mardi 2 avril 2013

அனுராதபுரத்தில் இருந்த பல தமிழ் குடும்பங்கள் பாதுகாப்புத்தேடி நாட்டின் வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். அதனால் அங்கு இயங்கிக் கொண்டிருந்த விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் மூடப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டது.;தோழர் மணியம் எழுதும் தொடரில் இருந்து


Anuradhapuramசில நாட்கள் ஓடிக் கழிந்தன. என்றாலும் நானும் நண்பர் சிதம்பரநாதனும் தினசரி பம்பலப்பிட்டி சென்று யாராவது புதிதாகப் பயண ஏற்பாடுகள் ஏதாவது செய்கிறார்களா என ஆராய்ந்து வந்தோம். எப்படியும் யாழ்ப்பாணம் திரும்பிவிட வேண்டும் என்பதில் எம்மைப் போன்ற பலர் தீராத ஆவல் கொண்டிருந்தனர். குடும்பங்களைப் பிரிந்து இருந்ததில், அவர்கள் கவலையும் மன உளைச்சலும் கொண்டிருந்தனர். மறுபக்கத்தில் பணம் கொடுத்து விடுதிகளில் தங்கியிருந்ததால், பணம் வேறு செலவாகிக் கொண்டு இருந்தது. எனவே பலரும் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலில் கூடுவது நாளாந்த நிகழ்ச்சியாக இருந்தது.

அதேநேரத்தில் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் நடைபெற்று வந்த யுத்தம் சம்பந்தமாக வந்த அரசல் புரசலான செய்திகளும் எமக்குக் கவலை அளிப்பதாகவே இருந்தது. இதற்கிடையே எம்மைப் போன்றவர்களில் ஒருசிலர் தமிழ்நாட்டிலிருந்து படகுகள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்காக விமானம் மூலம் இந்தியா சென்றதாகவும் செய்திகள் அடிபட்டன. தரை மார்க்கமாகவோ, கடல் மார்க்கமாகவோ அல்லது ஆகாய மார்க்கமாகவோ எமக்கு ஒரு ஒழுங்கான பயண ஒழுங்கு அமையாவிடின், நாமும் இந்தியா சென்று யாழ்ப்பாணம் செல்லும் வழியைத்தான் நாடவேண்டி வரும் என எண்ணினோம்.

நிலைமை இவ்வாறு போய்க்கொண்டிருக்கையில், இருளில் தோன்றிய ஒர் ஒளிக்கீற்றாக அரசாங்கமே எம்மை யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக ஒரு செய்தி வந்தது. அது எமக்கு சற்று ஆறுதலைத் தந்தது.

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம், எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற நடத்தை. அப்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆர்.பிரேமதாச தலைமையில் ஆட்சியில் இருந்தது. அந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கே.டபிள்யூ.தேவநாயகம், செல்லையா இராசதுரை ஆகியோரும், வவுனியா பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான திருமதி இராஜமனோகரி புலேந்திரன் அவர்களும் அமைச்சர்களாக இருந்தனர்.

அதேபோல தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பலர் பாராளுமன்ற புருஸ லட்சணத்துடன் பவனி வந்து கொண்டு இருந்தனர்.

ஆனால் இந்த ஐ.தே.க தமிழ் அமைச்சர்களோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களோ யுத்தம் நடைபெற்று வந்த பகுதி மக்களை ஏறெடுத்தும் பார்க்காதது மட்டுமின்றி, எம்மைப் போல கொழும்புக்கோ, தென்னிலங்கைக்கோ வந்து ஊர் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டிருந்தவர்கள் பற்றியும்கூட எவ்வித கரிசனையும் காட்டவில்லை. குறைந்த பட்சம் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஒர் அனுதாப வார்த்தையாவது சொல்லவில்லை. தமிழர் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழநாட்டு அரசாங்கம் கொடுத்த வாடி வீடுகளில் தமது குடும்பங்களைப் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் தங்க வைத்துவிட்டு, சென்னையில் ஒரு காலும் கொழும்பில் ஒரு காலுமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

எமது அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் தமக்கும் ஒரு தொடர்பும் இல்லாததுபோல வாழ்ந்து கொண்டிருக்க, எம்மைப் போல கொழும்பில் சிக்கியிருந்த சில யாழ்ப்பாண வர்த்தகர்களின் முயற்சிகளினாலேயே எமது பிரயாண ஒழுங்கைச் செய்வதற்கு அரசாங்கம் முன்வந்ததாக அறிந்தேன். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிழக்குப் பக்க எல்லையில் வசித்து வந்த ;நியூற்ரோன் எலக்றிக்கல்’ நிறுவனத்தின் உரிமையாளரான சிவலோகநாதன் அவர்கள். திருநெல்வேலியில் சிவன் வீதியில் இருந்த அவரது இன்னொரு வீட்டிற்கு அருகாமையிலேயே நான் முன்பு வசித்ததால் அவருடன் எனக்குச் சிறிது பழக்கமும் இருந்தது.

அரசாங்கம் எம்மை பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பது என்று அறிவித்தவுடன், அவ்வாறு செல்ல விரும்புபவர்களை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் வைத்துப் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது. நானும், நண்பர் சிதம்பரநாதனும், வேறு பலரும் உற்சாகத்துடன் பதிவுகளை மேற்கொண்டோம்.

அடுத்த இரண்டொரு தினங்களில் எமது பயணம் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்திலிருந்து ஆரம்பமானது. மொத்தமாக 6 பஸ்களில் நாம் ஏற்றப்பட்டோம். எமக்கு பாதுகாப்பாக ஒரு உதவி பொலிஸ் இன்ஸ்பெக்ரர் தலைமையில் 6 பொலிஸார் வந்தனர். அதாவது 6 பஸ்கள். 6 பொலிசார்! அதாவது ஒரு பஸ்சிற்கு ஒரு பொலிஸகாரர் பாதுகாப்பு!! பயங்கர யுத்தம் நடைபெறும் ஒரு நாட்டில், பல்லாயிரக்கணக்கான பொலிசார் உள்ள ஒரு நாட்டில், 6 பஸ்களுக்கு 6 பொலிசார் பாதுகாப்பு என்றால், இதை உலகத்தின் எட்டாவது அதிசயமாக பதிவு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.ctb bus

எப்படியோ எமது பயணம் நண்பகல் அளவில் ஆரம்பமானது. பொலிசார் தனியான வாகனத்தில் வரவில்லை. அவர்கள் ஒவ்வொரு பஸ்சிலும் ஒவ்வொருவராக வந்தனர். எமது வாகனங்கள் இடையில் நிறுத்தப்படாமல் மாலை மங்கும் நேரத்தில் ஏறத்தாழ எமது பயணத்தின் அரைவாசித் தூரமான அனுராதபுர நகரை அடைந்தது. இடையில் எங்காவது தனியான ஒரு இடத்தில் தேநீர் அருந்தவும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் வாகனங்களை நிறுத்தும்படி பயணிகள் வேண்டியும் வாகனங்கள் நிறுத்தப்படவில்லை. அதற்குக் காரணம் கேட்டபோது, இடையில் எங்கும் பஸ்களை நிறுத்தக்கூடாது என்பது மேலிடத்து உத்தரவு எனப் பதில் வந்தது.

அனுராதபுரத்தில் சனசந்தடிமிக்க ஒரு வீதியில் உள்ள தேநீர்க்கடைக்கு முன்னால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. களைத்துச் சோர்ந்துபோய் இருந்த மக்கள் முண்டியடித்துக்கொண்டு இயற்கை உபாதைகளைக் கழிக்கவும், தேநீர் குடிக்கவும் கடைக்குள் பாய்ந்து சென்றனர். எம்மில் சிலர் அவசரப்படாமல் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தோம். எனக்கு முன்னரே தெரிந்திருந்த பொன்னம்பலம் என்ற ஓய்வுபெற்ற ஒரு தமிழ் பொலிஸ் இன்ஸ்பெக்ரர் ஒருவரின் மகனும் எம்முடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு தமிழ் - சிங்களம் - ஆங்கிலம் என மும்மொழிகளும் தெரியுமாகையால், அவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பொலிஸ்காரர்களினதும், பஸ் சாரதிகளினதும் சிங்கள மொழியிலான உரையாடல்களை ஏதோ ஒரு சந்தேகத்துடன் அவதானித்துக்கொண்டு வந்தார். அதேநேரத்தில் அவர்களுடன் நட்பறவுடன் உரையாடிக்கொண்டும் வந்தார்.

நாம் அரசாங்க ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கிறோம் என்ற தகவல் அதற்கிடையில் அனுராதபுரம் நகரம் முழுவதும் பரவிவிட்டதால், பெருமளவு மக்கள் நாம் தேநீர் குடித்துக் கொண்டிருந்த கடைக்கு முன்னால் குழுமத் தொடங்கிவிட்டனர். அந்தக் கூட்டத்தில் மதுபோதையில் இருந்த சில தெருச் சண்டியர்களும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. அவர்கள் சிங்கள மொழியில் ஏதேதோ சொல்லி எம்மைத் திட்டிக் கொண்டிருந்தனர். தமிழர், புலிகள், பிரபாகரன் என்ற வார்த்தைகள் மட்டும் எமக்குப் புரியும் சொற்களாக இருந்தன. அவற்றை வைத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை ஓரளவு ஊகிக்க முடிந்தது.

நிலைமை மோசமாகலாம் என்று கண்ட உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்ரர் எல்லோரையும் உடனடியாக பஸ்சில் வந்து ஏறும்படி பணித்தார். எல்லோரும் ஏறிய பின்னர் பஸ்கள் சற்றுத் தள்ளியிருந்த அனுராதபுரம் கச்சேரியை அடைந்து தெருவோரத்தில் நிறுத்தப்பட்டன. பொலிஸ் இன்ஸ்பெக்ரர் இறங்கி கச்சேரிக்குள் சென்று, இரவு தனது வீட்டில் இருந்த அரச அதிபருடன் கதைத்துவிட்டு வந்தார்.

அவர் சொன்ன தகவலின்படி, அன்றிரவு எம்மை அங்குள்ள விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும், ஆனால் நாம் வந்த செய்தி அனுராதபுரம் எங்கும் பரவிவிட்டதால், இப்பொழுது அங்கு சென்று தங்குவது பாதுகாப்பானது அல்லவென்றும், எனவே யாழ்ப்பாணம் செல்வது போல பாசாங்கு காட்டி மதவாச்சி வரை சென்று, ஊர் அடங்கிய பின்னர் திரும்பி அனுராதபுரம் வந்து அந்தப் பாடசாலையில் தங்கும்படியும் அரசாங்க அதிபர் சொல்லியதாகக் கூறப்பட்டது.

அதன்படி எமது பஸ்கள் மதவாச்சி நோக்கிப் புறப்பட்டன. 15 மைல்கள் தூரத்தில் இருந்த மதவாச்சியை முன்னிரவு நேரம் எமது பஸ்கள் சென்றடைந்தன. 6 பஸ்களும் மதவாச்சி நகரை அடைந்ததும், அங்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எமது மக்களில் சிலர் பஸ்சைவிட்டு இறங்கி காலாற நின்றனர். இதற்கிடையில் எமது வருகையை அறிந்து அங்கும் பலர் கூடத் தொடங்கினா. அவர்களும் சிங்களத்தில் ஏதோ சொல்லியவாறு கூச்சலிட ஆரம்பித்தனர். எமது பயணிகள் பயத்தில் ஓடி வந்து பஸ்களில் ஏறிக் கொண்டனர். பஸ்கள் புறப்பட ஆயத்தமான வேளையில் சில காடையர்கள் பஸ் மிதிபலகையில் ஏறி நின்று, உள்ளே நின்று கொண்டிருந்த  சில பயணிகளை வெளியே இழுத்தெடுக்க முயன்றனர். வாசலுக்கு அருகில் நின்ற என்னையும் ஒருவன் இழுக்க முயன்றான். நான் ஒருவாறு அவன் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு பஸ்சின் நடுப்பகுதிக்குச் சென்று நின்று கொண்டேன்.
thugs
யாரையும் அவர்கள் கொண்டுபோக முடியவில்லை. பஸ்கள் மீண்டும் அனுராதபுர நகரை நோக்கிச் சென்றன. நள்ளிரவு அளவில் அங்கு சென்று அனுராதபுரப் பொலிசாரைத் தொடர்பு கொண்ட பின்னர், எமது பஸ்கள் விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தைச் சென்றடைந்தன. எம்மை இறக்கிவிட்டு பஸ்கள் அனுராதபுரம் இலங்கைப் போக்குவரத்துச் சபைச் சாலைக்குச் சென்றுவிட்டன.

அன்று இரவு முழுவதும் நாம் யாருமே தூங்கவில்லை. ஏனெனில் நாம் அங்கு தங்கியிருக்கிறோம் என்ற செய்தி எப்படியும் வெளியே தெரிந்திருக்கும். அதனால் இரவு நேரத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு எம்மை யாராவது காடையர் கூட்டம் தாக்க வரலாம் என எதிர்பார்த்தோம்.

அது ஒரு சிறிய பாடசாலை. அதிபர் காரியாலயமும் மாணவர் கற்கும் ஒரு மண்டபமும் இருந்ததாக ஞாபகம். நாம் எமது பாதுகாப்புக்காக அங்கிருந்த மேசைகள், கதிரைகள் எல்லாவற்றையும் தூக்கி கட்டிடத்தின் வாசல்களில் போட்டு யாரும் உள்ளே வராமல் தடை செய்தோம். இந்தப் பாதுகாப்பு தாக்க வருபவர்களுக்கு ஒரு ‘தூசி’ என்று தெரியும். சமயத்தில் ‘புல்லும் பல்லுக் குத்த உதவும்’ என்பதற்கிணங்கவும், ஒரு மனத் திருப்திக்காகவும் அவ்வாறு செய்தோம். அத்துடன் அங்கிருந்த உடைந்த நாற்காலிக் கால்கள், மேசைக் கால்கள் என்பவற்றையும் எடுத்து கைவசம் வைத்துக் கொண்டோம்.

பெருந்தொகையான காடையர்கள் பாரிய ஆயுதங்கள் சகிதம் வந்தால், எமது ‘மரக்கால ஆயுதங்களால்’ தாக்குப் பிடிக்க முடியாது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் அவர்களது தாக்குதலில் அநியாயமாகச் சும்மா இறக்காது, இறுதிவரை போராடி ‘வீரமரணம்’ அடைவது மேன்மையானது அல்லவா? (அந்தக் காலத்தில் வீர மரணத்துக்கு அப்படி ஒரு மவுசு இருந்தது!)

நாம் எதிர்பார்த்தவாறு அன்றிரவு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. விடிந்ததும் எவ்வளவு விரைவாகப் புறப்பட முடியுமோ அவ்வளவு விரைவாகப் புறப்பட்டுவிட வேண்டும் என எம்மில் பலர் விரும்பினோம். அங்கிருந்த கிணற்றிலும், மலசல கூடத்திலும் காலைக் கடன்களை முடித்துவிட்டு புறப்படத் தயாரானோம். இதற்கிடையில் எம்முடன் அன்றிரவு அருகில் தங்கியிருந்த பொலிசார், அருகில் ஒரு தேநீர்க்கடை இருப்பதாகவும், விரும்பியவர்கள் அங்கு சென்று தேநீர் குடி;கலாம் எனவும் தெரிவித்தனர். அவர்களும் தேநீர் குடிக்க அங்கு சென்றனர். ஒரு கட்டத்தில் ஒரு பொலிஸ்கூட எமக்குக் காவல் இருக்காமல் அத்தனை பேரும் தேநீர் குடிக்கச் சென்றுவிட்டனர். ஆனால் பயம் காரணமாக எம்மில் எவரும் அந்தக் கடைக்குத் தேநீர் குடிக்கச் செல்லவில்லை.

நேரம் போய்க் கொண்டிருந்தது. நகரில் சன நடமாட்டம் மௌ;ள மௌ;ள ஆரம்பித்து, பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது. வீதியால் போவோர் வருவோர் எல்லோரும் நாம் தங்கியிருந்த பாடசாலைக்கு முன்னால் தரித்து நின்று எம்மை வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்லத் தொடங்கினர். சிலர் அங்கேயே நின்று கொண்டனர்.

இதற்கிடையில் பொழுது விடிந்ததும் அருகில் சில காட்சிகளை நாம் கண்டோம். ஒன்று எமது பாடசாலைக்கு எதிரில் வீதிக்கு அந்தப் பக்கமாக சைவ ஆலயம் ஒன்று இருப்பது தெரிந்தது. நல்ல வர்ணப் பூச்சு வேலைப்பாடுகளுடன் அழகாகக் காட்சி அளித்த அந்தக் கோவில், நீண்ட காலமாகப் பராமரிப்பின்றி மரங்களாலும் செடி கொடிகளாலும் மூடப்பட்டிருந்தது. இதுதான் அனுராதபுரம் கதிரேசன் கோவில் என எம்முடன் வந்தவர்களில் யாரோ ஒருவர் விளக்கம் சொன்னார். எமது மக்கள் அந்தக் கோவிலின் நிலையைக்கண்டு பெரிதம் கவலையுற்றனர். எம்மில் சிலருக்கு அந்தக் கோவிலின் அருகே சென்று பார்க்க வேண்டும் என ஆசையாக இருநந்தது. ஆனால் பயத்தால் அருகில் போகவில்லை.

இன்னொரு காட்சியாக நாம் தங்கியிருந்த விவேகானந்தா கல்லூரிக்கு அருகாமையில், சமாந்தரமாக ஒரு முஸ்லீம் பாடசாலை அமைந்திருப்பதைக் கண்டோம். அதன் பெயர் ‘அல்.அக்ஸா வித்தியாலயம்’ என ஞாபகம். அப்படியொரு பாடசாலை இருந்தது ஏதோ மனதுக்குச் சற்றுத் தெம்பாக இருந்தது.

இதற்கிடையில் நாமும், எம்முடன் துணைக்கு வந்த பொலிசாரும் புறப்படுவதற்குத் தயாராக இருந்த போதிலும், எமது பஸ்கள் வந்து சேர்வதாக இல்லை. அதேநேரத்தில்; எமது பாடசாலைக்கு முன்னால் கூடுவோரின் தொகை வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அத்துடன் பக்கத்திலிருந்த முஸ்லீம் பாடசாலையில் படிக்கும் பிள்ளைகளும் வரத் தொடங்கியிருந்தார்கள். அதன் காரணமாக எம்மில் பலருக்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது.

அங்கு வந்த சில முஸ்லீம் பிள்ளைகளும், சில முஸ்லீம் ஆசிரியர்களும் நாம் தங்கியிருந்த தமிழ்ப் பாடசாலைக்குள்ளும் வந்து புகுந்தனர். அவர்கள் எம்மை வேடிக்கை பார்ப்பதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என நாம் கருதினோம். ஆனால் அவர்களேர் எம்மைப் பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் அவர்களுக்கு நாம் அன்றிரவு அங்கு தங்கியிருப்போம் என்பது தெரிந்திருக்கவில்லை. அவர்கள் எமது நிலையை அறிந்து மிகவும் கவலைப்பட்டனா. எம்முடன் அனுதாபமாகக் கதைத்துத் தெம்பூட்டினர்.

அந்த முஸ்லீம் ஆசிரியர்களுடன் கதைத்தபோது, அவர்கள் சொன்ன ஒரு விடயம் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அதாவது நாட்டில் இனவாத யுத்தம் ஆரம்பமான பின்னர், அனுராதபுரத்தில் இருந்த பல தமிழ் குடும்பங்கள் பாதுகாப்புத்தேடி நாட்டின் வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். அதனால் அங்கு இயங்கிக் கொண்டிருந்த விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் மூடப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையை விரும்பாத அங்குள்ள சில முஸ்லீம் கல்விமான்கள் (அவர்களில் ஒருவரான எனது நண்பரும், முற்போக்கு எழுத்தாளருமான ‘அன்பு ஜவகர்ஸா’ அனுராதபுரத்தில் உள்ள ஒரு பாடசாலையில் அதிபராகவும், பின்னர் கல்வி அதிகாரியாகவும் இருந்ததாகக் கேள்விப்பட்டிருந்தேன்) தமிழ் வித்தியாலயம் மூடப்படுவதைத் தடுக்க ஒரு தந்திரத்தைக் கைக்கொண்டனர்.

அதாவது, தமது முஸ்லீம் பாடசாலையில் கல்விகற்ற மாணவர்களில் ஒரு பகுதியினரை அங்கிருந்து விலக்கி, அருகில் இருந்த தமிழ் வித்தியாலயத்தில் சேர்த்து படிக்க வைத்தனர். அதன் மூலம் விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் மூடப்படுவதை அந்த முஸ்லீம் கல்விமான்கள் தடுத்து நிறுத்தினர். ஒரு குறிப்பிட்ட பிள்ளைகள் கல்வி கற்றால் அப்பாடசாலையை அரசாங்கம் மூட முடியாது என்பது விதியாகும்.

முஸ்லீம் மக்கள் தமிழ் மக்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் கொண்டிருந்த அபிமானம்; எனது இந்தப் பயணத்தின் போது, எனக்கு ஏற்பட்ட இரண்டாவது அனுபவமாக இருந்தது. ஏற்கெனவே எமது இரண்டாவது பயணத்தின் போது புத்தளத்தில் இருந்த ஒரு முஸ்லீம் வர்த்தகர் செய்த தன்னலமற்ற உதவி பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். இவ்வாறான உதவிகளைத் தமிழ் மக்களுக்காகச் செய்த அந்த சமூக மக்களைத்தான், புலிகள் சிறிது காலத்திற்குள்ளாக வடக்கிலிருந்து உடுத்த துணியுடன், இரண்டு மணித்தியால அவகாசத்தில் விரட்யடித்த பெரும் அநியாயத்தைச் செய்தனர்.

இந்த இடத்தில் நான் இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். நான் இலங்கையின் வட பகுதியில் பிறந்தவன். அங்குதான் எனது வாழ்க்கையின் பெரும்பகுதி கழிந்தது. பின்னர் புலிகள் என்னைக் கைதுசெய்து விடுதலை செய்த பின்னர், சில ஆண்டுகள் கொழும்பில் - கிரிலப்பனவில் ஒரு சிங்களவர் வீட்டில் எனது குடும்பத்துடன் வாடகைக்கு இருந்தேன். இதுதவிர தென்னிலங்கையின் பல சிங்களக் கிராமங்களுக்கும், கிழக்கில் பல முஸ்லீம் கிராமங்களுக்கும், மலையகத் தோட்டக் குடியிருப்புகளுக்கும் அடிக்கடி சென்று தங்கியும் வந்திருக்கிறேன்.

பின்னர் நான் வெளிநட்டிற்கு வந்து, இப்பொழுது வாழ்ந்துகொண்டு இருக்கும் புலம்பெயர் நாட்டில் 200இற்கும் அதிகமான உலக நாடுகளின் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடன் தவிர்க்க முடியாமால் நாம் பழகுகின்றோம். நான் வேலை செய்யும் நிறுவனத்தில் வெள்ளையர்கள், எத்தியோப்பியர்கள், எரித்திரியர்கள், பிலிப்பினோக்கள், சீனர்கள், ஈரானியர்கள், இலங்கையாகள் எனப் பலருடன் நான் வேலை செய்கின்றேன்.

இவ்வளவு கால எனது வாழ்க்கை அனுபவத்தில் நான் இலங்கையில் பழகிய தமிழர் அல்லாத இனங்களும், இப்பொழுது பழகும் பல்வேறு நாட்டு மக்களும் என்னுடன் பழகிய அளவுக்கு எமது தமிழினம் நட்புறவுடன் பழகவில்லை என்றுதான் கூறுவேன். இது அவர்களின் மாறா இயல்பு நிலை அல்ல. இந்த நிலை தமிழர்கள் மத்தியில் முன்பு இருக்கவில்லை. எப்பொழுது நமது தமிழ் இளைஞர்கள் அர்த்தமற்ற ஒரு நோக்கத்துக்காக ஆயுதம் தூக்கினார்களோ, அப்பொழுதுதான் இந்த நிலை ஆரம்பமானது. அதிலும் இந்த ஆயுதப்போராட்ட இயக்கங்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச மனித நேயம் மிக்கவர்களையும் புலிகள் அழித்தொழித்த பின்னர், தமிழ் சமூகம் தனது பெறுமதி மிக்க விழுமியங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு, வெறுமனே விடுதலைக் கோசம் எழுப்பும் மலட்டுச் சமூகமாக இன்று உருமாறி நிற்கிறது.

இதற்கு இன்னொர் உதாரணம் இன்று தமிழக அரசியல்வாதிகள் நடாத்தும் அராஜக அரசியல் வெறியாட்டம். அவர்கள் இலங்கை அரசாங்கம் இழைத்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து உரத்துப் பேசிக்கொண்டு, போர்க்காலத்தில்கூட தவிர்க்கும்படி கூறப்பட்டுள்ள அதே விடயங்களை அங்கே அரங்கேற்றுகிறார்கள். அங்கு செல்லும் மத குருக்களையும், யாத்திரீகர்களையும்கூடத் தாக்குகிறார்கள், விளையாட்டில்கூட அரசியலைக் கலக்கிறார்கள். மனிதாபிமானத்தையும், சர்வதேச நெறிமுறைகளையும் மீறி இவை அங்கே அரங்கேற்றப்படுகின்றன.

இவற்றை நான் இங்கு வெளிப்படையாகக் கூறுவதால், விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமில்லாத சில தமிழ் ‘ஆஸ்தான’ விமர்சகர்கள் தமது வாள்களைத் தீட்டுவார்கள் என்பதும், எனக்கெதிராக நீட்டுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் யாராவது ஒருவர் முன்னுக்கு வந்து ‘பூனைக்கு மணி கட்டுவது’ அவசியம் என்பதால்தான் நான் இதை இங்கு எழுதவேண்டி வந்தது.

இது ஒருபுறமிருக்க, நாம் பல மணி நேரம் காத்திருந்த பின்னர், காலை 9 மணியளவில் எமது பஸ்கள் வந்து சேர்ந்தன. அதேநேரத்தில் நாம் தங்கியிருந்த பாடசாலைக்கு முன்னாள் உள்ள வீதியிலும் சுற்றிவரவும் பெருமளவிலான சிங்கள மக்கள் திரளத் தொடங்கிவிட்டனர். அவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட தொகை ஆட்கள் மண்வெட்டிகள், அலவாங்குகள், கடப்பாறைகள், மரக் கொட்டன்கள் சகிதம் எமது முன்வீதியால் வந்து கொண்டிருந்தனர். முதலில் நாம் அவர்கள் ஏதோ நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்வதற்குச் செல்லும் ஆட்கள் என்றுதான் கருதினோம்.

ஆனால் அவர்கள் கோசங்கள் போட்டவாறு எம்மை நோக்கி வந்தபோதுதான், நிலைமையின் விபரீதம் புரிந்தது. நாம் பயத்தால் விறைத்து நின்றோம். விரைந்து சென்று எமது பஸ்களில் ஏற முயன்றோம். ஆனால் அந்த நேரம் பார்த்து பஸ் சாரதிகளில் ஒருவர் தனது பஸ் சில்லு ஒன்றுக்குக் காற்றுப் போதாது என்றும், எனவே தான் திரும்பவும் பஸ் டிப்போவுக்குச் சென்று காற்றுப் பிடித்து வருவதாகவும் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்! (அவர் அன்றிரவை அந்த பஸ் டிப்போவில் கழித்துவிட்டுத்தான் காலையில் வந்திருந்தார்!!)

நாம் செய்வதறியாது திகைத்து நிற்க, எமக்குப் பாதுகாப்புக்காக வந்த பொலிசாரும் ஒருவர் பின் ஒருவராக அருகே இருந்த தேநீர்;கடைக்குள் சென்றுவிட்டார்கள். இப்பொழுது நாம் எமனின் கையில் அகப்பட்டவர்களாகத் தனித்து விடப்பட்டோம். எம்மைச் சுற்றிவளைத்து நிற்பவர்களில் சில காடையர்கள் இருந்தாலும், பலர் சிங்கள – தமிழ் இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த நாசகார யுத்தத்தின் கொதி நிலையால் உந்தப்பட்டவர்கள் என்பது புரிந்தது. ஆனால் எம்மை அழைத்து வந்த பஸ் சாரதிகளினதும், எமது பாதுகாப்புக்காக வந்த பொலிசாரினதும் நடத்தைகள் திட்டமிட்ட நாடகத்தின் ஒர் அங்கம் எனப்புரிய ஆரம்பித்தது.

Aucun commentaire:

Enregistrer un commentaire