jeudi 13 septembre 2012

ஆயுதம் கொடுத்தவர் காஷ்மீர் காட்டுக்குள் சிக்கினார்!


கந்தகார் விமான கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபராக தேடப்பட்டு வந்த ஜாவித் அஹ்மத், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர், கிஸ்ட்வார் வனப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது கைது செய்யப்பட்டிருக்கிறார் இவர்.
இந்தியன் ஏர்லைன்ஸ் (தற்போது ஏர்-இந்தியாவுடன் இணைந்துவிட்டது) விமானம் தடம் இலக்கம் IC-814, 1999-ம் ஆண்டு கிருத்துமஸ் தினத்துக்கு முன்தினம் கடத்தப்பட்டது. காத்மன்டு நகரில் இருந்து டில்லி வரவேண்டிய விமானத்தை, டேக்-ஆஃப் ஆகி 40 நிமிடங்களில் கடத்தல்காரர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அமிர்தசரஸ், லாகூர், மற்றும் துபாய் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட விமானம், இறுதியில் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தாஹார் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானம் துபாயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ஒரு பயணி கடத்தல்காரர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
மத்திய அரசு, இந்தியச் சிறைகளில் இருந்த மூன்று தீவிரவாத சந்தேக நபர்களை விடுவித்து, பயணிகளை மீட்டது. விமானத்தை கடத்திய 5 பேரும், தப்பித்துச் சென்றார்கள்.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் ஜாவித் அஹ்மத், விமான கடத்தலுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்திய உளவுத்துறை வைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், ஜாவித் அஹ்மத், 1992-ல் பாகிஸ்தானுக்குச் சென்று, அங்கே தங்கியிருந்தார். தற்போது, நேபாளம் ஊடாக இந்தியா திரும்பி, காஷ்மீர் வனப்பகுதியில் தங்கியிருந்தபோது, கைது செய்யப்பட்டுள்ளார்.


Aucun commentaire:

Enregistrer un commentaire