டெல்லி பரபரப்பு அரசியல் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. இப்போது மத்திய அரசின் முடிவுகளை எதிர்க்க ஆரம்பித்து உள்ளது. டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் கட்டுப்பாடு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகிய மத்திய அரசின் அறிவிப்புக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார்.
வழக்கமாக மத்திய அரசை ஆதரிக்கும் தி.மு.க. திடீர் என்று எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே மத்திய பிரதேச விழாவில் கலந்து கொள்வதற்கு தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
ராஜபக்சேவை இந்தியா வரவேற்பதை தமிழன் தாங்கமாட்டான். இந்திய அரசு ராஜபக்சே வருகையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கருணாநிதி கூறி உள்ளார். மேலும் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தீக் குளித்த விஜயராஜிக்கு அனுதாபம் தெரிவித்த கருணாநிதி, இந்த உயிர் தியாகத்துக்கு பிறகாவது ராஜபக்சே இந்தியா வருவதை மத்திய அரசு அக்கறையோடு சிந்திக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இதற்கிடையே மத்திய அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் நாளை நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதாக அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் என்று கருணாநிதி அறிவித்து இருக்கிறார். இதுவும் அரசியல் பார்வையாளர்களை ஆச்சரிப்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசை அடிக்கடி மிரட்டி வந்த மம்தா நேற்று திடீர் என்று ஆதரவை வாபஸ் பெறுவதாக அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறார். அதைப்போல் தி.மு.க.வும் மத்திய அரசின் முடிவுகளை இப்போது எதிர்க்க தொடங்கி இருக்கிறது. இதனால் தி.மு.க.வும் கூட்டணியை விட்டு விலகுமா? என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire