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புதுயுக்தி - எறும்பு
 
200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்... வெகு விரையில் மண பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
 
                                        இவர்களுக்கு வானம் தொட்டுவிடும் தூரம் தானோ...?!!
      
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
 
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
 
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
 
குடும்பம்
 
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
 
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
 
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.
 
மரங்கள் மட்டும் அல்ல
 
                                                 மூங்கிலிலை காடுகளே...!!



தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !! 
 
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார். 
 
இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை... இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே  முடிந்தது.

      கரை தொடும் நதி...பச்சை புடவை போர்த்திய மலை...பூலோக சுவர்க்கம் இதுவன்றோ !!
மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.
உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!
 
இயற்கையை நேசிப்போம்...!! எங்கும் பசுமை செழிக்கட்டும்...!!



பின்குறிப்பு
'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.
இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...
இங்கே இடம்பெற்ற படங்கள் அனைத்தும் முலாய் காடுகளில் எடுக்கப்பட்டது !!