vendredi 26 avril 2013

ஊழியர்கள் சுட்டிக் காட்டியும் கட்டடம் இடிந்து விழுந்ததில் 100 பேர் சாவு


daccaவங்கதேசத்தில் 8 மாடி வணிக வளாகக் கட்டடம் புதன்கிழமை இடிந்து விழுந்ததில் 100 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சவார் பகுதியில் ராணா பிளாசா என்ற பெயரில் 8 மாடி வணிக வளாகம் இயங்கி வந்தது. இதில் வங்கி, மூன்று ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், ஏராளமான அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றைச் சார்ந்து மொத்தம் 6ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த கட்டடத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டது. இதை ஊழியர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் கட்டட உரிமையாளர்களும் சில நிறுவனங்களின் மேலாளர்களும் ஊழியர்களின் எச்சரிக்கையை பொருள்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை அந்த கட்டடம் பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது கட்டடத்தின் உள்ளே இருந்த ஆயத்த ஆடை தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இந்த விபத்தில் 100 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கட்டடம் இடிந்த தகவல் கிடைத்ததும் பொலிசாரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 100 உடல்களை மீட்டனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவின்பேரில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன.காயமடைந்தோரில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாலும் கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாலும் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire