mercredi 10 avril 2013

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு கிடையாது;தயான்

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு கிடையாது என முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற போதிலும் ஏனைய இன மத சமூகங்களின் நம்பிக்கைகள் ஒடுக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒரு பகுதியினர் அல்லது சில அமைப்புக்கள் சிங்கள பௌத்த கடும்போக்குவாதத்தை நிலைநாட்ட முயற்சித்தால் அது பாதக நிலைமைகளையும், பிரிவினைவாதத்த தூண்டக் கூடிய வகையிலும் அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகல இன சமூகங்களினதும் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வகுப்பதன் மூலம் முரண்பாடுகளை களைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனின் சிறுபான்மை கடும்போக்குவாதமும், சிங்கள சிவில் சமூகத்தின் சில தரப்பினரின் பெரும்பான்மை கடும்போக்குவாதமுமே யுத்தம் ஏற்படக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளம் ஊடகவியலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் பின்பற்றப்பட வேண்டிய அணுகுமுறைகளை நாம் பின்பற்றத் தவறியமையே நாடு இன்று எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகளுக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை நாம் கருத்திற் கொள்ளத் தவறிவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். ஒரு சில தரப்பினர் நாட்டின் மீது அழுத்தங்களை செலுத்த அனுமதி அளித்தால் அது கடின போராட்டத்தின் மூலம் ஈட்டிய யுத்த வெற்றியை அர்த்தமற்றதாக்கும என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக வரலாற்றில் பல்வேறு உதாரணங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் சரியான கொள்கைகள் வகுக்கப்படாவிட்டால் கடும்போக்குவாதம் தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கின் ஆட்சி முறைமை குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் தெரிவத்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்றமை உண்மை என்ற போதிலும், யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாமை பிரச்சினைக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளியை பிரிவிணையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக, பொருளதார, அரசியல் மற்றும் ஜனநாயக ரீதியான தீர்வுத் திட்டங்களை உரிய முறையில் முன்வைப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும் என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire