lundi 29 avril 2013

சினிமாவே காரணம் வன்முறை எண்ணம் தோன்ற –உளவியல் நிபுணர் டாக்டர் சிவதாஸ்

குழந்தைகள் பிறக்கும்போதே சமூக விரோதிகளாக பிறப்பதில்லை. அவர்கள் வாழும் சூழலே அதற்கு வழிவகுக்கின்றது. சினிமா அதற்கு உறுதுணையாக அமைவதாக உளவியல் நிபுணர் டாக்டர் சிவதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் 16 வயதான மாணவர்கள் தம் காதலை எதிர்த்த பெற்றோரை திட்டமிட்டுக் கொலை செய்த சம்பவம் அனைவரையும் திகிலடையச் செய்துள்ளதுடன் இதுபோன்று அண்மைக் காலமாக திட்டமிட்டுச் செய்யும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் டாக்டர் சிவதாஸை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்ட கருத்தினை முன்வைத்தார்.

சினிமா இன்று மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதுவே உண்மை. சினிமாவை வாழ்க்கையென நினைக்கும் இளைஞர்கள் அதில் காட்சிபடுத்தப்படும் வன்முறைகளுக்கு அடிமையாகியுள்ளார்கள். இந்த வகையில் சிறு வயது முதலே இவர்கள் மனதில் வெறுப்பு விதைக்கப்படுகிறது. வன்முறைகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்படுவதுடன் உயிருக்கான மதிப்பினைக் குறைத்தே தற்போதைய சினிமாக்கள் படம் பிடித்துக் காட்டுக்கின்றன. ஆகையினால் பணம், காதல் என்பவற்றை பெற்றுக் கொள்ள உயிரை துச்சமென நினைத்துக் கொலை செய்ய இன்றைய இளைஞர்கள் துணிந்து விடுகிறார்கள்.

இந்நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் உயிர், உறவு, கல்வி ஆகியவற்றின் முக்கியத்துவங்கள் சிறு வயது முதலே உணர்த்தப்படுவது அவசியம் என குறிப்பிட்டார்.

மேலும் பிள்ளைகளுடனான பிணைப்பை அதிகரிக்கும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுடன் சிறந்த உறவு முறையை பேணுவதும் கூட எதிர்காலத்தில் இது போன்ற சமூக விரோதிகளை உருவாக்குவதனை தடுக்க வழிவகுக்குமென உளவியல் நிபுணர் டாக்டர் சிவதாஸ் கூறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire