lundi 8 avril 2013

சம உரிமை வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை : ப.சிதம்பரம்

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும், அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், அதிகாரம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி, சென்னையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘’இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும், அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், அதிகாரம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை. காங்கிரஸ் கட்சி தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியில் இலங்கை தமிழர் பிரச்சினையில் முன்பு என்ன சொன்னார்கள் என்பது சட்டசபை அவை குறிப்பிலேயே உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து, குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நாங்கள் சந்தித்தபோது 2 கோரிக்கைகளை வைத்தார். அதாவது, ஐ.நா.வில் கொண்டுவரும் தீர்மானம் வலுவாக இருக்க வேண்டும் என்றும், இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், இதை டெல்லியில் சென்று கட்சி தலைமைக்கு சொல்வதற்குள்ளேயே ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். ஐ.நா. தீர்மானத்தில் கொண்டுவரப்பட வேண்டிய திருத்தங்களை இந்திய தூதரிடம் கொடுத்து ஐ.நா.வுக்கு அனுப்பினோம். 

இதைபோல், நாடாளுமன்றத்திலும் தீர்மானம் கொண்டுவர அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அதில், தமிழக கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் தான் ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஆதரிக்கவில்லை. எனவே, காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு எந்த அளவுக்கு செய்ய முடியுமோ அதை காங்கிரஸ் செய்யும். தமிழகத்தில் காங்கிரசை தனிமைப்படுத்த முடியாது’’என்று தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire