ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று(செப்டெம்பர்-25) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து, இறுதிக்கட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உட்பட, அங்கு இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கலந்துகொண்டார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களும் இந் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
பெருந்திரளான மீள்குடியேற்றப்பட்ட மக்கள் கூடியிருந்த புதுக்குடியிருப்பு, வெள்ளமுள்ளி வாய்க்காலில் இடம்பெற்ற மாபெரும் கூட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். மக்கள் நலன்புரி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அப்பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் பல்தரப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னேற்றம் குறித்து பார்வையிடுவதற்காகவே விஷேடமா ஜனாதிபதி அங்கு விஜயம் செய்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட மக்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இன, மத, பேதமின்றி அனைத்து மக்களும் ஒரே தாய் பிள்ளைகள்போல் வாழக்கூடிய சூழல் தற்போது உருவாக்கியுள்ளது. மீள்குடியேற்றப்பட்ட மக்கள் சிலருக்கு வீடுகள் கிடைத்துள்ள போதிலும், மேலும் சிலருக்கு வீட்டுப் பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் ஊடாக, இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அனைவருக்கும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இன்று மிகப் பின்தங்கிய நிலையிலுள்ள இந்தப் பிரதேசம் நாட்டின் முன்னேற்றமான பிரதேசமாக மீளக்கட்டியெழுப்பப்படுகின்றது. உங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் விவசாய உபகரணங்கள், கைத்தொழில்களுக்கான உபகரணங்கள் அனைத்தையும் பெற்றுக்கொடுப்பதுடன் வேலைவாய்ப்புகளையும் நாம் உருவாக்கிக் கொடுப்போம்.
அதேவேளை, உங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்க சகல நடவடிக்கையும் எடுப்போம். தெற்கு மக்கள் அனுபவிக்கின்ற சகலதையும் உங்களுக்கும் பெற்றுக்கொடுப்போம். வடக்கு, கிழக்கு என்ற பேதம் எமக்குக் கிடையாது. அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதே எமது நோக்கம். அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் எனத் தெரிவித்தார்.
இதன்போது மக்களுக்கான உலர் உணவு ரேஷன் மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளடங்கிய பரிசிப் பொதிகளையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார். மேலும் சுயதொழிலுக்கான கடனுதவி உதவியும் உரிய நபர்களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வுகளின் போது, பாடசாலை மாணவர்களால் அழகான நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் மாணவர்களுடன் இணைந்து புகைப்படங்ளும் எடுத்துக்கொண்டார்.
முல்லைத்தீவு “கரையோரப்பத்து” பிரிவின் புதிய மாவட்ட செயலாளர் கட்டிடத்தை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார். முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைளின் போது மக்களுக்கு இவ் அலுவலகம் பேருதவியாக அமையும் அதேவேளை. அபிவிருத்தி நடவடிக்கைகளும் இதன் மூலம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும்.
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றிய நாடுகளில், உலகிலேயே இலங்கை மட்டும்தான் சாதனை படைத்துள்ளது. நேற்றய தினம் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 361 குடும்பங்களை சேர்ந்த 1186 பேர் இறுதிக்கட்டமாக மீள்குடியமர்த்தப்பட்டனர். 2009 மேயில் 295,000 மக்கள் இலங்கையில் உள்நாட்டில் குடிப்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
25 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. 33 கிலோவோல்ட் மின் பரிமாற்றம் கிளிநொச்சி உப மின்நிலையத்தில் இருந்து யாழ்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர கிளிநொச்சி உப மின்நிலையத்தில் இருந்து யாழ் சுன்னாகம் பிரதெசத்திற்கான 132 கிலோவோல்ட் மின் பரிமாற்ற நடவடிக்கைகள் இரண்டாம் கட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வுகளில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இராணுவத்தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


Aucun commentaire:
Enregistrer un commentaire