vendredi 19 avril 2013

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஐ.நா.சிறப்பு பிரதிநிதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஐ.நா.சிறப்பு பிரதிநிதி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் ஒட்டு மொத்த நிலவரத்தை மதிப்பிடு வதற்காக முதல் முறையாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்காணிப்பதற்கான ஐ.நா. மனித உரிமை குழுவின் சிறப்பு பிரதிநிதியான ரஷிதா மஞ்சு, வரும் 22ஆம் திகதி முதல் 10 நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது, டில்லி, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கேட்டறிய உள்ளார்.

இதுதொடர்பாக ரஷிதா கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கான காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளேன். சமீபத்தில் டில்லியில் இளம் பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டது உள்ளிட்ட சமீபத்திய நிகழ்வுகள், சட்டங்களை மேலும் கடுமையாக்க வாய்ப்பு வழங்கியிருக்கின்றன என்றார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையில் ரசிதா மஞ்சு, தனது பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்வார் என்று ஐ.நா. செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக மே 1ஆம் திகதி ரஷிதா மஞ்சு, செய்தியாளர்களை சந்தித்து தனது அறிக்கை தொடர்பாகபேச உள்ளார்.

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அளவில் கேள்வி எழுந்ததையடுத்து ஐ.நா.சிறப்பு பிரதிநிதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்தபோதும், இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire