mardi 2 avril 2013

தப்பான வழியில் பணம் சம்பாதிக்க கிளிநொச்சியை தளமாகப் பாவிப்பது பரிதாபத்திற்குரிய விடயமாகும்.;வீ. ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் காரியாலத்தில் ஒரு குழுவினர் தேசியக் கொடியைத் தாங்கியவண்ணம் மிகவும் வெட்கப்படக்கூடிய முறையில் பொலிசாரின் முன்னிலையில் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் ஆதரவாளர்கள் சிலரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை தாக்கியுள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில் இக்குழுவினரின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு கிளிநொச்சி பிரதேச சபை தலைவர், உபதலைவர் உட்பட இருபது பேருக்குமேல் காயமடைந்தும் அவர்களில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ள போது பொது மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட மூவரை எதுவித விசாரணையுமன்றி விடுதலை செய்த பொலிசாரின் நடவடிக்கை அரசாங்கத்தின் கௌரவத்தை மிகக் கீழ்மட்டத்திற்கு இறக்கிவிட்டிருக்கிறது. இச்சம்பவத்தின் பின்னணியில் உயர்பீடத்திலுள்ள யாரோ ஒருவரின் அங்கீகாரம் இருந்துள்ளது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.  பயங்கரக் குற்றவாளிகள் உட்பட  கண்டவர் நின்றவர் எல்லாம் பலவிதத்திலும் தப்பான வழியில் பணம் சம்பாதிக்க கிளிநொச்சியை தளமாகப் பாவிப்பது பரிதாபத்திற்குரிய விடயமாகும். பல ஆண்டுகாலமாக பயத்துடனும் பீதியுடனும் வாழ்ந்த மக்கள் நிம்மதியடையாமல் தொடர்ந்தும் கூடுதலான பயப்பீதியுடன் வாழ்கிறார்கள். இந்தப் போக்கை அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்காதுபோனால் கிளிநொச்சி மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டிவரும். ஆயுதத்தின் சக்தி ஒருபுறம், அடியாட்களின் தொல்லை மறுபுறம் இருக்கும் போது அகிம்சைக்கு கட்டுப்பட்டவர்களாகிய நாங்கள் ஆண்டவனுக்கு முறையிடுவதைவிட வேறென்ன செய்யலாம்? அரசியல்வாதியாக இருந்தாலும்சரி இராணுவத்தினராக இருந்தாலும்சரி நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்படாமல் எல்லைமீறி செயற்பட்டு தெய்வங்களின் கடும் சினத்திற்கு ஆளாக வேண்டாம் என மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றேன். இவர்கள் அனைவரும் சேர்ந்து போதிநாயகருக்கும் அவருடைய போதனைகளுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாம் என்றும், சிறந்த புத்தரின் வழியில் வாழ்ந்து  மக்களை வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி

Aucun commentaire:

Enregistrer un commentaire