’கடந்த ஓராண்டாக அறவழியில் நடந்துகொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. சுதந்திர இந்தியா சந்தித்த மக்கள் திரள் போராட்டங்களில் முக்கியமான ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்திய தேசத்தின் ஆன்மாவை நோக்கி வலிமையான கேள்விகளை எழுப்பிய இந்தப் போராட்டம் இன்று அதிகாரத்தின் வன்கரங்களால் நசுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் விடுதலையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் போராடும் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தார்மீக கடமை என்று நம்புகிறோம்.
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களாகிய நாங்கள் இடிந்தகரை மக்களுடன் நிற்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் அரசாங்கம் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஜனநாயக விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு, அறவழியில் நின்று போராடிய இடிந்தகரை மக்கள் மீது இன்று மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் சர்வாதிகார அடக்குமுறையை ஏவியிருப்பதும் , கடந்த செப்டம்பர் 10 அன்று நடந்த முற்றுகைப் போராட்டத்தில் அந்த மக்கள் மீது கண்ணீர்ப் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் அராஜகமும், குலசேகரப்பட்டினத்தில் அந்தோணி என்கிற மீனவர் பலியாகக் காரணமான துப்பாக்கிச்சூடும் கடும் கண்டனத்துக்குரியது. போராடும் மக்களின் ஒருங்கிணைப்பாளராகிய சுப உதயகுமாரையும் போராட்டக்குழுவினரையும் மனித உரிமைகளுக்கு புறம்பான முறையில் காவல்துறை நடத்துவதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பெண்களின் அதிகபட்ச பங்கேற்புடன் நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் இருப்பதை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் ஆணாதிக்கப் பேச்சுகளுக்கும் எங்களது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
தமிழக அரசும் இந்திய அரசும் இந்த அராஜகப் போக்கை உடனடியாகக் கைவிட்டு போராடும் மக்களின் தார்மீக உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்க முன்வரவேண்டும் என்றும், இடிந்தகரை பகுதி மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்கும் வகையில், காவல்துறையினர் நடத்திவரும் அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் கைவிடவேண்டும் என்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று அணு உலையில் எரிபொருள் நிரப்பும் முயற்சிகளைக் கைவிட்டு, அணு உலையை மூடவேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.”
(மேற்கண்ட குறிப்புடன் ஒப்புதல் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் உங்கள் ஒப்புதல், பெயர், எழுத்தாளரா கலைஞரா பத்திரிகையாளரா என்கிற தகவல் ஆகியவற்றை தயவுசெய்து jkavinmalar@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும்)
போராடும் உரிமை உங்களூக்கும் ..... நன்றி!....
Aucun commentaire:
Enregistrer un commentaire