mercredi 12 septembre 2012

வேவுபார்க்க யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தானின் அவதானிப்பு நிலை – புதுடெல்லி அதிர்ச்சி

இந்தியக் கடற்படையின் தொடர்பாடலை இடைமறித்து அவதானிக்க, பாகிஸ்தான் புலனாய்வுத்துறையான ஐஎஸ்ஐ யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையம் ஒன்றை நிறுவியுள்ளதாக இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ‘ கண்டுபிடித்துள்ளதாக புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ‘தி பயனியர்‘ ஆங்கில நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த 3, 4 மாதங்களில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக இந்தியாவின் முதன்மை வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பான ‘றோ‘வின் அண்மைய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்திய நீர்மூழ்கிகளின் நடமாட்டம் குறித்து உளவு பார்க்கும் கருவிகளை அவர்கள் அங்கு நிறுவியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

‘றோ‘வின் இந்த அறிக்கையை அடுத்து. நேற்று இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் செயலகத்தில் உயர் மட்டக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அச்சுறுத்தலை எதிர்கொள்வது, மூலோபாய திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படையின் தொடர்பாடல் இணைப்புகளை பாதுகாப்பதற்கான முக்கியத்தும் குறித்து, இந்தக் கூட்டத்தில் இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா இந்த விவகாரம் குறித்து சிறிலங்கா அதிகாரிகளிடம் பிரச்சினை எழுப்பலாம் என்றும், மூன்றாவது நாடு ஒன்றுக்கு எதிராகச் செயற்படுவதற்கு சிறிலங்காவின் பிரதேசம் ஒன்று பயன்படுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பலாம் என்றும் புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்தமானில் இந்தியக் கடற்படையின் கப்பல்களின் நகர்வுகளையும் தொடர்பாடல்களையும் இடைமறிக்க சீனா இதேபோன்றதொரு அவதானிப்பு நிலையத்தை கொகோ தீவில் நிறுவியுள்ளது.

பாகிஸ்தான் புலனாய்வுத்துறையான ஐஎஸ்ஐ யாழ்ப்பாணத்தில் நிறுவியுள்ள அவதானிப்பு நிலையம் இந்தியாவின் கரைக்கு மிகவும் நெருக்கமானதாகும்.

இதற்கருகிலேயே விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகம் அமைந்துள்ளது.

அங்கிருந்தே அண்மையில் ரஸ்யாவிடம் பெறப்பட்ட அணுசக்தி நீர் மூழ்கி உள்ளிட்ட நீர்மூழ்கி கப்பல்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire