vendredi 4 janvier 2013

50,000 இந்திய வம்சாவளியினர் "மலேசியாவில் பள்ளிகளில் சேர முடியாத நிலை


மலேசியாவில் இந்த ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் இவ்வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் சுமார் 50,000 இந்திய வம்சாவளியினர் பள்ளிகளில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது.
அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தாலேயே அவர்களால் பாடசாலைகளில் அனுமதி பெற முடியவில்லை என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.
பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கோரி போராடுபவர்கள்

மலேசியாவில் சுமார் மூன்று லட்சம் இந்திய வம்சாவளியினர் நாடற்ற நிலையில் வசிப்பதாகவும், அவர்களை அரசு திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கிறது எனவும் தேசிய மக்கள் நீதிக்கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என் சுரேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார்.
இம்மக்கள் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து பிறப்புச் சான்றிதழும் அடையாள அட்டையும் மறுக்கப்படுகிறது என்றும், இது சட்டத்துக்கு விரோதமானது எனவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.பல ஆண்டுகளாக, இந்திய வம்சாவளி மக்களில் நாடற்ற நிலையில் இருக்கும் பெருபான்மையானவர்கள் இந்துக்கள் என்று கூறும் சுரேந்திரன் அதன் காரணமாகவே அரசு திட்டமிட்ட வகையில் மதரீதியான புறக்கணிப்பை செய்கிறது எனவும் சுரேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார்.

எனினும் இந்தோனீசியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு உடனடியாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் அரச சலுகைகளை பெறுகிறார்கள் எனவும், அவர்களின் வாக்குகளை குறி வைத்தே அரசு இப்படி செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்கட்சிகளால் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியும், வீதிகளில் இறங்கியும் போராட முடியுமே தவிர வேறு ஏதும் செய்ய முடியாத நிலைமையே மலேசியாவில் நிலவுகிறது எனவும் அவர் கூறுகிறார்.
தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக இந்திய வம்சாவளியினர் குற்றச்சாட்டு
ஆனால் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அரசுடன் இணைந்து செயல்பட எதிர்கட்சிகள் தயாராக இருக்கும் போது, மூன்று லட்சம் மக்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை கூட அரசு ஏற்க மறுக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.
இந்த விஷயம் தொடர்பில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு இம்மாதம் ஒன்பதாம் தேதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும்,அந்தத் தீர்ப்பு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும் எனவும் சுரேந்திரன் நம்பிக்கை வெளியிட்டார்.
விரைவில் மலேசிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடாற்ற நிலையில் உள்ள மக்களின் நிலைமையானது தேர்தல் சமயத்தில் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும் சூழல் உள்ளது என்றும் பரவலாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire