mercredi 12 septembre 2012

நடப்பது என்ன?யாழ் போக்குவரத்து பஸ்களில்


யாழ்ப்பாணத்தோடு ஒட்டிப் பிறந்த பிரச்சினையாக பஸ் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. தனியார் பஸ், இ.போ.ச. பஸ் என்பன பெயர்களில் தான் வித்தியாசமே தவிர பொது மக்களை சோதனைக்குள்ளாக்கு வதில் இவ் இரண்டு சேவைகளுமே போட்டி போட்டுக் கொண்டு செயற் படுகின்றன.

யாழ்ப்பாணத்தோடு ஒட்டிப் பிறந்த பிரச்சினையாக பஸ் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. தனியார் பஸ், இ.போ.ச. பஸ் என்பன பெயர்களில் தான் வித்தியாசமே தவிர பொது மக்களை சோதனைக்குள்ளாக்குவதில் இவ் இரண்டு சேவைகளுமே போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றன.

போக்குவரத்து பிரச்சினை பற்றி எத்தனையோ முறை ஊடகங்கள் கூக்குரல் இட்டபோதும் அவற்றை கிஞ்சித்தேனும் கணக்கில் எடுக்கவில்லை இந்தப் போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள்.

இ.போ.சவோ, தனியார் பஸ் சேவைகளோ அவற்றுக்கு தத்தம் இலாப நோக்கம் மட்டுமே முதன்மையானதாக அமைகின்றதே தவிர மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் அக்கறை இருப்பதில்லை. இதனையே தொடர்ந்து வரும் பிரச்சினைகள் கட்டியம் கூறுகின்றன.

பொதுவாக மினிபஸ்களை விடவும், சீ.ரி.பி. என்று செல்லமாக அழைக்கப்படும் இ.போ.ச. பஸ்களில் பயணிப்பதை முன்னைய காலங்களில் அநேகர் விரும்பினர். மினிபஸ்ஸை விட அளவில் பெரிதான விட்டு வீதி கொண்டதான பஸ்கள்இ குறைந்த கட்டணம், குறித்த நேரத்துக்கு பிந்தாத பயணம் என்பனவே இந்த விருப்புக்கு காரணம்.

ஆனால் இப்போது அந்த நிலைமையில்லை. சீ.ரி.பி. பஸ்கள் குறித்த நேரத்துக்கு குறித்த இடத்தை அடைந்தால் அது பெரிய அதிசயம் தான். அத்தோடு குடாநாட்டில் ஓடித் திரிகின்ற பெரும்பாலான சீ.ரி.பி. பஸ்கள் கடுமையான நோயால் பீடிக்கப்பட்டிருப்பதால் அடிக்கடி வீதிகளில் படுத்து விடுகின்றன. மேலும் ஒரு தொகை பஸ்கள் உரிய உதிரிப் பாகங்கள் இன்மையால் டிப்போக்களில் ஓய்வெடுத்து வருகின்றன. எனவே இருக்கின்ற ஒரு சில பஸ்களை வைத்துக்கொண்டுதான் இ.போ.ச. போக்குவரத்தை செய்ய வேண்டிய நிலை.

நாளுக்கு ஆகக்குறைந்தது ஒரு பஸ்ஸுக்காவது "வருத்தம்' வந்து விடுதால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நேர அட்டவணை அடிப்படையில் சீ.ரி.பி. பஸ்கள் பஸ் தரிப்பு நிலையங்களுக்கு வந்து சேர்வதில்லை. அப்படி வந்தாலும் இடைவழியில் திக்கித்திணறி பழுந்தடைந்து விடுவதால் அதில் பயணி த்தவர்கள் இன்னொரு சீ.ரி.பி. பஸ் அந்த இடத்துக்கு வரும்மட்டும் தவமிருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் ஓடித்திரியும் மினிபஸ்களில் மீண்டும் ஒருமுறை கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும். இதனால் பருவகாலச் சீட்டுக்களுடன் சீ.ரி.பி. பஸ்களில் பயணிப்போர் உரிய நேரத்துக்கு தாம் செல்ல வேண்டிய இடங்களை அடையமுடியாமல் உள்ளது.

இதைவிட ஒரு சில பயணிகளின் தனிப்பட்ட நலன்களை சீ.ரி.பி. பஸ் நடத்துநர்களும் சாரதிகளும் கவனத்தில் கொள்வதாலும் உரியநேரத்தில் புறப்படமுடியாத நிலை ஏற்படுகிறது. பஸ் நிலையத்தில் பஸ் புறப்பட தயார் நிலையில் இருக்கும்.

அப்போது தான் நடத்துநருக்கும், சாரதிக்கும் இயற்கைக்கடன்கள் பற்றியோ அல்லது வெற்றிலை போடுவது பற்றியோ நினைப்பு வரும். சட்டென்று இறங்கிச் சென்று அந்த அலுவல்களை நிறைவேற்றிவிட்டு வரும் வரை பஸ் கசநோயாளியைப் போல மெலிதாக இருமிக்கொண்டிருக்கும். சரி இனியாவது பஸ் புறப்படப்போகிறது என்று நினைத்தால் திடீரென்று பின்பக்க ஆசனங் களில் இருந்து அவசரத்தனமான குரல்கள் எழும்.

" அஞ்சு நிமிசம் பொறுங்கோ. என்ர அவர் கடைக்குப் போட்டார். இன்னும் வரேலை'' இப்படி குரல் எழுப்பியவர் நடத்துநருக்கோ அல்லது சாரதிக்கோ பழக்கமானவராய் இருந்து விட்டால் கடைக்குப் போனவர் திரும்பிவர ஐந்தென்ன, பத்து நிமிடங்கள் ஆனாலும் பஸ் புறப்படாது. அவர் வந்த பின்னர் தான் பஸ்ஸுக்கு விடிவு பிறக்கும்.

சீ.ரி.பி. பஸ்களில் பயணிப்பவர்களும் இலேசுப் பட்டவர்கள் அல்ல. அவர்களின் திருவிளையாடல்களும் தனிரகமானவை. அவற்றில் முக்கியமானது சீற் பிடிக்கும் படலம். குறிப்பாக இளைஞர்கள் சிலர் பஸ்ஸில் ஏறியவுடனேயே தமக்குப் பக்கத்தில் ஒரு பையை வைத்து விடுவார்கள். யாராவது வயதானவர்கள் அதிலிருக்க முற்பட்டால் "ஆள் இருக்கு'' என்று சொல்லி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள்.

இத்தகைய சமயத்தில் இளம் பெண்கள் பஸ்ஸில் ஏறியவுடன் பக்கத்து சீற்றில் இருந்த பையை எடுத்துவிட்டு எதுவுமே தெரியாதவர்கள் போல் யன்னல் பக்கமாக பார்வையை படரவிடுவார்கள். அவர்கள் எதிர்பார்த்தமாதிரி குறித்த பெண் அந்த சீற்றில் இருந்து விட்டால் பின்னர் தங்கள் லீலைகளை ஆரம்பித்து விடுவார்கள். இன்னும் சிலர் ஆசனங் களை தமக்கு மட்டுமே சொந்தமானது போல கால்களை அகலப்பரப்பிக் கொண்டு அருகிலிருப்போரை மெல்ல மெல்ல சீற் நுனிக்கு கொண்டு சென்று விடுவார்கள்.

"கொஞ்சம் தள்ளி இருங்கோ' என்று பக்கத்தில் இருப்பவர் சொல்லி விட்டால் அவர்களின் மூக்கு நுனியில் கோபம் "பக்கென்று' வந்துவிடும். புறுபுறுத்துக்கொண்டே கால்களை பழையபடி ஒடுக்கிக்கொள்வார்கள்.

இதைவிட சீ.ரி.பி. சாரதிகள் சிலர் மினி பஸ்ஸோடு போட்டிக்கு ஓடும் அவசரத்தில் சில பஸ் தரிப்பு நிலையங்களில் பஸ்ஸை நிறுத்தாமலே விரைந்து விடுவார்கள். பயணிகள் பதறியடித்துக் கொண்டு பலமுறை மணியை அடித்த பின்னர் தான் அடுத்த பஸ் தரிப்பு நிலையத்தில் அவர்களை இறக்கி விடுவதும் வாடிக்கையாகி விட்டது. அத்தோடு தமக்குத் தெரிந்த நபர்கள் பஸ் தரிப்பு நிலையங்கள் அல்லாத இடங்களில் நின்று கை காட்டினால் அங்கெல்லாம் பஸ்ஸை நிறுத்தி அவர்களை ஏற்றுவதற்கு சாரதிகளும் நடத்துநர்களும் தவறுவதேயில்லை.

ஆனால் வயோதிபர்கள் அல்லது நோயாளிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து பஸ்ஸில் ஏறுவதற்கு சற்று நேரம் எடுத்துக்கொண்டால் அவர்களை மினி பஸ்ஸில் வரச்சொல்லி விட்டு பறக்கின்ற சீ.ரி.பி. பஸ்கள் மீது மக்களுக்கு எப்படி விருப்பு வரும்?

இவற்றையெல்லாம் சீர்செய்து சீ.ரி.பி. பஸ் முன்னர் போல மக்களின் தேவை களை பூர்த்தி செய்ய என நினைப்பது நடக்கக்கூடிய காரியமல்ல என்றே அநேகர் கருதுகின்றனர். உண்மை அதுதானா? விடை இ.போ.சவிடம் தான் உள்ளது.


Aucun commentaire:

Enregistrer un commentaire