vendredi 19 avril 2013

பேச்சு நடத்தத் தயார்: பொருளாதாரத் தடையை விலக்கினால் : வடகொரியா

north korea prasidentதனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று வடகொரியா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும்; அமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்தும் போர்ப் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்பதை தனது நிபந்தனைகளாக வடகொரியா தெரிவித்துள்ளது.

அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்தது. இதையடுத்து கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பும் பேச்சு நடத்த வேண்டும் என்று சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதற்கிடையே தென்காரியாவுடன் இணைந்து அமெரிக்கா போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் தென்கொரியா வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தென்கொரியா அதிபர் பார்க் கியூன் ஹையுடன் பேச்சு நடத்தினார். அப்போது வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட்டால் பேச்சு நடத்தத்தயார் என பார்க் கியூன் அறிவித்தார்.

தென்கொரியாவின் யோசனையை பரிசீலிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ-மூன் வடகொரியாவுக்கு வேண்டுகோள் கொடுத்தார்.

இந்நிலையில், வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:ர்அமெரிக்காவும், தென்கொரியாவும் உண்மையாகவே பேச்சு நடத்த விரும்பினால், எங்களின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும். முதலாவதாக வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை ஐக்கிய நாடுகள் சபை நீக்க வேண்டும். இரண்டாவதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து மேற்கொண்டு வரும் போர்ப் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்காக தென்கொரியாவில் அமெரிக்கா குவித்துவைத்துள்ள போர் தளவாடங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும். பேச்சுவார்த்தையும், போர்ப் பயிற்சியும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது'' என்று தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் இக்கோரிக்கைகளை அமெரிக்காவும், தென்கொரியாவும் நிராகரிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக சர்வதேச விதிமுறைகளை பின்பற்றும் வகையில் அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே வடகொரியாவுடன் பேச்சு நடத்த முடியும் என்று அமெரிக்காவும், தென்கொரியாவும் நிபந்தனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire