முஸ்லிம் காங்கிரஸ் தற்போது மக்கள் முன் வந்திருப்பது மக்களை பாதுகாப்பதற்கல்ல தங்களுடைய அமைச்சுப் பதவிகளை பாதுகாப்பதற்கு ஆகும். எனவே முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிப்பதால் எந்தவித பிரயோசனமுமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும்வேட்பாளர்களை ஆதரித்து மட்டக்களப்பு, கறுவப்பங்கேணியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
முதலில் தலதா மாளிகைக்கு குண்டு எறிந்தார்கள். அதன் பின்னர் இந்து ஆலயங்களை உடைத்தார்கள். இப்போது முஸ்லிம் பள்ளிவாயல்களை உடைக்க ஆரம்பித்துள்ளனர். பள்ளிகள் உடைக்கப்படும்போது அது தொடர்பில் பேசுவதற்கு முஸ்லிம் காங்கிரசை சார்ந்த எவரும் முன்வரவில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் ஒன்று செய்தது. அதன் செயலாளர் ஹசன் அலி அவர்கள் தாங்கள் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் தீர்வு காண்போம் என அறிக்கையொன்றை வெளியிட்டார். அவர்கள் அங்கு சென்று என்ன கதைத்தார்கள் என்று கேட்கின்றோம்.
இப்போது அவர்கள் கூறுகின்றார்கள் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருக்கவேண்டும் என்று கூறுகின்றார்கள். அதனால்தான் முஸ்லிம் மக்களிடம் கூறுகின்றோம் அந்த கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டாம் என்று.
அதனால்தான் நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு கூறுகின்றோம் அங்கிருக்கின்றவர்கள் அதாவுல்லா, பௌசி, ஹிஸ்புல்லா போன்றவர்கள் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்க கூடியவர்கள் அல்ல. இதனை நாங்கள் கூறுவதல்ல. முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது. அவர்கள் கூறுவதைப் பார்த்தால் இந்த கூட்டமைப்புக்கு வாக்களிக்க முடியாது.
ஜனாதிபதி முஸ்லிம் காங்கிரசை பற்றி கொழும்பில் அல்ல சம்மாந்துறையில் கூறியுள்ளார். முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர்கள் அமைச்சரவை கூட்டங்களுக்கு வரும்போது அங்கு எலிகளைப்போல் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றார். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கவரவில்லை. எலிகளைப்போல் ஒதுங்கி ஓரத்திலே இருந்தார்கள் என்று ஜனாதிபதி கூறுகின்றார்.
இங்கே முஸ்லிம் காங்கிரஸ் பொய் கூறுகின்றது என்பது உறுதியாகின்றது. ஒரு புறத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது பள்ளிவாயல்கள் உடைப்பு தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேசியிருக்கின்றோம் என்று. ஜனாதிபதி கூறுகின்றார் அவர்கள் என்னுடன் பேசவில்லை எலிகளைப்போன்று அமைதியாக இருந்தார்கள் என்று.
முஸ்லிம் காங்கிரஸ் தற்போது மக்கள் முன் வந்திருப்பது மக்களை பாதுகாப்பதற்கல்ல தங்களுடைய அமைச்சுப் பதவிகளை பாதுகாப்பதற்கு ஆகும். எனவே முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிப்பதால் எந்தவித பிரயோசனமுமில்லை. உங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்படும் போது அதைப்பற்றி கதைப்பதற்கு இருக்கின்ற ஒரேயொரு கட்சி ஐக்கியதேசியக்கட்சி தான். இங்கு காணிகள் கொள்ளையிடப்படுகின்றன. இன்று கரையோரப்பிரதேசங்களில் இருக்கின்ற அத்தனை காணிகளையும் அரசு கைப்பற்றி தங்களுக்கு சொந்தமான மோசடிக்காரர்களுக்கு வழங்கியிருக்கின்றது. அவர்களுக்கா நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள்.
மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடமிருந்து பறித்தெடுத்திருக்கின்றார்கள். இதற்கு ஒரு தேசிய திட்டம் தேவை.
கூட்டமைப்பினர் இனத்துவேஷத்தை தூண்டிவிடப் பார்க்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தை தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று துண்டுதுண்டாக பிரிக்கப்பார்க்கி;ன்றார்கள்.
நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் என்று கூறுகின்றோம். இலங்கையர்கள் என்று கூறும்போது அனைவருடைய உரிமைகளும் உரித்துகளும் அங்கு உள்ளடக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சி மாகாணசபையை கைப்பற்றுகின்ற போது காணிக்கொள்ளை தொடர்பாக தனியானதொரு விசாரணை நடத்தி தனிச்சட்டத்தை உருவாக்கி மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுத்தர இருக்கின்றோம். தமிழ் முஸ்லிம் மக்களுடைய காணிகளை கொள்ளையடிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடங்கொடுக்கப் போவதில்லை. இந்த மாகாணத்தில் வாழ்கின்ற தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் அனைவரையும் சமனாக மதிப்பதற்குரிய செயற்றிட்டங்கள் எங்களிடம் உண்டு.
எங்கள் சட்டங்களிலுள்ள அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேசத்துடன் செய்துகொள்ளப்பட்ட சிவில் மற்றும் ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் செயற்படுத்துவதற்கும் நியதிச்சட்டங்களை கொண்டுவருவதன் மூலமாக கிழக்கு மாகாணத்திலே தனியான நிர்வாக அலகொன்றை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம். அவற்றுக்குத் தேவையான சகல அதிகாரங்களையும் நாங்கள் வழங்குவோம். என தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire