கூடங்குளம் அணு உலைக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், இன்று இடிந்தகரை அருகே கடலில் இறங்கி மனிதச்சங்கிலி அமைத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ஜல சத்தியாகிரகப் போராட்டத்தைப் பின்பற்றி, கூடங்குளம் போராட்டக்காரர்களும் தங்களது போராட்டத்தை புதிய பாணியில் இன்று மாற்றினார்கள். கடற்கரை அருகே, கடலில் இறங்கி பெண்கள் உள்பட ஏராளமான நபர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் தலைவர் சுப. உதயகுமார் இன்றும் போலீஸ் கண்ணில் படாமல் மறைந்திருக்கும் நிலையில், அவர் இல்லாமலே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணு உலையில், எரிபொருள் நிரப்புவதை நிறுத்த வேண்டும், போராட்டக்குழுவின் தலைவர்களைக் கைது செய்வதை நிறுத்த வேண்டும், ஏற்கெனவே கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பகுதியைச் சுற்றிலும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire