jeudi 20 septembre 2012

கூடங்குளம்: உண்மை கண்டறியும் குழு விசாரணை இன்றும் நடக்கிறது


ராதாபுரம், செப்.20- கூடங்குளத்தில் காவல்துறை தடியடி சம்பவம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு இடிந்தகரையில் நேற்று விசாரணையை தொடங்கியது. விசாரணை தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) நடக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அருகில் உள்ள இடிந்தகரை கடற்கரையில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகிய சம்பவங்கள் நடந்தன.

இந்தப் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை, துப்பாக்கி சூட்டில் மீனவர் பலி, கடலில் இறங்கி போராடிய மீனவர் சகாயம் சாவு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக 6 பேர் கொண்ட மத்திய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோல்சே பாட்டீல் தலைமையில் மூத்த பத்திரிகையாளர் கல்பனா சர்மா, எழுத்தாளர் ஜோஸ்புரூஸ், வழக்கறிஞர் ரமேஷ் உள்பட 6 பேர் உள்ளனர்.

இந்தக் குழுவினர் நேற்று மாலை 5.30 மணிக்கு இடிந்தகரைக்கு வந்தனர். அவர்கள் இடிந்தகரை, கூடங்குளம், வைராவி கிணறு, சுனாமி காலனி, தடியடி நடந்த கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களையும் சென்று விசாரணை நடத்தினார்கள். இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire