vendredi 26 avril 2013

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் என கூறும் சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள்: சந்திரிகா


இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்த சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள். சிறிய தரப்பினரான இவர்களின் அடிப்படைவாத செயல்கள் தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவபெயரை ஏற்படுத்தியுள்ளதாக பண்டரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.மத்துகம பட்டபுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள தெற்காசியாலேயே உயரமான புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இரண்டாயிரத்து 500 வருட இலங்கையின் வரலாற்றில், நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் எப்போதும், இலங்கையை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனக் கூறியதில்லை. அவர்கள் வேறு நாடுகளிடம் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ளவே போரிட்டனர்.
மன்னர்கள் எதிரிகள் வரும் போது தாக்குதல்களை நடத்தினார்களே தவிர இனவாதத்தில் போதை ஏறி நாட்டில் உள்ள ஏனைய இனங்களையும் மத தலங்களை தாக்கவில்லை. இலங்கையில் வேறு இனங்களுக்கும் நாடுகள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கை என்பது பல்லின, பல மாதங்களை கொண்ட நாடு. அவர்கள் அனைவரும் சகோதரத்துவதுடனும், சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த நாடு.
எனினும் தற்போது ஒரு சிறிய தரப்பினர் முன்னெடுத்து வரும் அடிப்படைவாத வேலைத்திட்டங்கள் இந்த விதத்திலேயே தொடர்ந்தும் சென்றால் நாட்டின் பேரழிவுக்கும், சேதத்திற்கும் காரணமாக அமைந்து விடும். இவ்வாறான அடிப்படைவாதிகள் எழுச்சி பெறும் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தலையிட்டு அதனை அடக்க வேண்டும். இது அரசாங்கத்தினதும், ஆட்சியாளர்களினதும் பொறுப்பு. இதனை விடுத்து, அவர்களுக்கு உந்து சக்தியை கொடுத்தும் கொள்கையை பின்பற்றினால் பாரிய அழிவே ஏற்படும்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டு வரும் பாதிப்பு மிகவும் பாரியளவானது. ஏற்கனவே பொருளாதார மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போல் நாட்டு மக்கள் என்ற வகையில் உரிமைகளும், கடமைகளும் உள்ளன. பௌத்தர்கள் என்ற வகையில் நாம் அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும். நான் கற்றுள்ள பௌத்த சமயத்தின் படி, பௌத்த மதத்தை போன்ற கருணை போன்ற உன்னதமான மனித பண்புகளை பேசும் மதங்கள் வேறு எதுவும் இல்லை. மத, இனவாத பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்கும் மதம் பௌத்த மதம் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire