இலங்கையில் கிழக்கு மாகாணம் , சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றதாக தேர்தல் செயலகம் கூறுகின்றது.
இந்த தேர்தலில் கிழக்கு மாகாண சபைக்கு 35 உறுப்பினர்களும் , வட மத்திய மாகாண சபைக்கு 31 பேரும் , சப்ரகமுவ மாகாண சபைக்கு 42 என 108 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படும் அதேவேளை மாகாணமொன்றில் அதி கூடிய வாக்குகளைப் பெறும் அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவிற்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைக்கும்.
தேர்தல் செயலகத்தின் மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்காவின் தகவலின்படி நாடெங்கிலும் 3247 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆங்காங்கே தேர்தல் விதிமுறைகள் மீறல் மற்றும் சிறு சிறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளபோதிலும் தேர்தல் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருவதாக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.
வன்முறை
நண்பகல் வரை 10 - 12 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், அவை பாரிய சம்பவங்கள் அல்ல என்றும் அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஓட்டமாவடிப் பிரதேசத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வாக்களிப்பு நிலைய முகவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியைச் சேர்ந்தவர்களினால் தாக்கப்பட்டு அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கஃபே கூறுகின்றது.
மற்றுமொரு சம்பவத்தில் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள நாசிவன் தீவில் இலங்கை தமிழரசு கட்சியின் வாக்களிப்பு நிலைய முகவர்கள் இருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியைச் சேர்ந்தவர்களினால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்தும் தமக்கு புகார் செய்யப்பட்டுள்ளதாக கஃபே தெரிவிக்கிறது.
இதேவேளை காத்தான்குடியில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் வி.டி.எம். முபாறக் பயணம் செய்த ஆட்டோ வழிமறித்து தாக்கப்பட்ட சம்பவத்தில் அவரது ஆதரவாளர் ஒருவர் காயமடைந்ததோடு ஆட்டோவும் சேதமடைந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் பொலிசில் புகார் செய்துள்ளதாக கூறுகின்றார்.
குறிப்பாக தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை தேர்தல் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெறுவதாக தேர்தல் அதிகாரிகளும் கண்காணிப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.
போட்டி
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலை பகிஷ்கரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடுவதால் கிழக்கு மாகாண சபைத் தெர்தல் முடிவு பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பங்காளிக் கட்சியான சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராகவும் வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் கூட்டாகவும் போட்டியிடுகின்றது.
மற்றுமொரு பங்காளிக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி திருமலை மாவட்டத்தில் தனியாக போட்டியிடுகிறது.
சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதற்காக மலையக கட்சிகளான இ.தொ.கா., ஜனநாயக மக்கள் முன்னணி ,மலையக மக்கள் முன்னணி உட்பட மலையக அரசியல் கட்சிகள் சில இணைந்து ஒரே சின்னத்தில் போட்டியிடுவதும் இத்தேர்தலில் குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
இறுதியாக நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி 20 ஆசனங்களையும் , ஐக்கிய தேசியக் கட்சி 15 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களை உள்ளடக்கிய சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணி 25 , ஐக்கிய தேசியக் கட்சி 17 , மக்கள் விடுதலை முன்னனி 2 என்ற எண்ணிக்கையில் ஆசனங்களைப் பெற்றிருந்தன.
பொலன்னறுவை மற்றும் அநூதபுரம் மாவட்டங்களைக் கொண்ட வட மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி 20, ஐக்கிய தேசியக் கட்சி 12 , மக்கள் விடுதலை முன்னணி 1 என ஆசனங்களை பெற்றிருந்தன.
Aucun commentaire:
Enregistrer un commentaire