jeudi 20 septembre 2012

மகிந்த சந்திப்பு பிரணாப், மன்மோகனுடன்


பிரணாப்புடன் மகிந்த ராஜபக்ஷ
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை வியாழக்கிழமை மாலை சந்தித்தார்.
முதலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் சந்தித்து மகிந்த வாழ்த்துத் தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜி அமைச்சர் என்ற முறையில் பலமுறை இலங்கைக்கு விஜயம் செய்து மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியிருந்தாலும், அவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், மகிந்த டெல்லி வந்து, பிரணாப் முகர்ஜியை சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரவு விருந்தளித்தார். அப்போது, இரு தலைவர்களும் இலங்கைத் தமிழர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மகிந்த - மன்மோகன் சந்திப்பு
சாஞ்சி பயணம்
இலங்கை ஜனாதிபதி, வெள்ளிக்கிழமை மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்குச் செல்கிறார். அங்கு சர்வதேச புத்தமத பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
அவர் இந்தியா வருதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுகவினர் சுமார் ஆயிரம் பேர், அதன் தலைவர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த சாஞ்சிக்கு வந்தார்கள்.
ஆனால், புதன்கிழமை பிற்பகல் மாநில எல்லையிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
தங்களை சாஞ்சி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி வைகோவும் தொண்டர்களும் தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அதேபோல், மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபால் உட்பட பல நகங்களில் மதிமுகவினர் தங்குவதற்கு ஹோட்டல்களில் இடம் மறுக்கப்படுவதாகவும் அங்கிருக்கும் அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
 


 

Aucun commentaire:

Enregistrer un commentaire